சென்னை கிங்ஸ் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

ஐ.பி.எல்., தொடர் அறிமுகமானபோது சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு ரசிகர்களிடம் இருந்த வரவேற்பும் ஆதரவும், தற்போது குறையத்துவங்கியுள்ளது. மற்ற ஏழு அணிகளுடன் ஒப்பிடும்போது, சென்னை அணிதான் மிக மோசமாக இருக்கிறது. இதற்குகாரணம் என்ன?


கிரிக்கெட் புக்கிகளால் மிகைப்படுத்தபட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் முதலாம் ஆண்டு பைனல் வரை வந்து தோற்றது. இரண்டாம் ஆண்டு அரையிறுதி வரை எட்டி பார்த்தது. இம்முறை அரையிறுதிக்கு முன்னேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


இன்று சென்னையில் நடக்கும் லீக் போட்டியில், கும்ளே தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வி அடைந்த சென்னை அணி, இம்முறை வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.



தோனி பிரச்னை:


சென்னை சூப்பர் கிங்ஸ்சை பொறுத்தமட்டில் அதிர்ஷ்டக்கார கேப்டன், தொட்டது துலங்கும் என்று வர்ணிக்கப்பட்ட தோனி தான் இப்போது பிரச்னைக்கு காரணமாக தெரிகிறார்.


சென்னை அணியின் தற்போதைய செயல் பாடு குறித்து அடையாளம் காட்ட விரும்பாத இளம்வீரர் ஒருவர், சொன்னது இதுதான்:


தோனியின் தன்னிச்சையான செயல்பாடும், யாருக்கும் கட்டுப்படாத அவரது நடவடிக்கை பற்றி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், அணி உரிமையாளர்களிடம் தெரிவித்தும் எவ்வித பலனும் இல்லை. முறையாக பயிற்சிக்கு வருவதில்லை என புகார்கள் முணுமுணுக்கப் பட்டுவருகின்றன.


அணியில் உள்ள தமிழக வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது இல்லை. ரஞ்சியில் சாதித்த கணபதி சிறந்த ஆல்-ரவுண்டர், அனிருத் ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு வாய்ப்பே அளிக்கப்படவில்லை. அணியில் உள்ள மூத்த வீரர்களான ஹைடன், முரளிதரன், மார்கல்ஆகியோரைசரிவர நடத்துவது இல்லை.


டிரசிங் ரூமில் கூட ஆலோசனை செய்வது இல்லை. பயிற்சியாளர் பிளமிங், 12வது ஆட்டக்காரர் மூலம் சொல்லி அனுப்பும் ஆலோசனைகளை காது கொடுத்து கேட்பதில்லை என குற்றச்சாட்டுகள் தோனியின் மீது அடுக்கப்படுகின்றன.


இந்தாண்டுடன் வீரர்களுக்கான ஏல உரிமை முடிகிறது. அடுத்த சீசனுக்கு அவர் மற்றொரு அணிக்கு பேசப்பட்டு விட்டதால் ஜகா வாங்குவதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இன்னும் இருக்கும் ஏழு ஆட்டங்களில் 6ல் வென்றால் தான் அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற நிலையில் சென்னை அணி உள்ளது. மற்ற ஏழு அணியின் உரிமையாளர்களுக்கு கிரிக்கெட் புதிது. சென்னை அணியை நடத்தும் இந்தியா சிமென்ட்ஸ் நிர்வாகத்திற்கு 50 ஆண்டுகள் கிரிக்கெட் நடத்திய அனுபவம் இருந்தும் திணறுவது ஏன் என்று தெரியவில்லை.


குறிப்பாக சென்னையில் நடக்கும் ஆட்டங்களிலாவது சென்னை அணி சிறப்பாக விளையாடுவதற்கு அணி உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.



லாபம் அமோகம் :


ஐ.பி.எல்., அமைப்பில் அங்கம் வகிக்கும் அணி உரிமையாளர்களுக்கு, 'டிவி' ஒளிபரப்பு உரிமையின் மூலம் அவர்கள் போட்ட முதலீடுக்கு மேல் லாபம் கிடைத்து விட்டது. மூன்றாண்டுகளில் கிடைத்த வருமானத்தை கணக்கு காட்டி, பங்குச்சந்தையில் பட்டியலிடலாமா என்ற ரீதியில் சென்னை, பஞ்சாப் அணிகள் கணக்குபோடத்துவங்கிவிட்டன. இதனால், அணியில் விளையாடக்கூடிய வீரர்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுவதில்லை.

சானியா-சோயப் மாலிக் திருமணம்

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.


சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார் சானியா மிர்சா. கடந்த 2009, ஜூலை 10ம் தேதி சானியா மற்றும் அவரது குழந்தை பருவ நண்பரான முகமது சோஹ்ராப் மிர்சா இடையே திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடந்தது.


இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஜனவரி மாதம் திடீரெனநிச்சயதார்த்தம் ரத்து செய்யப் பட்டது.


இந்நிலையில் நேற்று பாகிஸ்தானில் உள்ள தனியார் டிவி சேனலில், இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்க இருப்பதாக, செய்திகள் வெளியாகின.


இதுகுறித்து அந்த சேனலில் வெளியான செய்தியில், ''சோயப் மாலிக்கின் தாயார், ஐதராபாத்தில் உள்ள சானியாவின் பெற்றோரை சந்தித்து, மாலிக்-சானியா திருமணம் குறித்து உறுதி செய்துள்ளார் என்றும். வரும் ஏப்ரல் 16 அல்லது 17ம் தேதி லாகூரில் இவர்களது திருமண வரவேற்பு நடக்க இருக்கிறது,'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


2வது திருமணம்?


பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக், கடந்த 2002ம் ஆண்டு தொலைபேசி மூலம் ஐதராபாத்தில் உள்ள ஆயிஷா சித்திக் என்பவருடன் நிச்சயம் மேற் கொண்டு, பின்னர் அதே ஆண்டு ஜூன் 3ம் தேதி திருமணம் செய்து கொண்டார் என தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால், சோயப் மாலிக் இதனை மறுத்திருந்தார்.

பந்து வீச தாமதம்: சங்ககராவுக்கு தடை

ஐ.பி.எல்., தொடரில் மூன்றாவது முறையாக தாமதமாக பந்துவீசிய, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் சங்ககராவுக்கு, ரூ. 23 லட்சம் அபராதத்துடன், ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் நேற்று முன்தினம் மொகாலியில் நடந்த லீக் போட்டியில் பஞ்சாப், கோல்கட்டா அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில், தோல்வியடைந்து ஏமாற்றியது.

இதுவரை விளையாடிய ஆறு போட்டியில், ஒன்றில் மட்டுமே வெற்றி கண்ட பஞ்சாப் அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.

மூன்றாவது முறை:

இப்போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, தாமதமாக பந்துவீசியது. இதன்மூலம் பஞ்சாப் அணி, இத்தொடரில் மூன்றாவது முறையாக தாமதமாக பந்துவீசிய குற்றத்துக்கு ஆளானது. முன்னதாக டில்லி, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக பஞ்சாப் அணி தாமதமாக பந்துவீசியது.

இதன்மூலம் பஞ்சாப் அணி கேப்டன் சங்ககராவுக்கு ரூ. 23 லட்சம் அபராதம் மற்றும் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர், நாளை மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க மாட்டார்.

மற்ற வீரர்களுக்கு தலா ரூ. 10 லட்சம் அபாரதம் விதிக்கப்பட்டது. இத்தொடரில் முன்னதாக கங்குலி, சச்சின், காம்பிர் உள்ளிட்டோர் தலா ரூ. 10 லட்சம் அபராதம் செலுத்தி உள்ளனர்.

குவியும் அபராதம்

ஐ.பி.எல்., தொடரில், தாமதமாக பந்துவீசிய குற்றத்துக்காக செலுத்தப்படும் அபராதத் தொகை குவிகிறது. முன்னதாக கங்குலி (கோல்கட்டா), சச்சின் (மும்பை), காம்பிர் (டில்லி) அணி கேப்டன்கள் தலா ரூ. 10 லட்சம் அபராதம் செலுத்தினர்.

முதன்முதலில் பஞ்சாப் அணி, டில்லி அணிக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்துவீசியதால், கேப்டன் சங்ககரா மட்டும் ரூ. 10 லட்சம் அபராதம் செலுத்தினார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் இந்த தவறை செய்ததால், சங்ககரா ரூ. 20 லட்சம், மற்ற அணி வீரர்கள் தலா ரூ. 5 லட்சம் அபராதம் செலுத்தினர்.

