சச்சின், தோனிக்கு ரூ. 1.84 கோடி

நான்காவது ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஏலத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சச்சின், தோனி, சேவக் போன்றவர்களுக்கு 1.84 கோடி ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளனர். இந்த ஏலத்தில் 62 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியன் பிரிமியர் லீக் சார்பில் (ஐ.பி.எல்.,) கடந்த மூன்று ஆண்டுகளாக "டுவென்டி-20' தொடர் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற வீரர்களின் ஒப்பந்த காலம் முடிவடைந்ததால், நான்காவது தொடருக்காக வீரர்கள் ஏலம் விரைவில் நடக்கவுள்ளது. கடந்த முறை நடந்த ஏலத்தில் சச்சின், கங்குலி, டிராவிட், யுவராஜ் சிங் உள்ளிட்டவர்களுக்கு, நட்சத்திர வீரர்கள் அந்தஸ்து கொடுக்கப்பட்டது.

இம்முறை வீரர்கள் தரத்தினைக் கொண்டு, பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் படி முதல் பிரிவில் சச்சின், தோனி, சேவக், ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் இடம் பெற்றுள்ளனர். இந்த வீரர்களுக்கு அடிப்படை விலையாக 1.84 கோடி ரூபாய் நிர்ணயித்துள்ளனர். இதில் சச்சின் (மும்பை இந்தியன்ஸ்) மற்றும் தோனியை (சென்னை சூப்பர் கிங்ஸ்) அந்தந்த அணிகள் தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளன.

இரண்டாவது பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு 1.3 கோடி ரூபாய் அடிப்படை விலை. இதில் "டுவென்டி-20' ஸ்பெஷலிஸ்ட் யூசுப் பதான், அனுபவ சுரேஷ் ரெய்னா, வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் இடம் பெற்றுள்ளனர். ஐ.பி.எல்., இரண்டு மற்றும் மூன்றாவது தொடரில் சிறப்பாக செயல்படாத காம்பிர், விராத் கோஹ்லி, ராபின் உத்தப்பா, இர்பான் பதான், ஆஷிஸ் நெஹ்ரா, பிரவீண் குமார், இஷாந்த் சர்மா ஆகியோர் மூன்றாவது வகையில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு அடிப்படை விலை, 92 லட்ச ரூபாய். கடந்த முறை நட்சத்திர வீரர்களாக இருந்த கங்குலி, டிராவிட், கும்ளே, லட்சுமண் போன்றவர்கள் இந்த பிரிவில் தான் உள்ளனர்.

கடந்த 2005 முதல் இந்திய அணியில் இடம் பெற்று, உள்ளூர் கிரிக்கெட்டில் பங்கேற்று வரும் சகா, மனோஜ் திவாரி, அசோக் டின்டா, சத்தீஸ்வர் புஜாரா உள்ளிட்ட பல வீரர்கள் நான்காவது பிரிவில் (46 லட்சம்) உள்ளனர். ஐந்தாவது மற்றும் கடைசி பிரிவில் (23 லட்சம்) மன்பிரீத் கோனி, சுதீப் தியாகி, ஸ்ரீதரன் ஸ்ரீராம் ஆகியோர் உள்ளனர்.

ஒவ்வொரு ரஞ்சி அணிகளில் இருந்தும் ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்கள் விபரம்:

ஆந்திரா: வேணு கோபால் ராவ்

அசாம்: ஸ்ரீதரன் ஸ்ரீராம்

பரோடா: யூசுப் பதான், இர்பான் பதான், முனாப் படேல், அம்பதி ராயுடு

பெங்கால்: கங்குலி, சகா, மனோஜ் திவாரி, அசோக் டின்டா

டில்லி: சேவக், காம்பிர், விராத் கோஹ்லி, சிகர் தவான், ஆஷிஸ் நெஹ்ரா, இஷாந்த் சர்மா

குஜராத்: பார்த்திவ் படேல், சித்தார்த் திரிவேதி

அரியானா: ஜொகிந்தர் சர்மா, அமித் மிஸ்ரா

ஐதராபாத்: லட்சுமண், பிரக்யான் ஓஜா, சுமன்

ஜார்க்கண்ட்: தோனி, சவுரப் திவாரி

கர்நாடகா: கும்ளே, டிராவிட், மனிஷ் பாண்டே, அபிமன்யு மிதுன், வினய் குமார், உத்தப்பா

