நம்பர்-1 இடத்தை இழந்தார் தோனி

ஒரு நாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள், ரேங்கிங் பட்டியலில் இந்திய கேப்டன் தோனி "நம்பர்-1' இடத்தை இழந்தார். முதலிடத்தை தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் தட்டிச் சென்றார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) புதிய ரேங்கிங் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி சமீபத்திய முத்தரப்பு தொடரில் சோபிக்காத இந்திய கேப்டன் தோனி, ஒரு நாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு பின்தங்கியுள்ளார்.

இவர் 796 புள்ளிகள் பெற்றுள்ளார். முதலிடத்தை தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ்(805 புள்ளி) கைப்பற்றினார். முத்தரப்பு தொடரில் அசத்திய இந்திய துவக்க வீரர் சேவக்(717 புள்ளி) 8வது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

பவுலர்களுக்கான ரேங்கிங் பட்டியலில் நியூசிலாந்தின் வெட்டோரி முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர் பிரவீண் குமார் முதல் முறையாக 10வது இடத்தை பிடித்துள்ளார். ஒரு நாள் அரங்கின், அணிகளுக்கான பட்டியலில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.

தோனிக்கு அபராதம்:

இதற்கிடையே இலங்கைக்கு எதிரான முத்தரப்பு தொடரின் பைனலில் தாமதமாக பந்துவீசியதற்காக கேப்டன் தோனி உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இப்போட்டியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்துவீசி முடிக்கவில்லை. 2 ஓவர் வரை தாமதமாக வீசியது. இது ஐ.சி.சி., விதிமுறைப்படி தவறு. இதையடுத்து கேப்டன் என்ற முறையில் தோனிக்கு, போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 40 சதவீதமும் மற்ற வீரர்களுக்கு 20 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டது. இதனை இந்தியா ஏற்றுக் கொண்டதால், விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

திராவிட் மீண்டும் அழைக்கப்பட வேண்டும்

ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் ராகுல் திராவிட் மீண்டும் இடம் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம்.

இப்போதுள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி வந்தாலும், வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது வெற்றிபெற திராவிட்டின் அனுபவமும், திறமையும் நிச்சயம் இந்திய அணிக்கு கைகொடுக்கும்.

அவரால் அணிக்கு சிறப்பான பங்களிப்பை இப்போதும் அளிக்கமுடியும் என்று நம்புகிறேன். எனவே அவர் உடனடியாக ஒரு நாள் போட்டி அணிக்கு மீண்டும் அழைக்கப்பட வேண்டும்.

இந்திய பந்து வீச்சாளர்கள் குறித்து கருத்து தெரிவித்த அக்ரம், "ஆரம்பக் கட்டத்தில் இப்போதைய இந்திய இளம் பந்து வீச்சாளர்களிடம் இருந்த வேகமும், துடிப்பும் இப்போது இல்லை என்பதுதான் யதார்த்த உண்மை. அவர்கள் தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் சர்வதேச போட்டிகளில் இந்தியா வெற்றி பெறுவது கடினம்' என்றார்.

மேலும், இந்திய- இலங்கை அணிகளுக்கு இடையே அடுத்தடுத்து தொடர்ச்சியாக போட்டிகள் நடைபெறுவது இரு அணி வீரர்களுக்குமே சோர்வை உண்டாக்கும். எனவே, போட்டிகளுக்கான அட்டவணையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அக்ரம் தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் பாடல்: ரஹ்மான் அறிமுகம்

வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் காமன்வெல்த் போட்டிக்கான அதிகாரப்பூர்வ பாடலை "இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகம் செய்தார்.

டில்லியில் வரும் அக்டோபர் 3-14ம் தேதி வரை காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடக்க உள்ளது. பல்வேறு சர்ச்சைகளை கடந்து, இப்போட்டிக்கான அதிகாரப்பூர்வ பாடலை ஏ.ஆர். ரஹ்மான் நேற்று அறிமுகம் செய்தார்.

இதற்காக டில்லி அருகே உள்ள குர்கானில் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், நடன கலைஞர்களின் பாரம்பரிய நடனம் இடம் பெற்றது.

இப்போட்டிக்கு அனைவரையும் அழைக்கும் விதமாக "ஓ யாரோ, இந்தியா புலா லியே' என துவங்கும் பாடலை ரஹ்மான் பாடி... அறிமுகம் செய்ய, ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய ரஹ்மான் கூறுகையில்,""காமன்வெல்த் போட்டிக்கான பாடலுக்கு இசை அமைத்ததை மிகப் பெரும் கவுரவமாக கருதுகிறேன்.

இதன், முதல் வரியை 6 மாதங்களுக்கு முன் எழுதினேன். பின்னர் பல முறை மாற்றினேன். நேற்று முன் தினம் தான் இறுதி வடிவம் கொடுத்தேன்,''என்றார்.

கோப்பை கைப்பற்றுமா இந்தியா?

முத்தரப்பு தொடரின் பைனலில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில், தோனி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று, கோப்பை கைப்பற்ற காத்திருக்கிறது. சொந்த மண்ணில் சாதிக்க இலங்கையும் முயற்சிக்கும் என்பதால், ஆக்ரோஷமான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.


இலங்கையில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. லீக் சுற்றில் ஏமாற்றிய நியூசிலாந்து வெளியேறியது. இன்று தம்புலாவில் நடக்கும் பைனலில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.