கோல்கட்டா அணிக்கு எதிராக தாமதமாக பந்துவீசியது 3வது முறை என்பதால், சங்ககரா ரூ. 23 லட்சம், மற்ற வீரர்களுக்கு தலா ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஜடேஜாவுக்கு தடை நீடிப்பு: மும்பை அணிக்கு ஐ.பி.எல். எச்சரிக்கை

ஐ.பி.எல். போட்டியில் ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாட ஒப்பந்தமாகி இருந்தார். 2008-2009ம் ஆண்டு போட்டியில் அந்த அணிக்காக விளையாடினார்.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி தொடங்கும் முன்பு அவர் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பேரம் பேசினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திடம் கலந்து ஆலோசிக்காமல் அவர் இப்படி செய்தார். வீரர்களின் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் ஆட ஜடேஜாவுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அவர் அப்பீல் செய்தார். இதை விசாரிக்க டெல்லி கிரிக்கெட் சங்க தலைவரும், முன்னணி வக்கீலுமான அருண் ஜேட்லியை ஐ.பி.எல். அமைப்பு நியமித்தது.

அருண்ஜேட்லி தனது அறிக்கையை ஐ.பி.எல். அமைப்பிடம் தாக்கல் செய்துள்ளார். ஜடேஜாவின் தடை செல்லும் என்று அறிக்கையில் குறிப்பட்டு உள்ளார்.


அதே நேரத்தில் ஜடேஜாவிடம் பேச்சு வார்த்தை நடத்தியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

யூசுப் பதானை திட்டிய சைமண்ட்ஸ்

சைமண்ட்ஸ் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர், தன்னை திட்டியதாக யூசுப் பதான் குற்றம்சாட்டியுள்ளார்.


ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சைமண்ட்ஸ். ஒழுங்கீனத்துக்கு பெயர் போன இவர், எதிரணி வீரர்களை வார்த்தையால் திட்டி, சர்ச்சை கிளப்புவார். கடந்த 2008ல் நடந்த சிட்னி டெஸ்டில் ஹர்பஜன் மற்றும் சைமண்ட்ஸ் இடையே மோதல் ஏற்பட்டது. தற்போதை ஐ.பி.எல்., தொடரில் யூசுப் பதானை திட்டி, பிரச்னை கிளப்பியுள்ளார்.


நேற்று முன்தினம் ஆமதாபாத்தில் நடந்த போட்டியில் ராஜஸ்தான், டெக்கான் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் வீரர் யூசுப் பதான், பேட்டிங் செய்ய வந்தபோது, டெக்கான் அணிக்காக விளையாடும் சைமண்ட்ஸ் வார்த்தையால் திட்டியுள்ளார். இதுகுறித்து யூசுப் பதான் கூறியது:

பொதுவாக எதிரணியினர் ஏதாவது தூண்டும் வகையில் செயல்பட்டால் அதுவே, நாம் சிறப்பாக விளையாட வழிவகுக்கும். டெக்கான் அணிக்கு எதிராக நான் "பேட்டிங்' செய்ய களமிறங்கிய போது, சைமண்ட்ஸ் என்னைப் பார்த்து திட்டினார். இதுவே எனக்கு தூண்டுதலாக அமைய, 34 பந்துகளில் 73 ரன்கள் விளாசினேன். இருப்பினும் சைமண்ட்ஸ் மீது புகார் செய்யும் எண்ணம் எதுவும் இல்லை.


டெக்கான் அணிக்கு எதிரான எனது ஆட்டம், போட்டியை பார்க்க வந்திருந்த எனது பெற்றோருக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும் என நம்புகிறேன். தவிர, ஆடுகளம் பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைத்தது. ரசிகர்கள் ஆதரவும் பெரும் ஊக்கமாக இருந்தது.
இவ்வாறு யூசுப் பதான் கூறினார்.

பி.சி.சி.ஐ.,க்கு போட்டியாக ஐ.பி.எல்.,

பி.சி.சி.ஐ.,க்கு போட்டியாக ஐ.பி.எல்., அமைப்பு வளர்ச்சி அடைந்து வருகிறது. ஒளிபரப்பு உரிமை மூலம் மட்டும் நாள் ஒன்றுக்கு 6 கோடி ரூபாய் வருமானம் கிடைப்பதாக ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) சார்பில் இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) துவங்கப்பட்டது. தற்போது ஐ.பி.எல்., மூன்றாவது "டுவென்டி-20 தொடர் வெற்றிகரமாக நடக்கிறது. இரண்டு புதிய அணிகளுக்கான ஏலம் மூலம் சமீபத்தில் ஐ.பி.எல்., அமைப்புக்கு 3 ஆயிரத்து 235 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது.

தவிர, இம்முறை 5 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, தாய் அமைப்பான பி.சி.சி.ஐ.,க்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது குறித்து லலித் மோடி கூறியது:

ஐ.பி.எல்., அமைப்பு வளர்ச்சி அடைந்து வருவது உண்மை தான். இதனால் பி.சி.சி.ஐ.,க்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. உதாரணமாக ஒளிபரப்பு உரிமை மூலம் எங்களுக்கு நாள் ஒன்றுக்கு 6 கோடி ரூபாய் தான் வருமானம் கிடைக்கிறது.