கேரளா: ஸ்ரீசாந்த்

மும்பை: சச்சின், ஜாகிர் கான், வாசிம் ஜாபர், அபிஷேக் ராத், ரோகித் சர்மா, அபிஷேக் நாயர், ரமேஷ்
பவார்

மத்திய பிரதேசம்: நமன் ஓஜா

பஞ்சாப்: யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், வி.ஆர்.வி.சிங், மன்பிரீத் கோனி

ரயில்வேஸ்: முரளி கார்த்திக்

ராஜஸ்தான்: பங்கஜ் சிங்

சவுராஷ்டிரா: சத்தீஸ்வர் புஜாரா, ரவிந்திர ஜடேஜா

தமிழகம்: பத்ரி நாத், தினேஷ் கார்த்திக், முரளி விஜய், அஷ்வின், ராஜகோபால் சதீஷ், பாலாஜி

உத்தரபிரதேசம்: முகமது கைப், சுரேஷ் ரெய்னா, பிரவீண் குமார், சுதீப் தியாகி, பியுஸ் சாவ்லா,
ருத்ர பிரதாப் சிங்

விதர்பா: உமேஷ் யாதவ்

இளம் இந்திய அணி சாதிக்குமா?

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இதில், காம்பிர் தலைமையிலான இளம் இந்திய அணி, அசத்தல் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் போட்டி இன்று கவுகாத்தி, நேரு மைதானத்தில் நடக்கிறது. இம்முறை இந்திய அணியில் சச்சின், சேவக், தோனி, ஜாகிர் கான், ஹர்பஜன் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், புதிய கேப்டன் காம்பிருடன் தமிழகத்தின் முரளி விஜய் இணைந்து, பொறுப்பான துவக்கம் தர வேண்டும். மிடில் ஆர்டரில் ரெய்னா, விராத் கோஹ்லி, யுவராஜ் சிங் ஆகியோர் தான் இத்தொடர் முழுவதிலும் இந்திய அணிக்கு கைகொடுக்க வேண்டும். யூசுப் பதான், ஆல் -ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா, விக்கெட் கீப்பர் சகா போன்றவர்கள் நம்பிக்கை தருகின்றனர்.

அஷ்வின் வருகை:

வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில் ஆஷிஸ் நெஹ்ரா, ஸ்ரீசாந்த், முனாப் படேல், வினய் குமார் உள்ளனர். சுழற்பந்து வீச்சிற்கு ஐ.பி.எல்., தொடர்களில் நம்பிக்கை அளித்த அஷ்வின், அணிக்கு உதவுவார் என்று தெரிகிறது.

மெக்கலம் பலம்:

நியூசிலாந்து அணியின் பேட்டிங்கிற்கு முதுகெலும்பாக இருப்பவர் பிரண்டன் மெக்கலம் தான். டெஸ்ட் தொடரில் இரட்டைசதம் அடித்துள்ள இவர், ஒருநாள் தொடரில் சாதிக்க காத்திருக்கிறார். இவருடன் அனுபவம் வாய்ந்த ஸ்காட் ஸ்டைரிஸ், ரோஸ் டெய்லர் ஆகியோரும் உள்ளனர்.

தவிர, கப்டில், எலியாட், ஹாப்கின்ஸ், நாதன் மெக்கலம் இளம் வில்லியம்சன் இவர்களுடன் கேப்டன் வெட்டோரியும் தன்பங்கிற்கு ரன் குவிக்கவுள்ளார். காயம் காரணமாக ஜெசி ரைடர், ஒருநாள் தொடரில் இருந்து விலகியது அணிக்கு பின்னடைவு தான்.