"ஒன் மேன் ஆர்மி':இத்தொடரின் துவக்கத்தில் இருந்தே இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. சேவக் மட்டும் தனி நபராக போராடி அணியை பைனலுக்கு அழைத்து வந்தார். கடந்த போட்டியில் சதமடித்த இவர், இத்தொடரில் அதிக ரன்கள் (240) எடுத்து முதலிடத்தில் உள்ளார். இவர் மீண்டும் ஒருமுறை கைகொடுத்தால், இந்திய அணி எளிதாக கோப்பை வெல்லலாம்.


சொதப்பும் வீரர்கள்:சச்சின், காம்பிர் இல்லாத நிலையில் யுவராஜ் (49 ரன்கள்), ஜடேஜா (37) மற்றும் ரெய்னா (36) ஆகியோர் சொதப்புகிறார்கள். துவக்கவீரர் தினேஷ் கார்த்திக் இதுவரை 4 போட்டியில் 33 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். தவிர, ரோகித் சர்மா, கோஹ்லியும் தங்கள் பங்கிற்கு ரசிகர்களை வெறுப்படையச் செய்கின்றனர். இவர்கள் எல்லாம், இன்று எழுச்சி காண வேண்டும். தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாடுவது மிகவும் அவசியம். கேப்டன் தோனி (73) தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.


அஷ்வின் வாய்ப்பு:அணியின் வேகப்பந்து வீச்சு பிரிவில் பிரவீண் குமார் (8 விக்.,), நெஹ்ரா (7 விக்.,) இருவரும், இத்தொடரில் நம்பிக்கை தருவது சற்று ஆறுதலான விஷயம். இவர்களுடன் இஷாந்த் சர்மாவும் விக்கெட் வேட்டையில் ஈடுபடுவதால் எதிரணியின் ரன்வேகத்தை கட்டுப்படுத்த முடிகிறது. ஆனால் சுழற்பந்து வீச்சில் ரவிந்திர ஜடேஜா தொடர்ந்து ஏமாற்றுகிறார். இவருக்குப்பதில் அஷ்வினுக்கு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாம்.


அனைத்துமே பலம்:இலங்கை அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்து பிரிவிலும் சிறந்து விளங்குகிறது. கேப்டன் சங்ககரா, தில்ஷன், தரங்கா, ஜெயவர்தனா ஆகியோர் சராசரியாக ரன்குவிப்பது பலம் தான். தவிர, சமரவீராவும் அசத்துகிறார். பவுலிங்கில் மாத்யூஸ் தொடர்ந்து சாதிக்கிறார். மலிங்கா, குலசேகராவும் சங்ககராவுக்கு அதிக நம்பிக்கை தருகின்றனர். தவிர, கடந்த போட்டியில் பெரேரா ஐந்து விக்கெட் வீழ்த்தியதையும் மறந்துவிட முடியாது. சுழலில் "நோ-பால்' புகழ் ரந்திவ், மெண்டிஸ், ஹெராத் என எல்லோரும் பார்மில் உள்ளனர்.

இத்தொடரின் துவக்கத்தில் இருந்தே ஒவ்வொரு போட்டியின் முடிவும், மிகப்பெரிய வித்தியாசத்தில், ஒருதலைப்பட்சமாகத்தான் முடிந்தது. தவிர, போட்டியின் முடிவை பெரும்பாலும் "டாஸ்' தான் நிர்ணயிக்கிறது. இது பைனலிலும் தொடரலாம்.


மழை வாய்ப்பு
தம்புலா மைதானத்தின் அதிக பட்ச வெப்பநிலை 32, குறைந்தபட்சம் 23 டிகிரியாக இருக்கும். வானம் பெரும்பாலும் மேகமூட்டமாக காணப்படும். மாலையில் லேசான மழை வர வாய்ப்புள்ளது.


சாதிப்பாரா தோனி
தோனி தலைமையில் இந்திய அணி, இலங்கையில் தொடர்ந்து நான்கு ஒருநாள் தொடர்களில் கோப்பை வென்றுள்ளது. கடந்த 2008 (3-2), 2009 (4-1) ல் நடந்த ஒருநாள் தொடர்கள், 2009 முத்தரப்பு தொடர், சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை என, மொத்தம் நான்கு முறை சாதித்துள்ளது. இன்றும் வெல்லும் பட்சத்தில் ஐந்தாவது முறையாக கோப்பை வென்று அசத்தலாம்.


கூடுதல் முயற்சி தேவை: சங்ககரா
இலங்கை கேப்டன் சங்ககரா கூறுகையில்,"" பொதுவாக பைனலின் போது, இந்திய அணியினர் எங்களை விட சிறப்பாக செயல்பட்டு கோப்பை வென்று விடுவர். இது பலமுறை நடந்துள்ளது. இம்முறை சற்று கூடுதல் முயற்சி எடுத்து, ஐந்தாவது முறையாக கோப்பை வெல்வதை தடுப்போம். சேவக் அசத்தலான வீரர் என்பதில் சந்தேகமில்லை. இவரை விரைவில் அவுட்டாக்கினால், எங்களுக்கு நல்லது,'' என்றார்.