அதே நேரத்தில் போட்டி நடக்கும் காலங்களில் பி.சி.சி.ஐ.,க்கு 32.5 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. எனவே, ஐ.பி.எல்., அமைப்பை காட்டிலும் பி.சி.சி.ஐ., தான் முன்னிலையில் உள்ளது. அதனை நெருங்க முடியாது. ஐ.பி.எல்., வருமானத்தில் பெரும்பகுதி அணிகளுக்கு செல்கிறது. ஒரு பகுதி பி.சி.சி.ஐ.,க்கு கொடுக்கப்படுகிறது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் தற்போதைய பி.சி.சி.ஐ., அளவுக்கு ஐ.பி.எல்., முன்னேற்றம் காணும். அப்போது உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பான பி.சி.சி.ஐ., இன்னும் அதிகமான வளர்ச்சி கண்டிருக்கும். நாங்கள் பி.சி.சி.ஐ.,யுடன் போட்டியிடவில்லை.

மற்ற பொழுபோக்கு நிறுவனங்களை தான் சமாளிக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் ஐ.பி.எல்., போட்டிகள் ஒளிபரப்பாகும் நேரத்தில் "டிவிக்களில் பொழுபோக்கு நிகழ்ச்சிகள் அதிகம் காண்பிக்கப்படுகின்றன. இவற்றை முந்தி தற்போது அதிகம் பேர் பார்க்கக்கூடியதாக ஐ.பி.எல்., போட்டிகள் உருவாகியுள்ளன.

இவ்வாறு லலித் மோடி கூறினார்

காம்பிருக்கு பி.சி.சி.ஐ., எச்சரிக்கை

காம்பிர், நெஹ்ரா முன் அனுமதி பெறாமல் இலங்கை சென்று சிகிச்சை மேற்கொண்டது தொடர்பாக சர்ச்சை வெடித்துள்ளது.

இருவரையும் பி.சி.சி.ஐ., கடுமையாக எச்சரித்துள்ளது. தவிர, இது குறித்து விளக்கம் அளிக்குமாறு டில்லி டேர்டெவில்ஸ் அணியின் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


மூன்றாவது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில், டில்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக காம்பிர் உள்ளார். மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது, இவரது பின் தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது.


இதே போல டில்லி அணியின் வேகப்பந்துவீச்சாளரான நெஹ்ராவுக்கு, பயிற்சியின் போது விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இருவரும், இலங்கை வீரர் தில்ஷன் ஆலோசனைப்படி கொழும்பு சென்று, டாக்டர் எலியந்தா ஒயிட்டிடம், ஆயுர்வேத முறையில் சிகிச்சை எடுத்துக்கொண்டனர். பின் இந்தியா திரும்பினர். தங்களது இலங்கை பயணம் தொடர்பாக இவர்கள், இந்திய கிரிக்கெட் போர்டிடம்(பி.சி.சி.ஐ.,) முன் அனுமதி பெறவில்லை.


டில்லிக்கு நோட்டீஸ்: இதனால் பி.சி.சி.ஐ., நிர்வாகத்தினர் ஆத்திரமடைந்தனர். பி.சி.சி.ஐ., சம்பள ஒப்பந்த பட்டியலில் காம்பிர் "ஏ' பிரிவில்(ரூ. 60 லட்சம்), நெஹ்ரா "பி' பிரிவில்(ரூ. 40 லட்சம்) உள்ளனர். ஒப்பந்த பட்டியலில் உள்ள இவர்கள் அனுமதி பெறாமல் இலங்கை சென்றதால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.


இது குறித்து பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,""சிகிச்சை எடுத்துக் கொள்ள இலங்கை செல்வதற்கு முன் சம்பந்தப்பட்ட இரு வீரர்களும் எங்களுக்கு தகவல் கொடுத்திருக்க வேண்டும். அனுமதி பெறாமல் சென்றதால், இருவரையும் எச்சரித்துள்ளோம். டில்லி அணியின் நிர்வாகத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்,''என்றார்.

அப்ரிதி கைகொடுப்பார்: அக்ரம்

பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சயீத் அப்ரிதி, "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் சாதிப்பார்,'' என முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


வெஸ்ட் இண்டீசில், "டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் (ஏப். 30-மே 16) தொடர் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சயீத் அப்ரிதி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியதாவது: பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாகும் தகுதி, அப்ரிதியிடம் நிறைய உள்ளது. "டுவென்டி-20' போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் இவர், உலக கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் அந்தஸ்தை தக்கவைத்துக்கொள்ள போராடுவார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்குவார் என நம்புகிறேன்.