பவுலிங்கில் கைல் மில்ஸ், பிராங்க்ளின், டேரல் டபி மற்றும் ஆன்டி மெக்கே ஆகியோர் கைகொடுக்கலாம். சுழலில் வெட்டோரியுடன் ஆல்- ரவுண்டர் ஸ்டைரிஸ், நாதன் மெக்கலமும் ரன்வேகத்தை குறைக்க உதவலாம்.

சமீபத்தில் வங்கதேசத்து எதிரான ஒருநாள் தொடரில் (0-4) மோசமான தோல்வியடைந்த நியூசிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற முயற்சிக்கலாம். அதேநேரம், இந்திய அணியின் இளம் வீரர்கள், தங்களது திறமையை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால், ரசிகர்கள் கடும் போட்டியை எதிர்பார்க்கலாம்.


டிக்கெட் விற்பனை மந்தம்

கவுகாத்தி நேரு மைதானத்தில் நடக்கும் முதல் ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மந்தமாக உள்ளது. விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட 16,000 டிக்கெட்டுகளில், 6 ஆயிரம் மட்டுமே விற்றுள்ளதாக தெரிகிறது. மைதானத்தில் மாலை 3.45க்கு வெளிச்சம் குறைந்து விடும் என்பதால், மழை காரணமாக போட்டி 100 ஓவர்கள் முழுமையாக நடக்காது என்பதால், ரசிகர்கள் ஆர்மில்லாமல் இருப்பதாக தெரிகிறது.

தரமான ஆடுகளம்

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கு நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து, 27 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து திணறி, பின் தோல்வியடைந்தது. இதுகுறித்து ஆடுகள தயாரிப்பாளர் சுனில் பருவா கூறுகையில்,"" கடந்த போட்டியின் முடிவால், ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்தேன். அதுகுறித்து மீண்டும் பேச விரும்பவில்லை. ஆனால், தற்போது சிறப்பான ஆடுகளத்தை தந்துள்ளேன்,'' என்றார்.

மழை வாய்ப்பு

முதல் ஒருநாள் போட்டி நடக்கும் கவுகாத்தியில், அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி, குறைந்தபட்சம் 15 டிகிரி செல்சியாக இருக்கும். இன்று மழை வருவதற்கு 30 சதவீதம் வாய்ப்புகள் உள்ளது.

இம்மைதானத்தில் இதுவரை...

* இந்திய அணி இங்கு பங்கேற்ற 11 போட்டிகளில், 5 ல் வெற்றி, 4ல் தொல்விடைந்துள்ளது. 2 போட்டிகள் ரத்துசெய்யப்பட்டது.

* பேட்டிங்கில் இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிராக (2002), அதிகபட்சமாக 333?6 ரன்கள் எடுத்துள்ளது. குறைந்த அளவாக 135 ரன்களுக்கு (வெஸ்ட் இண்டீஸ், 1987) சுருண்டது.

வெற்றி அதிகம்

இந்தியா, நியூசிலாந்து அணிகள் இதுவரை 83 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா 41, நியசிலாந்து 37 ல் வென்றுள்ளது. 5 போட்டிகளுக்கு முடிவு கிடைக்கவில்லை.