இதுவரை...
* தம்புலா ரங்கிரி மைதானத்தில் இந்திய அணி இதுவரை பங்கேற்ற 16 போட்டிகளில் 9ல் வெற்றி, 7ல் தோல்வியடைந்துள்ளது.
* இலங்கை பங்கேற்ற 33 போட்டிகளில் 22ல் வெற்றி, 10ல் தோல்வியடைந்துள்ளது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.

ஐ.பி.எல்., வீரர்கள் ஏலத்தில் சர்ச்சை

ஐ.பி.எல்., அரங்கில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 2009 ம் ஆண்டு நடந்த வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பிளின்டாப் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.


இதில் முன்னாள் ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி மற்றும் பி.சி.சி.ஐ.,செயலாளர் சீனிவாசன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.


ஐ.பி.எல்., (இந்தியன் பிரிமியர் லீக்) "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், கடந்த 2008 ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வீரர்கள் ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த 2009 ம் ஆண்டு நடந்த ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இங்கிலாந்து வீரர் ஆன்ட்ரூ பிளின்டாப்பை ரூ. 7.25 கோடிக்கு எடுத்தது.


இவரை ஏலத்தில் எடுப்பதில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது.


இப்பிரச்னையில் அப்போதைய ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக செயல்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஏலம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் லலித் மோடி, சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசனுக்கு இ-மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். அதை தனியார் "டிவி' ஒன்று தற்போது வெளியிட்டுள்ளது. இதில், " பாகிஸ்தான் வீரர் தன்வீரை அணியிலிருந்து நீக்க வேண்டாம்.


பிளின்டாப்பை ஏலத்தில் எடுப்பதில் போட்டி வேண்டாம் என்று ராஜஸ்தான் அணியை சமாதானப்படுத்துவதில் நான் மிகவும் சிரமம் பட்டு விட்டேன். ராஜஸ்தான் அணியின் கேப்டன் வார்னையும் சமாதானப்படுத்தி விட்டேன்,' என, செய்தி அனுப்பி இருந்தார். இதற்கு சீனிவாசன்," தங்கள் உதவிக்கு நன்றி' என, பதில் அளித்துள்ளார்.


அதிரடி மறுப்பு:தற்போது இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏற்கனவே கடந்த 3 ஐ.பி.எல்., தொடர்களில் சுமார் 2000 கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளதாக லலித் மோடி குற்றம் சாட்டுப்பட்டு, தலைவர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

தற்போது இவர் மீது பி.சி.சி.ஐ., கமிட்டி ஒன்றை அமைத்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளரும், பி.சி.சி.ஐ., செயலாளருமான சீனிவாசனும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனை அதிரடியாக மறுத்துள்ளார் சீனிவாசன்.


இது குறித்து அவர் கூறியது: சென்னை அணி, பிளின்டாப்பை நேர்மையான முறையில் தான் ஏலத்தில் எடுத்தது. ராஜஸ்தான் அணி, பிளின்டாப்பை ரூ. 5 கோடிக்கு ஏலம் கேட்டது. ஆனால் நாங்கள் 7.25 கோடி ரூபாய்க்கு கேட்டதால் ஏலத்தில் வெற்றி பெற்றோம். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. இப்படியிருக்கும் மோது, லலித் மோடி ஷேன் வார்னை சமாதானப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?


வார்ன் என்ன ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளரா? ஏலத்தில் நாங்கள் எந்த தவறும் செய்ய வில்லை என்பது 100 சதவீதம் உண்மை. ஏலத்தின் போது எங்களிடம் மட்டுமே 10 கோடி ரூபாய் வரை பணம் இருந்தது. மற்ற அணிகளிடம் இதை விட குறைவாகவே இருந்தது. அதனால் பிளின்டாப்பை ஏலத்தில் எடுக்க எங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை என்பதே உண்மை. இவ்வாறு சீனிவாசன் தெரிவித்தார்.


வார்ன் அதிர்ச்சி: இந்த விவகாரம் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஷேன் வார்ன் கூறுகையில்,"" இப்பிரச்னை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் இது போன்ற செயல்களில் எப்போதும் செயல்படாது. எனக்கு இதில் எந்த வித தொடர்பும் இல்லை,'' என்றார்.

ஒரு போட்டிக்கு ரூ. 3.33 கோடி

இந்திய கிரிக்கெட் அணி, சொந்த மண்ணில் விளையாடும் போட்டிகளுக்கான "ஸ்பான்சர்' உரிமையை ஏர்டெல் நிறுவனம் தட்டிச் சென்றது. இதன்படி ஒரு போட்டிக்கு ரூ. 3.33 கோடி வழங்க உள்ளது.

வரும் மூன்றாண்டுகளில் (2010-2013) இந்திய அணி, உள்நாட்டில் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகளின் போது, மைதானத்தில் விளம்பரம் செய்பவரை தேர்வு செய்யும் ஏலம் மும்பையில் நடந்தது. இதில் முன்னணி நிறுவனங்களான ஏர்டெல், ஐடியா, ஏர்செல், தவிர, மைக்ரோமாக்ஸ், ஹீரோ ஹோண்டா, பியூச்சர் குரூப் உள்ளிட்ட 10 நிறுவனங்கள் பங்கேற்றன.