சமீபத்தில் இவர் பந்தை கடித்து ஏற்படுத்திய சர்ச்சையை மறந்துவிடுவது நல்லது. ஏனெனில் இது, உலக கோப்பை தொடரில் இவரது இயல்பான ஆட்டத்தை, வெளிப்படுத்த தடங்கலாக அமையலாம்.


உலக கோப்பை தொடரில், அப்ரிதியின் வெற்றிக்கு புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள வக்கார் யூனிஸ் கைகொடுப்பார். ஏனெனில், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாகவே, வக்காரிடம் இருந்தது. இதனால், அணியின் வெற்றிக்கு இவரது பங்களிப்பு நிச்சயம் கைகொடுக்கும்.

பாகிஸ்தான் அணியினர், உலக கோப்பை தொடருக்கு முன், உடல் மற்றும் மன ரீதியாக முழுதகுதியுடன் இருக்க வேண்டும். ஏனெனில், "டுவென்டி-20' போட்டிகளில் சாதிப்பது என்பது எளிதான காரியமல்ல.

இவ்வாறு அக்ரம் கூறினார்.

ஐ.பி.எல்., மதிப்பு ரூ. 18 ஆயிரம் கோடி!

ஐ.பி.எல்., அமைப்பு வர்த்தக ரீதியாக அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. இதன் நிறுவன மதிப்பு இந்த ஆண்டு 18 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் இடம் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்சின் மதிப்பு அதிகபட்சமாக ரூ. 220 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) அமைப்பு கடந்த 2008ல் துவங்கப்பட்டது. இதன் நிறுவன மதிப்பு ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. தற்போதைய வருமானம், எதிர்காலத்தில் கிடைக்கும் வருமானம், சர்வதேச சந்தையில் உள்ள அந்தஸ்து போன்றவற்றை அடிப்படையாக கொண்டு நிறுவனத்தின் மதிப்பு கணக்கீடு செய்யப்படுகிறது.

இதன்படி கடந்த ஆண்டை காட்டிலும் ஐ.பி.எல்., அமைப்பின் மதிப்பு இரு மடங்காக உயர்ந்து, 18 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.

சென்னை முதலிடம்: சென்ன சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டு நிறுவன மதிப்பீட்டு பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. இந்த அணியின் மதிப்பு அதிகபட்சமாக 220 கோடி ரூபாயை எட்டியுள்ளது. பாலிவுட் நட்சத்திரம் ஷாருக் கானின் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி இரண்டாவது இடம்(ரூ. 210 கோடி) பெறுகிறது.

நடிகை ஷில்பா ஷெட்டியின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்றாவது இடத்தை(ரூ. 205 கோடி) பெற்றுள்ளது. அடுத்த இடங்களில் தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்(ரூ. 190 கோடி), ரிலையன்ஸ் முகேஷ் அம்பானியின் மும்பை இந்தியன்ஸ்(ரூ. 185 கோடி), டில்லி டேர்டெவில்ஸ் (ரூ. 184 கோடி), நடிகை பிரித்தி ஜிந்தாவின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (ரூ. 164 கோடி), டெக்கான் சார்ஜர்ஸ்(ரூ. 156 கோடி) அணிகள் உள்ளன.


எகிறும் வருமானம்: சமீபத்திய ஏலத்தில் கொச்சி(ரூ. 1,533 கோடி), புனே(ரூ. 1,702 கோடி) ஆகிய இரண்டு புதிய அணிகள் அதிக விலைக்கு வாங்கப்பட்டன. இதனால் ஐ.பி.எல்., அமைப்புக்கு அதிரடியாக 3 ஆயிரத்து 235 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது.

ஒவ்வொரு போட்டிக்கும் விளம்பரங்கள் அதிகம் வருவதால், இந்திய விளம்பர உலகிற்கு மட்டும் ஆயிரம் கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பும் சோனி "டிவி'க்கு இந்த ஆண்டு விளம்பரம் மூலம் 700 கோடி ரூபாய் கிடைக உள்ளது. இப்படி, எங்கு பார்த்தாலும் "கோடிகள்' புரள்வதால், ஐ.பி.எல்., மற்றும் அதன் அணிகளின் நிறுவன மதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

சர்வதேச விளையாட்டு வர்த்தகத்தில் பாரம்பரியமிக்க இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து அமைப்பின் நிறுவன மதிப்பு ரூ. 60 ஆயிரம் கோடியாக உள்ளது. ஐ.பி.எல்., அமைப்பு துவங்கிய மூன்று ஆண்டுகளில் 18 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது ஆச்சரியம் அளிக்கும் விஷயமே.