இளம் வீரர்கள் அசத்துவார்கள்: காம்பிர்

இன்றைய போட்டியில் இளம் வீரர்கள் தங்களது திறமையை நிரூபிப்பார்கள் என்று நம்புவதாக கேப்டன் காம்பிர் தெரிவித்தார். இதுகுறித்து காம்பிர் கூறியது:

அணியில் உள்ள பல இளம் வீரர்கள், சர்வதேச அனுபவம் பெற்றவர்கள். உலக கோப்பை தொடருக்கு முன்பு நடக்கும் கடைசி ஐந்து போட்டிகள் என்பதால், தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். இதனால் எங்கள் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பவுலிங்கில் ஜாகிர் கான் இல்லையென்றாலும், 100க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்ற ஆஷிஸ் நெக்ரா மற்றும் முனாப் படேல், அஷ்வின் போன்ற சிறப்பான வீரர்கள் உள்ளனர். யுவராஜ் சிங்கை பொறுத்தவரையில், என்ன செய்யவேண்டும் என்பது அவருக்கு தெரியும். அவர் ஒரு சிறந்த "மேட்ச் வின்னர்'. தவிர, சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தன்னை நிரூபித்துள்ளார்.

ஒருசில இன்னிங்சை வைத்து முடிவு எடுக்கக்கூடாது. இதுபோன்ற வீரர்களை வைத்து தான் இந்தியா டெஸ்டில் "நம்பர்-1', ஒருநாள் போட்டியில் "நம்பர்-2' இடத்தை பிடித்தது,'' என்றார்.

சந்தேகத்தில் மெக்கலம்

மூன்றாவது டெஸ்டில் இடுப்பு காயத்தால் அவதிப்பட்ட நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கலம், இன்னும் முழுமையாக குணமடையவில்லை. நேற்று மதியம் பயிற்சியின் போது இவரை காண முடியவில்லை. இதனால் இன்று இவர் களமிறங்குவது சந்தேகம் தான்.

இதுகுறித்து கேப்டன் வெட்டோரி கூறுகையில்,"" காயத்தால் அவதிப்படும் மெக்கலம் விளையாடுவார் என்றால், விக்கெட் கீப்பிங் பணியையும் சேர்த்து கவனிப்பார். இதுகுறித்து போட்டி துவங்கும் முன்தான் இறுதி முடிவெடுக்க முடியும். அதற்கு முன் எதுவும் கூறஇயலாது,'' என்றார்.

உலககோப்பையை இந்தியா வெல்லும்

2011ம் உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்த உள்ளன. போட்டிகள் தொடங்க இன்னும் ஒருசில மாதங்களே உள்ளன.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியதாவது:டோனி தலைமையிலான இந்திய அணி உலககோப்பையை வெல்வதற்கான திறமையுடன் உள்ளது.

போட்டி நெருங்குவதால் பந்து வீச்சாளர்கள் காயம் ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும். மேலும் அணி சமபலத்துடன் இருப்பதில் கூடுதல் அக்கறை எடுத் துக்கொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்த அணியுமே வளர்ச்சி பெற்றுள்ளது. கோப்பையை வெல்வதற்கு உண்டான திறமையுடன் வீரர்கள் பலர் உள்ளனர். பீல்டிங் மற்றும் ரன்குவிப்பதற்காக ஓடுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

வேகப்பந்து வீச்சாளர்களின் திறமைக்கு தகுந்தபடி அவர்களுக்கான பயிற்சி இல்லை. ஜிம்மில் உள்ள உபகரணங்கள் பேட்ஸ்மேன்களுக்கும் சாதாரண பந்து வீச்சாளர்களுக்கும் தகுந்தபடி தான் உள்ளது.

அடுத்தடுத்த ஆட்டங்களால் வேகப்பந்து வீச்சாளர்கள் 10 முதல் 20 ஓவர்கள் வீச வேண்டியது உள்ளது. இதனால் அவர்களுக்கு கால்கள் வலிமையாக இருக்க வேண்டும். இதற்காக பவுலர்கள் அதிக நேரம் ரன்னிங் பயிற்சியில் ஈடுபடவேண்டும்.

இது மராத்தான் ஓட்டம் போல் அமைய வேண்டும். கால் பகுதிகளில் அதிக அளவு சதை போடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதை பின்பற்றினால் உலகக்கோப்பை இந்தியா வுக்கே.