கடந்த முறை இந்த உரிமையை பெற்றிருந்த, வேர்ல்டு ஸ்போர்ட்ஸ் குரூப் (டபிள்யு.எஸ்.ஜி.,), இம்முறை இந்த ஏலத்தில் பங்கேற்கவில்லை. இதுகுறித்து முடிவுசெய்ய, இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) மார்கெட்டிங் கமிட்டி நேற்று மும்பையில் நடந்தது. இதன் முடிவில்
பி.சி.சி.ஐ., செயலாளர் சீனிவாசன் கூறியது:

இந்த ஆண்டு செப்டம்பர் 1 முதல் மார்ச் 2013 வரையில், இந்திய அணி உள்ளூரில் பங்கேற்கும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகள் என ஒவ்வொரு போட்டிக்கும் அதிகபட்ச ஏலத்தொகையாக 3.33 கோடி ரூபாய் தர, ஏர்டெல் நிறுவனம் முன்வந்தது. இதையடுத்து இந்த ஏலத்தில் ஏர்டெல் நிறுவனம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு சீனிவாசன் கூறினார்.

இந்திய அணி விளையாடும் போட்டிகளின் போது "ஸ்டம்ப்' உட்பட மைதானத்தின் முக்கிய இடங்களில் விளம்பரம் செய்யும் உரிமையை ஏர்டெல் நிறுவனம் பெற்றுள்ளது.

சச்சினுக்கு கிடைக்குமா ஐ.சி.சி., விருது

ஐ.சி.சி., விருதுக்கு இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், கேப்டன் தோனி, அதிரடி வீரர் சேவக் உள்ளிட்ட வீரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஆண்டு தோரும் விருது வழங்கும் விழா நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா வரும் செப். 6ம் தேதி பெங்களூருவில் நடக்கிறது.

இந்நிகழ்ச்சியில் சிறந்த கிரிக்கெட் வீரர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர் என 7 விதமான விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில் இந்தியாவின் சச்சின், தோனி, சேவக், இலங்கையின் மகிலா ஜெயவர்தனா, ஆஸ்திரேலியாவின் போலிஞ்சர், வாட்சன், தென் ஆப்ரிக்காவின் காலிஸ், ஆம்லா உள்ளிட்ட எட்டு வீரர்கள் மூன்று விதமான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

வளர்ந்து வரும் இளம் வீரருக்கான விருதுக்கு இந்தியா சார்பில் விராத் கோஹ்லியின் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த "டுவென்டி-20' வீரருக்கான விருதுக்கு இந்தியா சார்பில் சுரேஷ் ரெய்னாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. பெண்களுக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு இந்தியாவின் மிதாலி ராஜ், கவுகர் சுல்தானாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ.சி.சி., தலைமை அதிகாரி ஹாரூன் லார்கட் கூறுகையில், ""ஏழாவது ஐ.சி.சி., விருது வழங்கும் விழா பெங்களூருவில் வரும் செப். 6ம் தேதி நடக்கிறது.

இவ்விழாவில் வழங்கப்படும் விருதுக்கான வீரர்களின் பட்டியலை, முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிளைவ் லாய்டு தலைமையிலான 5 பேர் கொண்ட குழு பரிந்துரை செய்துள்ளது. இம்முறை ஒரு விருது "ஆன்-லைன்' மூலம் ரசிகர்கள் தேர்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

வீரர்கள் கடிதம்: பி.சி.சி.ஐ., மறுப்பு

தொடர்ச்சியான போட்டிகள் குறித்து வீரர்களிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை. சோர்வு அல்லது காயத்துடன் தொடர்ந்து விளையாடும் படி யாரையும் வற்புறுத்தியது இல்லை,' என, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தெரிவித்துள்ளது.

ஆண்டு முழுவதும் தொடர்ச்சியான போட்டிகளில் பங்கேற்பதால், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மன சோர்வு, பலவீனத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் தேவையற்ற போட்டிகளை குறைக்க வேண்டும் என, இந்திய வீரர்கள் பி.சி.சி.ஐ.,க்கு கடிதம் எழுதியதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து இதன் மீடியா மற்றும் நிதிக்கமிட்டித் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியது:


கடுமையான சோர்வு, காயம் மற்றும் உடற்தகுதி இல்லாத நேரங்களில் தங்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை எனில், வீரர்கள் தேர்வாளர்களிடம் தெரிவிக்கலாம். எந்த வீரர்களையும் குறிப்பிட்ட தொடரில் விளையாடித்தான் ஆகவேண்டும் என கட்டாயப்படுத்துவதில்லை. ஏனெனில் அவர்களுக்கு ஓய்வு கொடுப்பது என்பதில், பி.சி.சி.ஐ., தெளிவாக உள்ளது.

அதிகப்படியான போட்டிகளால் வீரர்கள் மகிழ்ச்சியற்ற நிலையில் இருப்பதாக எவ்வித புகார் அல்லது கடிதம் வரவில்லை. அப்படி வெளியான செய்திகளில் உண்மையில்லை. இது தவறானவை.

இவ்வாறு ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.

சீனிவாசன் மறுப்பு:

இது குறித்து பி.சி.சி.ஐ., செயலர் சீனிவாசன் கூறுகையில்,"" தோனி மற்றும் எந்த வீரரிடம் இருந்தும் எனக்கு எவ்வித கடிதமும் வரவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பில் தோனி என்ன கூறினார் என, எனக்குத் தெரியாது.

அவர் தெரிவித்த கருத்தை தெரிந்து கொண்டு, பிறகு நான் பதில் சொல்கிறேன். அதிகப்படியான போட்டிகளால் தான் வீரர்கள் காயமடைகின்றனர் என்பது தவறு,'' என்றார்.

பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு தேவை

பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு தேவை எனவும் அப்போதுதான் அவர்கள் சிறப்பாக விளையாட முடியும் எனவும் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி கூறியுள்ளார்.

இது குறித்து தம்புலாவில் (இலங்கை) செய்தியாளர் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பேசிய அவர் கூறியது: "இந்திய அணியை பொறுத்தவரை பந்து வீச்சில் சற்று பின்தங்கித்தான் உள்ளது. பேட்ஸ் மேன்களுக்கும் பௌலர்களுக்கும் அதிக வித்தியாசம் உண்டு.

பேட்ஸ்மேன்களை விட பௌலர்களுக்கு பொறுப்பும் பணியும் அதிகம். எனவே ஒரு போட்டிக்கும் மற்றொரு போட்டிக்கும் இடையே பௌலர்களுக்கு போதிய ஓய்வு தரப்பட வேண்டும்.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் ஆட்டம் ஆகியவற்றில் இடைவெளி இன்றி அவர்கள் விளையாடுவதால் போட்டியின் போது களைப்பு மற்றும் அதிக பணிச் சுமையால் காயம் ஏற்படுகிறது.

இலங்கையுடனான டெஸ்ட் தொடர் டிரா ஆனது. முத்தரப்பு கிரிக்கெட்டில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் அதிக ரன் வித்தியாசத்தில் தோற்றோம். இதனால் தற்போதைய இலங்கை பயணம் எங்களுக்கு ஏமாற்றம் அளித்திருப்பது உண்மை.

கடந்த 3 நாள்களாக நடந்த பயிற்சியின் போதும் இந்திய அணியின் விக்கெட் வீழ்த்தும் திறன் சிறப்பாக இல்லை. ஆனாலும் நாங்கள் நம்பிக்கை இழந்து விடவில்லை. தொடர்ந்து முயற்சித்து சவால்களை சந்தித்து வெற்றி வாகை சூடுவோம்.

திங்கள்கிழமை ஆட்டத்தில் முனாப் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறோம்' என்றார் தோனி.

உலககோப்பை நெருங்கும் நேரத்தில்

உலககோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2011) மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடக்கிறது.

உலககோப்பை போட்டி தொடங்க இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில் பல வீரர்கள் காயத்தால் அவதிப்படுகின்றனர். முன்னணி வீரர்கள் உடல் தகுதி இல்லாமல் இருப்பதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பி.சி.சி.ஐ.) கவலை அடைந்து உள்ளது.

காயம் காரணமாக ஜாகீர்கான், ஸ்ரீசாந்த், காம்பீர், ஹர்பஜன்சிங் ஆகியோர் 3 நாடுகள் போட்டியில் ஆட வில்லை. அணியில் உள்ள யுவராஜ் சிங், ரோகித் சர்மா ஆகியோரும் உடல் தகுதியுடன் இல்லை. தோள்பட்டை, முழங்கால் ஆகிய காயத்தில் வீரர்கள் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

இதற்கு காரணம் வீரர்கள் ஓய்வு இல்லாமல் அதிகமான அளவில் போட்டிகளில் பங்கேற்பதுதான். போட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று முன்னணி வீரர்கள் கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். இது குறித்து கிரிக்கெட் வாரியம் சிந்திக்க வேண்டும்.

இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியாவுடனும், நியூசிலாந்துவுடனும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. மொத்தம் 5 டெஸ்ட், 7 ஒருநாள் போட்டிகளில் ஆடவேண்டும். அதற்கு முன்னதாக சில வீரர்கள் சாம்பியன் லீக் போட்டியில் ஆட வேண்டி உள்ளது.

வீரர்களின் காயத்தால் உலககோப்பை போட்டிக்கான 15 சிறந்த வீரர்களை தேர்வு செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. கடந்த 20 ஓவர் உலககோப்பையிலும், சாம்பியன் டிராபி போட்டியிலும் காயம் காரணமாகவே இந்திய அணியால் சிறப்பாக ஆட முடியவில்லை. இதனால் அதே நிலைமை 2011-ம் ஆண்டு உலககோப்பையில் வந்து விடக்கூடாது.

மேலும் இந்திய அணியில் சிறந்த ஆல் ரவுண்டர் இல்லாமல் இருப்பது பாதிப்பை ஏற்படுத்தும். ரவீந்திர ஜடேஜாவால் முக்கிய பங்களிப்பாக இருக்க முடிய வில்லை. கபில்தேவ் போன்ற ஆல்ரவுண்டர்கள் அணிக்கு தேவை. யூசுப்பதான் அல்லது இர்பான்பதானை கொண்டு வருவது அணிக்கு பலம் சேர்க்குமா என்பதை தேர்வு குழு முடிவு செய்ய வேண்டும்.

ஆடுகளம் மோசம்: வெளியேறினார் தோனி

தம்புலாவில் உள்ள பயிற்சி ஆடுகளம் மோசமாக உள்ளது என மைதானத்தை விட்டு வெளியேறினார் இந்திய கேப்டன் தோனி. இங்கு பயிற்சி மேற்கொண்ட தினேஷ் கார்த்திக் காயம் அடைந்தார்.