பி.டி.உஷா ஆதங்கம்

வர்த்தக நோக்கத்தில் நடக்கும் ஐ.பி.எல்., தொடரால், இந்தியாவில் மற்ற விளையாட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக முன்னாள் நட்சத்திரங்கள் எச்சரித்துள்ளனர். "தங்க மங்கை' பி.டி.உஷா கூறுகையில்,""ஐ.பி.எல்., அமைப்பில் பணத்தை முதலீடு செய்தவர்கள் லாபத்தை மட்டுமே இலக்காக கொண்டுள்ளனர். இதனால் விளையாட்டு மீதான ஆர்வம் சுத்தமாக தொலைந்து விட்டது. தடகளத்துக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சிகளுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

முன்னாள் நீச்சல் சாம்பியன் வில்சன் செரியன் கூறுகையில்,""ஐ.பி.எல்., என்பது விளையாட்டல்ல; வெறும் வியாபாரம். இதனால் சந்தோஷ் கால்பந்து உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வாலிபால் மைதானங்களில் கூட கிரிக்கெட் விளையாடுவதை காண முடிகிறது. இந்த நிலை மாற வேண்டும்,''என்றார்.

ஜடேஜா தடை நீக்கம்

ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க, ரவிந்திர ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து டில்லி கிரிக்கெட் சங்க தலைவர் அருண் ஜெட்லி உடனடியாக விசாரிக்க உள்ளார்.

இதையடுத்து ஜடோஜா மீதான தடை விலக்கிக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய, இந்திய இளம் "ஆல் ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜாவின் ஒப்பந்த காலத்தை, அணி நிர்வாகம் புதுப்பிக்கவில்லை. இதனால் இவர், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அனுமதியில்லாமல், வேறு அணி உரிமையாளர்களை தொடர்பு கொண்டதால், ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க, ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டார்.

தடைகுறித்து ராஜஸ்தான் நிர்வாகம், ஐ.பி.எல்.,க்கு எழுதிய கடிதத்தில்,"" ஜடேஜாவின் செயலுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியினர் பின்னணியில் இருந்திருக்கலாம். அவர்கள், இவருக்கு ஆசை காட்டியதால் இப்படி செயல்பட்டார்,'' என தெரிவித்து இருந்தது.

இதுகுறித்து ஐ.பி.எல்., நிர்வாகக்குழுவில் விசாரிக்கப்பட்டது. பின், ஜடேஜாவுக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் உள்ள தொடர்பு குறித்து உடனடியாக விசாரித்து, வரும் 25ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, டில்லி கிரிக்கெட் சங்க தலைவர் அருண் ஜெட்லியை, ஐ.பி.எல்.,நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதனிடையே தற்போது நடக்கும் மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் இந்த அணி மோசமாக விளையாடி வருகிறது. இதுகுறித்து ராஜஸ்தான் அணியின் முக்கிய அதிகாரி மோரிஸ் கூறுகையில்,"" ஜடேஜா மீண்டும் அணிக்கு திரும்பினால், சிறப்பாக செயல்படலாம் என நம்புகிறோம்,'' என்றார்.

30 வருட சாதனைக்கு சொந்தக்காரர்

தேசிய மற்றும் ஆசிய அளவிலான நீளம் தாண்டுதல் போட்டிகளில் 30 ஆண்டுகள் சாதனைக்கு சொந்தக்காரர் பிரபல தடகள வீரர் டி.சி.யோகனன்.

இவர் கேரள மாநிலம் கொல்லம் அருகேயுள்ள குண்டாரா கிராமத்தில் 1947-ம் ஆண்டு மே 19-ம் தேதி பிறந்தார். சிறுவயதிலேயே நீளம் தாண்டுதலில் அதீத ஆர்வம் கொண்டிருந்த யோகனன், கால்வாயை தாண்ட முயற்சித்தபோது தவறி விழுந்தார்.

அதைப்பார்த்த அவரது தந்தை கால்வாயைத் தாண்டினால் எலுமிச்சை பழச்சாறு தருவதாக அறிவித்தார். அப்போது வெற்றிகரமாக கால்வாயைத் தாண்டினார் யோகனன்.

அது முதற்கொண்டு நீளம் தாண்டுதலில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். முதன்முறையாக பெங்களூரில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான "பிரசன்ன குமார் தடகள போட்டி'யில் நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் பிரிவுகளில் பங்கேற்று தங்கப் பதக்கங்களை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அதைத்தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களுக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. ஆனால் யோகனனோ, டாடா என்ஜினீயரிங் அண்ட் லோகோமோடிவ் நிறுவனத்தை (டெல்கோ) தேர்வு செய்தார்.