ஐ.பி.எல். போட்டியில் ஒரு பைசா கூட ஊழல் செய்யவில்லை

ஐ.பி.எல். போட்டி தலைவர் லலித்மோடி மீது ஊழல் புகார் எழுந்ததை அடுத்து அவர் நீக்கப்பட்டார். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனால் லலித்மோடி வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கிறார். அங்கிருந்தபடி அவர் நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

ஐ.பி.எல். போட்டி வளர்ச்சிக்கு நான் முழுமையாக பாடுபட்டேன். ஐ.பி.எல். அணிகளில் எனது நண்பர்கள் பலர் முதலீடு செய்தார்கள். இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஐ.பி.எல். போட்டியில் நான் எந்த தவறும் செய்ய வில்லை. ஒரு பைசா கூட ஊழலும் செய்யவில்லை.

இந்திய கிரிக்கெட் சங்கத்தில் உறுப்பினர் என்ற முறையில் கிரிக்கெட் சங்க வளர்ச்சிக்கு பாடுபட்டேன். ஐ.பி.எல். மூலம் நான் கொண்டு வந்த திட்டங்களால் கிரிக்கெட் சங்கத்துக்கு ஏராளமாக லாபம் அடைந்தது. அடுத்த 10 ஆண்டில் ரூ. 10 ஆயிரம் கோடி வரை கிரிக்கெட் சங்கத்துக்கு வருமானம் கிடைக்க வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தேன்.

100 சதவீதம் கிரிக்கெட் சங்கத்துக்காகவே உழைத்தேன். இதன் மூலம் நான் எந்த பலனையும் பெற வில்லை.

எனது வளர்ச்சியை கண்டு சிலர் பெறாமை அடைந்தனர். அவர்கள் தான் என்னை சிக்க வைத்துள்ளனர். கிரிக்கெட் சங்கத்தில் எனக்கு எதிரான குழு ஒன்று செயல்படுகிறது. அவரகள் என்னை வீழ்த்த சதி செய்கின்றனர். இந்த விஷயத்தில் இதற்கு மேல் எதையும் சொல்ல விரும்ப வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.பி.எல். போட்டியில் இருந்து கொச்சி அணி விலகல்

ஐ.பி.எல் போட்டி சீசன் 4-ல் புதிதாக சேர்க்கப்பட்ட கொச்சி அணி பங்குகள் பிரச்னைகள் சிக்கி தவித்தது.

27-ந்தேதிக்குள் யார் யாருக்கு எவ்வளவு பங்குகள் உள்ளன என்ற விவரங்களை வரும் அளிக்க வேண்டும் என பிசிசிஐ இறுதி கெடு விதித்தது.

இந்த அவகாசம் முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் கொச்சி அணி நிர்வாகம் தரப்பில் பிசிசிஐக்கு நேற்று ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அதில், ஐபிஎல் சீசன் 4-ல் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த தகவலை பிசிசிஐயும் உறுதி செய்துள்ளது. இதை தொடர்ந்து புதிய அணியை தேர்வு செய்தவற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் பிசிசிஐ களமிறங்கியுள்ளது

ரெய்னாவுக்கு ஓய்வு தேவை; டோனி

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டும், ஐதராபாத்தில் நடந்த 2-வது டெஸ்டும் “டிரா” ஆனது. நாக்பூரில் நடந்த 3-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 198 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த டெஸ்ட் தொடரில் சுரேஷ் ரெய்னாவின் ஆட்டம் மிகவும் கவலை அளிக்கும் வகையில் இருந்தது.

அவரது சராசரி 6.5 ரன்கள் ஆகும். 3 டெஸ்டிலும் சேர்த்து 26 ரன்களே (4இன்னிங்ஸ்) எடுத்துள்ளார். அதிகபட்ச ரன் 20 ஆகும்.