இந்தியா, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது. முதல் 2 போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து 5, இலங்கை 4 புள்ளிகள் பெற்றுள்ளன. மூன்றாவது போட்டி, நாளை ரங்கிரி தம்புலா மைதானத்தில் நடக்க உள்ளது. இதில், இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இதற்காக நேற்று 3 மணி நேர பயிற்சியில், இந்திய அணி ஈடுபட்டது.

கார்த்திக் காயம்:

பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட ஆடுகளத்தின் தன்மை மிகவும் மோசமாக இருந்துள்ளது. பந்து அதிக அளவில் "பவுன்ஸ்' ஆகி உள்ளது. இதனால் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டிருந்த துவக்க வீரர் தினேஷ் கார்த்திக்கின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர், நாளை நடக்க உள்ள போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தோனி கோபம்:

ஆடுகளத்தின் தன்மை மோசமாக இருந்தததை அறிந்த, இந்திய கேப்டன் தோனி கடுமையாக கோபம் அடைந்தார். உடனடியாக பயிற்சியை புறக்கணித்து விட்டு, வெளியேறினார்.

இது குறித்து இந்திய அணியின் மானேஜர் ரஞ்சிப் பிஸ்வால் கூறுகையில்,"" பயிற்சி மேற்கொள்ள மைதானத்தில் நல்ல முறையில் வசதிகள் உள்ளன. ஆனால் பயிற்சிக்குரிய ஆடுகளம் சரியில்லை. இதில் ஒரு சில குறைபாடுகள் உள்ளன. ஆனால் வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை.'' என்றார்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு

முக்கியத்துவம் இல்லாத போட்டிகளை ரத்து செய்து, வீரர்களின் சுமையை குறைக்க வேண்டும்,'' என, வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) கடிதம் எழுதியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியினர், ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். இது வீரர்கள் இடையே மன சோர்வையும், பலவீனத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தற்போது இலங்கையில் நடக்கும் முத்தரப்பு தொடரில் கிடைத்த 5 நாள் இடைவெளியில், 3 நாட்கள் இந்தியா வர அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான மோசமான தோல்வியை அடுத்து, வீரர்கள் இந்தியா வர பி.சி.சி.ஐ., தடை போட்டது. பொறுத்து பார்த்த இந்திய வீரர்கள், தங்கள் மனக்குறையை தெரிவிக்கும் வகையில், பி.சி.சி.ஐ.,க்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது.

மாற்ற வேண்டும்:

இதன்படி அடுத்து வரும் சில மாதங்களில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளில், முக்கியத்துவம் இல்லாதவைகளை குறைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் ஒருபகுதியாக அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக, இந்தியாவில் விளையாடும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை, 2 போட்டிகள் கொண்ட தொடராக மாற்றி அமைக்கும்படி, கேட்டுக்கொண்டுள்ளனர்.

தவிர, வரும் டிசம்பரில் தென் ஆப்ரிக்காவில் பங்கேற்கும் தொடரை, ஒருவாரம் முன்னதாக துவங்கும் வகையில் மாற்றி அமைக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

பி.சி.சி.ஐ., மறுப்பு:

ஆனால் இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து அப்படி எதுவும் கடிதம் வரவில்லை என பி.சி.சி.ஐ., நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சுழற்சி முறை:

சோர்வாக இருக்கும் வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டு, வேறு வீரர்கள் பங்கேற்கும் வகையில் சுழற்சி முறையை பி.சி.சி.ஐ., ஏற்கனவே அறிமுகம் செய்தது. ஆனால் இதற்கு இந்திய அணியின் கேப்டன் தோனி உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தவிர, அணியின் வெற்றி தொடர வேண்டுமெனில், இந்த முறையை மாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

20 ஓவர் போட்டியில் 3 ஆண்டுகள் விளையாடுவேன்

இலங்கை சுழற்பந்து வீரர் முரளீதரன் டெஸ்ட் போட்டியில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். ஓய்வு காணும் முன் அவர் டெஸ்ட் போட்டியில் 800 விக்கெட் வீழ்த்தி யாரும் எட்ட முடியாத உலக சாதனை நிகழ்த்தினார்.

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

டெஸ்ட் போட்டியில் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் விளையாடி இருக்க முடியும். ஆனால் நல்ல நிலையில் இருக்கும் போதே ஓய்வு பெற வேண்டும் என்று நினைத்தேன்.

அதனால் ஓய்வு பெற்று விட்டேன். மக்கள் இவர் ஏன் இன்னும் விளையாடி கொண்டிருக்கிறார் என்று கேட்கும் நிலைக்கு விட்டு விடக் கூடாது என்று நினைத்தேன். அதனால் தான் முன்கூட்டியே ஓய்வு பெற்றேன்.

அடுத்த உலக கோப்பைக்கு நான் தேவை என்று கருதினால் அதுவரை ஒரு நாள் போட்டியில் ஆடுவதாக இலங்கை தேர்வு குழுவினரிடம் கூறி இருக்கிறேன்.

20 ஓவர் போட்டியை பொறுத்த வரை இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் வரை ஆடுவேன். கவுண்டி போட்டிகளிலும் பங்கேற்பேன்.

சுழற்பந்து என்பது கஷ்டமான ஒரு கலை. அது எல்லா வகையான கிரிக் கெட்டுக்கும் பொருந்தும். 20 ஓவர் போட்டிக்கு சுழற்பந்து சரிபட்டு வராது என்ற தவறான எண்ணம் இருந்தது. ஆனால் கடந்த 2 ஐ.பி.எல். போட்டிகளில் சுழற்பந்து தான் ஆதிக்கம் செலுத்தியது.