1970-ல் தேசிய தடகள போட்டியில் நீளம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்றார். அதற்கு அடுத்த ஆண்டு பாட்டியாலா தடகள போட்டியில் நீளம் தாண்டுதலில் 7.60 மீட்டர் தூரம் தாண்டி தேசிய அளவில் புதிய சாதனை படைத்தார்.

அதைத்தொடர்ந்து சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான தடகள போட்டியில் நீளம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதல் பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

1973-ல் தேசிய அளவிலான போட்டியில் 7.72 மீட்டர் தூரம் தாண்டி அதிக தூரத்தை தாண்டியவர் என்ற தேசிய சாதனையைப் படைத்தார். 1974-ல் தெஹ்ரானில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதலில் 8.07 மீட்டர் தூரம் தாண்டி வரலாற்றுச் சாதனை படைத்தார். இவரின் இந்த இரு சாதனைகளும் கடந்த 30 ஆண்டுகளாக தகர்க்கப்படாமல் உள்ளன.

1975-ல் ஜப்பானில் நடைபெற்ற தடகள போட்டிகளில் பங்கேற்ற யோகனன் தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். 1976-ல் மாண்ட்ரியல் ஒலிம்பிக்கில் பங்கேற்றதே அவரது கடைசி தடகள போட்டியாகும். விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான அர்ஜுனா விருது உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்

எட்டிப்பறக்குது ஐ.பி.எல்.,வர்த்தகம்; புனே அணி ரூ. 1, 700 கோடி; கொச்சி அணி ரூ. 1, 533 கோடி

ஐ.பி.எல்., சீசன் 4 டுவென்டி-20 கிரிக்கெட் அணிகளில் புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த புதிய அணிகள் இது வரை இல்லாத அளவுக்கு அமோக விலைக்கு ஏலம் போயுள்ளது.


சென்னையில் நடந்த இந்த ஏலத்தில் 2 அணிகளும் சேர்த்து ஐ.பி.எல்., அணிகள் 10 ஆக உயர்ந்துள்ளது. இது வரை ஐ.பி.எல்., அணியின் அதிகபட்ச விலை மும்பை இந்தியன்ஸ் அணி ( ரூ. 800 கோடிக்கு ) ஏலம் போனது. தற்போது ஆயிரத்து 500 கோடியை தாண்டி போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

94 போட்டிகளைக் கொண்ட ஐ.பி.எல்., சீசன் 4 டுவென்டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 2 புதிய அணிகள் குறித்த விபரத்தை ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி சென்னையில் இன்று வெளியிட்டார். சுமார் 5 நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன.


ஆனால் ஏலத்தின் முடிவில் சகாரா நிறுவனம் புனே அணியையும், ரென்டிஸ்வோஸ் நிறுவனம் ‌கொச்சி அணியையும் வென்றதாக அறிவிக்கப்பட்டது. புனே, கொச்சி தவிர ஆமதாபாத், நாக்பூர், கான்பூர், தர்மசாலா, விஷக், ராஜ்கோட், கட்டாக், பரோடா, இந்தூர், குவாலியர் உள்ளிட்ட அணிகளும் ஏலத்தில் கலந்து கொண்டன.

இதில் சகாரா நிறுவனம் புனே அணியை 370 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும், (ரூ.1, 702 கோடி), ரென்டிஸ்வோஸ் நிறுவனம் கொச்சி அணியை 333.33 மில்லியன் டாலருக்கும் (ரூ.1, 533 கோடி) ஏலத்தில் எடுத்தன.


இவர்களுக்கு அடுத்தபடியாக ஏலத்தில் அதிக தொகையை அறிவித்த நிறுவனம் வீடியோகான் என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோகான் நிறுவனத்துடன் இணைந்து பாலிவுட் நட்சந்திரங்களான சைஃப் அலிகான் மற்றும் கரீனா கபூர் இணைந்து புதிய அணிகளை வாங்க முயற்சி மேற்கொண்டனர் ஆனால் முடியாமல் போனது.

பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்பார்கள் :


ஏலம் முடிந்த பின்னர் ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி கூறுகையில் ; இந்த ஒப்பந்தம் அடுத்த 10 ஆண்டுகள் வரை நீடிக்கும் எனவும், ஐ.பி.எல்., தொடரில் 10 அணிகளுக்கு மேல் சேர்க்கப்படாது எனவும், ஐ.பி.எல்., போட்டிகளை வெளிநாடுகளில் நடத்தும் எண்ணம் எதுவும் இல்லை என்றார்.