இது குறித்து டோனி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சுரேஷ் ரெய்னா தொடர்ந்து விளையாடி வருகிறார். இதனால் எப்போதுமே சிறப்பாக ஆட வேண்டும் என்ற நெருக்கடி இருக்கிறது. தொடர்ந்து விளையாடுவதால் அவருக்கு ஓய்வு தேவை. நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டிலேயே ரெய்னாவுக்கு ஓய்வு கொடுக்க நினைத்தோம்.

அது முடியாமல் போனது. இதே போல நியூசிலாந்துக்கு எதிரான முதல் 2 போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்தோம். ஆனால் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு தேவைப்பட்டதால் அது இயலாமல் போய்விட்டது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ரெய்னாவுக்கு ஓய்வு கொடுக்கப்படும்.

ராகுல் டிராவிட்டின் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது. 3-வது வீரருக்கு அவர் மிகவும் பொருத்தமானவர் இஷாந்த் சர்மா சரியான நேரத்தில் சிறப்பாக வீசினார். இதே போல ஹர்பஜன், ஒஜாவின் பந்து வீச்சும் அபாரமாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் 2 ஒரு நாள் போட்டியில் டோனிக்கு ஒய்வு கொடுக்கப்பட்டுள்ளது. காம்பீர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 129 புள்ளிகளுடன் இந்தியா உள்ளது.

புதிய வரலாறு படைத்தார் சோம்தேவ்

ஆசிய விளையாட்டு டென்னிஸ், ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், முதன் முதலாக தங்கம் வென்று, புதிய வரலாறு படைத்தார்.

சீனாவின் குவாங்சு நகரில் 16வது ஆசிய விளையாட்டு போட்டி நடக்கிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் டென்னிசின் பைனல் நடந்தது. இதில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினை எதிர்கொண்டார்.

இதன் முதல் சுற்றில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சோம்தேவ், அடுத்தடுத்து கேம்களை வென்று முன்னிலை பெற்றார். முடிவில் 6-1 என எளிதாக சோம்தேவ் முதல்செட்டை கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டில் இஸ்டோமின் பதிலடி தருவார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த செய்த தவறுகள், சோம்தேவுக்கு சாதகமாக அமைந்தது. இதையடுத்து இரண்டாவது செட்டையும் 6-2 என, எளிதாக சோம்தேவ் கைப்பற்றினார்.

இறுதியில் 6-1, 6-2 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்ற சோம்தேவ் தேவ்வர்மன், முதன்முறையாக ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று வரலாறு படைத்தார். ஏற்கனவே, ஆண்கள் இரட்டையர் பிரிவில் சனம் சிங்குடன் சேர்ந்து, சோம்தேவ் தங்கம் வென்று இருந்தார்.

இதற்கு முன் ஆசிய விளையாட்டில் லியாண்டர் பயஸ் (1994), மகேஷ் பூபதி (1998), ஸ்ரீநாத் பிரகலாத் (1998) ஆகியோர் வெண்கலம் மட்டுமே வென்று இருந்தனர்.

அதிக பதக்கம்:

கடந்த 2006 தோகா ஆசிய போட்டி டென்னிசில் இந்திய அணி 2 தங்கம், 2 வெள்ளியுடன் மொத்தம் 4 பதக்கங்கள் பெற்றிருந்தது. இம்முறை லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாமல், இந்திய டென்னிஸ் அணி சீனா சென்றது.

இதனால் ஒருசில பதக்கங்கள் பெறுவதே அதிகம் என்ற நிலையில், சோம்தேவ், சனம் சிங், சானியா மிர்சா போன்ற இளம் வீரர்களின் எழுச்சியால் இந்திய அணி 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்கள் பெற்று அசத்தியது.

பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்தியது இந்தியா

ஆசிய விளையாட்டு ஹாக்கியில் பாகிஸ்தானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறியது.

சீனாவின் குவாங்சு நகரில் ஆசிய விளையாட்டு போட்டி நடக்கிறது. இதில் ஆண்கள் ஹாக்கி "பி' பிரிவில் இன்று நடந்த முக்கிய லீக் போட்டியில், இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இதற்கு முன் இந்த ஆண்டு நடந்த அஸ்லான்ஷா (4-2), உலக கோப்பை (4-1) மற்றும் காமன்வெல்த் போட்டி (7-4) என வரிசையாக மூன்று தொடர்களில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது.