கடந்த டெஸ்ட் போட்டியில் 800 விக்கெட் எடுக்க எனக்கு 8 விக்கெட்டுகள் தேவைப்பட்டது. ஆனால் 799 விக்கெட் தான் எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனாலும் நம்பிக்கையோடு ஆடி 800-வது விக்கெட்டை எடுத்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

காத்திருக்கும் சாதனை

அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உலக சாதனை படைத்த சச்சின், அடுத்து அதிக ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று சாதிக்க காத்திருக்கிறார். இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் அரங்கில் அதிக ரன் மற்றும் அதிக சதம், ஒருநாள் போட்டியில் 200 ரன் என்ற பல்வேறு சாதனைக்கு சொந்தக் காரர். இவர் இலங்கை அணிக்கு எதிரான 3வது டெஸ்டில் களமிறங்கியபோது, அதிக டெஸ்டில்(169) விளையாடிய வீரர் என்ற சாதனை படைத்தார். இதன் மூலம் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாக் (168 டெஸ்ட்) சாதனையை முறியடித்தார்.


ஜெயசூர்யா முதலிடம்:ஒருநாள் அரங்கில் அதிக போட்டியில் விளையாடிய வீரர்கள் வரிசையில் இலங்கையின் ஜெயசூர்யா முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 444 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார். இவரை தொடர்ந்து இந்தியாவின் சச்சின் (442 போட்டி), பாகிஸ்தானின் இன்சமாம் (378), வாசிம் அக்ரம் (356), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (351) உள்ளனர்.


நழுவிய வாய்ப்பு:இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை அடுத்து, இந்தியா-இலங்கை-நியூசிலாந்து அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. இத்தொடருக்கான இந்திய அணியில் சச்சினுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.


இதன்மூலம் அதிக ஒரு நாள் போட்டியில் விளையாடிய வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடிக்கும் வாய்ப்பை இழந்தார். இவர் இச்சாதனை படைக்க, இன்னும் இரண்டு மாத காலம் காத்திருக்க வேண்டும்.


வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் சச்சின் விளையாடும் பட்சத்தில், புதிய சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது.

புதிய சாதனை படைத்தார் சச்சின்

டெஸ்ட் அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடி, புதிய சாதனை படைத்தார் இந்தியாவின் சச்சின்.


இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடக்கிறது. இது டெஸ்ட் அரங்கில் சச்சின் பங்கேற்கும், 169 வது போட்டியாகும். இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக் (168 வது போட்டி) சாதனையை தகர்த்தார் சச்சின். புதிய சாதனை படைத்துள்ள இவர், டெஸ்ட் கிரிக்கெட்டின் போக்கு, வெகுவாக மாறி விட்டது என்றார்.


இது குறித்து சச்சின் கூறியது: நான் கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்த 20 ஆண்டுகளில், டெஸ்ட் கிரிக்கெட் பல்வேறு மாற்றங்கள் அடைந்துள்ளது. ஒரு நாள் போட்டிகளின் தன்மையும் மாறி விட்டது. "டுவென்டி-20' போட்டிகளின் வரவுக்குப் பின், டெஸ்ட் போட்டிகளும் அதிரடிக்கு மாறி விட்டன.

கடந்த 1989 ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய போது, முன்னணி பவுலர்களான வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், இம்ரான் கான், அப்துல் காதிர் ஆகியோரது பந்து வீச்சை எதிர்கொண்டது சற்று வித்தியாசமாக இருந்தது. இது தான் எனது முதல் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என மனதில் நினைத்தேன். ஆனால் அடுத்த போட்டியில், சிறப்பாக ஆடி ரன் குவித்தேன். அதற்குப் பின் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது.


மிகப்பெரிய கவுரவம்: "சச்சின் என்னைப் போலவே பேட்டிங் செயகிறார்,'என ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன் தெரிவித்ததை, கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன். அதற்குப் பின் பிராட்மேன் தேர்வு செய்த உலக லெவன் வீரர்கள் பட்டியலில் என்னையும் இணைத்தது, புதிய உற்சாகத்தை அளித்தது. ஒரு விளையாட்டு வீரருக்கு, தலை சிறந்த வீரர்களின் பாராட்டு தன்னம்பிக்கை கொடுக்கும். இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.


அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய


"டாப்-6' வீரர்கள்:


வீரர் நாடு போட்டி ரன்
சச்சின் இந்தியா 169 13742
ஸ்டீவ்வாக் ஆஸி., 168 10927
பார்டர் ஆஸி., 156 11174
பாண்டிங் ஆஸி., 146 12026
வார்ன் ஆஸி., 145 3154
டிராவிட் இந்தியா 141 11460


தகர்க்க முடியாது: சைமண்ட்ஸ்
அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சினின் சாதனையை இனி யாரும் தகர்க்க முடியாது என்றார் ஆஸ்திரேலியாவின் சைமண்ட்ஸ். இது குறித்து அவர் கூறுகையில்,"" சச்சினின் சாதனை பாராட்டுக்குரியது. அவரது சாதனையை இனி யாரும் நெருங்க முடியாது என நினைக்கிறேன். தற்போது கிரிக்கெட் விளையாடத் துவங்கி உள்ளவர்கள், இனி 160 முதல் 170 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பார்களா என்பது சந்தேகம் தான்,'' என்றார்

கடவுள் கொடுத்த பரிசு: சச்சின்

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நான் சுமையாக கருதவில்லை. அதை கடவுள் கொடுத்த பரிசாகவே கருதுகிறேன்,'' என, சச்சின் தெரிவித்தார்.