2011ம் ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல்., சீசன் 4 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்பார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.லலித் மோடி தெரிவித்தார்.

யூனிஸ், யூசுப், மாலிக் நீக்கம்: பாக்., அதிரடி

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் (பி.சி.பி.,), ஒப்பந்தப் பட்டியலிலிருந்து, யூனிஸ் கான், முகமது யூசுப், சோயப் மாலிக், அக்தர் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் ஆஸ்திரேலிய தொடரில் சொதப்பிய பாகிஸ்தான் அணி வீரர்கள் மீது, பி.சி.பி., கடுமையான நடவடிக்கை எடுத்தது. யூனிஸ் கான், முகமது யூசுப் ஆகியோர் வாழ்நாள் தடையை சந்தித்துள்ளனர். சோயப் மாலிக், ராணா ஆகியோருக்கு ஒரு ஆண்டு தடை வழங்கப்பட்டுள்ளது.

இத்தொடரில் பந்தை கடித்து சேதப்படுத்திய அப்ரிதிக்கு ரூ. 30 லட்சமும், கம்ரான், உமர் அக்மலுக்கு ரூ. 50 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் வீரர்களுக்கான ஒப்பந்தப்பட்டியலை நேற்று வெளியிட்டது, அந்நாட்டு கிரிக்கெட் போர்டு. ஏ, பி, சி என மூன்று பிரிவுகளில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அதிரடி நீக்கம்:

தடையை சந்தித்துள்ள முன்னாள் கேப்டன்களான யூனிஸ் கான், முகமது யூசுப், சோயப் மாலிக் மூவரும் இப்பட்டியலில் இடம் பெறவில்லை. வேகப்பந்து வீச்சாளர்களான அக்தர், தன்வீர், ராணா ஆகியோருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 18 வீரர்கள் ஒப்பந்தப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

"ஏ' கிரேடு: அப்ரிதி, கம்ரான் அக்மல், கனேரியா, சல்மான் பட், அப்துல் ரசாக் மற்றும் முகமது ஆசிப்.

"பி' கிரேடு: உமர் அக்மல், முகமது ஆமெர், சயீத் அஜ்மல், பைசல் இக்பால், மிஸ்பா, இம்ரான் பர்கத்.

"சி' கிரேடு: பவத் ஆலம், யாசிர் அராபத், முகமது ஹபீஸ், வாகப் ரியாஸ் மற்றும் அப்துல் ரெஹ்மான்.

இந்திய வீரர்கள் காயம்: உலககோப்பையில் பாதிப்பு

மூன்றாவது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் துவங்கிய ஒரு வாரத்திற்குள் இந்திய வீரர்கள் பலர் காயம் அடைந்துள்ளனர். இதனால் அடுத்த மாதம் நடக்க "டுவென்டி-20' உலககோப்பையில் இந்திய அணி சாதிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மூன்றாவது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இத்தொடர் துவங்கிய சில நாட்களுக்குள் பலர் காயத்துக்கு ஆளாகியுள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களான ஸ்மித், மஸ்காரனாஸ் காயம் காரணமாக தொடரை விட்டு விலகிவிட்டனர்.

தோனி, காம்பிர் காயம்:

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, டில்லி டேர் டெவில்ஸ் கேப்டன் காம்பிர், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யூசுப் பதான் ஆகியோரும் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். டில்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ராவும் காயமடைந்துள்ளார். ஒட்டுமொத்தமாக இத்தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலககோப்பையில் சிக்கல்:

ஐ.பி.எல்., தொடர் துவங்கிய ஒரு வாரத்திற்குள் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. வரும் ஏப். 25 வரை ஐ.பி.எல்., நடக்க உள்ளது. இதனால் மேலும் ஒரு சில இந்திய வீரர்கள் காயம் அடைய வாய்ப்பு உள்ளது.

வரும் ஏப். 30 ம் தேதி வெஸ்ட் இண்டீசில் 3 வது "டுவென்டி-20' உலககோப்பை துவங்குகிறது. இந்நிலையில் முன்னணி இந்திய வீரர்கள் சிலர் இத்தொடரில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. தவிர, காயத்துடன் பங்கேற்றாலும், இந்திய அணியால் சாதிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளை சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே, ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்று உள்ளனர். பாகிஸ்தானிலிருந்து ஒருவர் கூட இடம் பெறவில்லை. இதனால் அந்த அணிகளுக்கு உலககோப்பை தொடரில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.