இம்முறை ஆசிய விளையாட்டில் இந்திய அணி, ஹாங்காங்கை 7-0 என்றும், வங்கதேசத்தை 9-0 என்ற கோல் கணக்கிலும் பந்தாடியது. இதே அசத்தல் இன்று பாகிஸ்தானுக்கு எதிராகவும் தொடர்ந்தது.

போட்டி துவங்கிய சில நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் கிடைத்தது. இதை பெனால்டி கார்னர் "ஸ்பெஷலிஸ்ட்' சந்தீப் சிங், கோலாக மாற்றினார். ஆனால் அடுத்த சில நிமிடத்தில் பாகிஸ்தான் அணியின் ரேகன் பட், பீல்டு கோல் அடித்து பதிலடி தந்தார்.

பின் இந்தியாவுக்கு தரம் வீர் (16 வது நிமிடம்) மற்றொரு கோல் அடிக்க முதல் பாதியில் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் பாகிஸ்தானின் அபாசி ஒரு கோல் அடிக்க ஸ்கோர் 2-2 என சமன் ஆனது. பின் 47வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை, சந்தீப் சிங் மீண்டும் கோலாக மாற்றி அசத்தினார்.

இறுதியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து "பி' பிரிவில் இருந்து இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

ஐ.பி.எல். - கொச்சி அணிக்கு பதிலாக அகமதாபாத் அல்லது ராஜ்கோட்


ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெகட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூர் ராயல் சேலஞர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றன.

 
முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்சும், 2-வது போட்டியில் டெக்கான் சார்ஜர்சும், 3-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்சும் சாம்பியன் பட்டம் பெற்றது.

 
4-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு நடக்கிறது. இதில் புதிதாக கொச்சி, புனே அணிகள் சேர்க்கப்பட்டன. இதனால் 4-வது ஐ.பி.எல். போட்டியில் 10 அணிகள் பங்கேற்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.

 
இதற்கிடையே விதி முறைகளை மீறி செயல்பட்டதாக கூறி ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் அதிரடியாக நீக்கப்பட்டன. 8 அணிகள் தான் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

 
இதேபோல புதிதாக இடம் பெற்ற கொச்சி அணியில் சிக்கல் இருந்தது. பங்குதாரர்கள் இடையே இணைப்பு உருவாவுதால் பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக தீர்வு ஏற்பட 1 மாதம் வரை அந்த அணிக்கு கெடு விதிக்கப்பட்டது.

 
ஆனால் இதுவரை கொச்சி அணிக்குள்ள பிரச்சினை தீர்ந்த பாடில்லை. வருகிற 27-ந்தேதி அந்த அணியின் காலக்கெடு முடிகிறது.
 

இதற்கிடையே கொச்சி அணி நீக்கப்படும் பட்சத்தில் புதிததாக ஒரு அணியை ஏலத்தில் எடுக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
 

கொச்சி அணிக்கு பதிலாக அகமதாபாத் அல்லது ராஜ்கோட் அணி தேர்வு பெறும் என்று தெரிகிறது. இதற்கான ஏலம் டிசம்பர் 15-ந்தேதி நடைபெறும்.
 

இதுதொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி கூறும்போது, அகமதாபாத் மற்றும் ராஜ்கோட் ஏலத்தில் கட்டாயம் பங்கேற்கலாம் என்றார்.அகமதாபாத் அணியை வாங்க அனில் அம்பானியும், அதானி குரூப்பும் விரும்புகிறது.

4-வது ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 8-ந்தேதி தொடங்குகிறது. வீரர்கள் ஏலம் ஜனவரி 8 மற்றும் 9-ந்தேதி நடக்கிறது.