கொழும்புவில் இன்று நடக்கும் இந்தியா, இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் புதிய சாதனை படைக்க உள்ளார். டெஸ்ட் அரங்கில் 169 வது போட்டியில், களமிறங்க உள்ள சச்சின், அதிக போட்டிகளில் விளையாடியுள்ள வீரர் என்ற பெருமை பெற உள்ளார். இது குறித்து சச்சின் கூறியது:

கடந்த 20 ஆண்டுகளாக கிரிக்கெட்டை ரசித்து விளையாடி வருகிறேன். இது எனது கனவு. எனது ஆசை. கிரிக்கெட் அரங்கில், ஒவ்வொரு நிமிடத்தையும் நான் மகிழ்ச்சியுடன் கழித்து வருகிறேன். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நான் சுமையாகக் கருத வில்லை. இதை கடவுள் கொடுத்த பரிசாகவே கருதுகிறேன்.

கடந்த 1989 ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதன் முதலில் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியதை நான் நினைத்துப் பார்க்கிறேன். அது எனது வாழ்நாளின் மறக்க முடியாத நிகழ்வு. இதற்கு ஒப்பானது வேறு எதுவும் இல்லை. 169 வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி சாதனை படைக்க விருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எதிர்பார்த்ததை விட, வெகு விரைவாக எனது கிரிக்கெட் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.

கிரிக்கெட் அரங்கில் பல முறை கஷ்டமான காலகட்டங்களை நான் கடந்துள்ளேன். அந்த சமயங்களில், மனம் தளரவில்லை. அதற்கான காரணத்தை கண்டுபிடித்து, சிறப்பாக செயல்பட முயற்சி செய்வேன். ரசிகர்கள் கொடுத்த பெரும் ஆதரவு, பல சமயங்களில் எனக்கு உற்சாகத்தை அளிப்பதாய் அமைந்தது. கிரிக்கெட் அரங்கில் எனது சாதனைகளை ஒரு இந்திய வீரரால் தான் தகர்க்க முடியும் என நான் நம்புகிறேன்.

இளம் வீரர்கள் முதலில் கனவு காண வேண்டும். பின்னர் அதனை நோக்கி முன்னேற வேண்டும். கடின முயற்சியுடனும், உண்மையுடனும் செயல்பட்டால், கூடிய விரைவில் கனவு நனவாகும். இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.

சூப்பர் சிக்சர்

டுவென்டி-20' போட்டிகளில் சிக்சருக்கு பஞ்சமில்லை. வீரர்கள் தங்கள் அபார ஆட்டத்தால், சிக்சர் மழை பொழிகின்றனர்.


"டுவென்டி-20' அரங்கில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில், நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 40 போட்டிகளில் விளையாடி 1100 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 39 சிக்சர் அடங்கும். இவரை தொடர்ந்து இந்தியாவின் யுவராஜ் சிங் (38 சிக்சர்), வெஸ்ட் இண்டீசில் கிறிஸ் கெய்ல் (34 சிக்சர்), ஆஸ்திரேலியாவின் காமிரான் ஒயிட் (31 சிக்சர்), டேவிட் வார்னர் (31 சிக்சர்) ஆகியோர் உள்ளனர்.


கெய்ல் அதிரடி: "டுவென்டி-20' போட்டியில், ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் உள்ளார். இவர் கடந்த 2007ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக 10 சிக்சர் விளாசினார். இவரை அடுத்து தென் ஆப்ரிக்காவின் போஸ்மேன் (9 சிக்சர்), பிரண்டன் மெக்கலம் (8 சிக்சர்), இந்தியாவின் யுவராஜ் சிங் (7 சிக்சர்), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (7 சிக்சர்) ஆகியோர் உள்ளனர்.


மெக்கலம் அபாரம்: "டுவென்டி-20' அரங்கில் அதிக பவுண்டரி அடித்த வீரர்கள் வரிசையில் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் உள்ளார். இவர் அதிகபட்சமாக 112 பவுண்டரி அடித்துள்ளார். இவரை தொடர்ந்து இந்தியாவின் யுவராஜ் சிங் (99 பவுண்டரி), இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் (90 பவுண்டரி), இலங்கையின் தில்ஷன் (86 பவுண்டரி), மகிலா ஜெயவர்தனா (78 பவுண்டரி) ஆகியோர் உள்ளனர்.


கிப்ஸ் அசத்தல்:"டுவென்டி-20' போட்டியில், ஒரு இன்னிங்சில் அதிக பவுண்டரி அடித்த வீரர்கள் வரிசையில், தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ் உள்ளார். இவர் கடந்த 2007ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக 14 பவுண்டரி அடித்தார். இவரை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (13 பவுண்டரி), நியூசிலாந்தின் ரெட் மண்ட் (13 பவுண்டரி) ஆகியோர் உள்ளனர்.

வீரர்கள் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், "டுவென்டி-20' அரங்கில் சிக்சர், பவுண்டரிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது.