மீண்டும் அசத்துமா கோல்கட்டா அணி

சாம்பியன்ஸ் லீக் தொடரில் இன்று கோல்கட்டா நைட் ரைடர்ஸ், வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் இமாலய வெற்றி பெற்றால் தான் அரையிறுதி வாய்ப்பை கோல்கட்டா அணி தக்க வைத்துக் கொள்ள முடியும்.

மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. இன்று பெங்களூருவில் நடக்கும் "பி' பிரிவு லீக் போட்டியில் கோல்கட்டா அணி, வாரியர்ஸ் அணியை சந்திக்கிறது.


காம்பிர் நம்பிக்கை:

லீக் சுற்றில் கடைசி போட்டியில் பங்கேற்கும் கோல்கட்டா அணி, இதுவரை ஒரு வெற்றியுடன் 2 புள்ளி தான் பெற்றுள்ளது. இன்று வெற்றி பெற்றால் மட்டும் போதாது. நல்ல "ரன் ரேட்' பெற வேண்டும். அப்போது தான் அரையிறுதி பற்றி நினைத்து பார்க்க முடியும்.

இதனை மனதில் வைத்து கேப்டன் காம்பிர், காலிஸ், ஹாடின் ஆகியோர் பொறுப்பாக ஆட வேண்டும். பெங்களூரு அணிக்கு எதிராக அதிரடியாக ரன் சேர்த்த இவர்கள், அணிக்கு வெற்றி தேடி தந்தனர். மீண்டும் இதே போன்று அசத்த வேண்டும்.


பிரட் லீ வேகம்:

பந்துவீச்சில் பிரட் லீயின் "வேகம்' வாரியர்ஸ் அணிக்கு தொல்லை தரலாம். காலிஸ், உனத்கட், இக்பால் அப்துல்லா, பாட்யா ஆகியோரும் கைகொடுக்கும் பட்சத்தில் சுலப வெற்றி பெறலாம்.


பலமான வாரியர்ஸ்:

வாரியர்ஸ் அணி இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது. இன்றும் இவர்களின் ஆதிக்கம் தொடரலாம். ஜான் ஸ்மட்ஸ், பிரின்ஸ், இங்ராம், மார்க் பவுச்சர், போத்தா என அனைத்து வீரர்களும் பேட்டிங்கில் சாதித்து வருவது அணியின் பலமாக உள்ளது.

டிசாட்சொபே, போத்தா, பார்னல், நிக்கி போயே போன்றோர் பந்துவீச்சில் அசத்துகின்றனர். இதனால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க கோல்கட்டா அணியும், தொடர் வெற்றி பெற வாரியர்ஸ் அணியும் உறுதியாக இருப்பதால், அனல் பறக்கும் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.

கனவு இல்லத்தில் குடியேறினார் சச்சின்

மும்பையில் தனது சொந்த வீட்டில் குடியேறினார் சச்சின். 5 மாடிகள் கொண்ட இந்த சொகுசு மாளிகையில் விநாயர் கோயில், நீச்சல் குளம், "மினி-தியேட்டர்' உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். இவர், விளையாட்டு வீரர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டில் குடியிருந்து வந்தார். கடந்த 2007ல் ரூ. 39 கோடிக்கு மும்பை புறநகர்ப் பகுதியான பந்த்ராவில் உள்ள பெர்ரி கிராஸ் ரோட்டில் பழைய மாளிகை ஒன்றை வாங்கினார்.

6 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த விசாலமான இடத்தில், ரூ. 50 கோடி செலவில் புதிய வீடு கட்டினார். பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், நேற்று முறைப்படி குடியேறினார்.

இது குறித்து சச்சின் கூறுகையில்,""சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாக இருக்கும். இந்தக் கனவும் எனக்கும் இருந்தது. இதனை நனவாக்க முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி. முன்பு வசித்த வீடு, விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் கிடைத்தது. தற்போது காலி செய்து விட்டேன். இதன் மூலம் வேறு ஒரு வீரர் இங்கு தங்க முடியும்.

இங்கிலாந்து தொடருக்கு முன், புது வீட்டுக்கான "கிரஹ சாந்தி', "வாஸ்து பூஜா' போன்றவற்றை கடந்த ஜூன் 11ம் தேதி செய்தோம். இதற்கு பின் மும்பைக்கு வர இயலவில்லை. தற்போது இங்கு இருப்பதால், எனது அம்மாவை அழைத்து வந்து வீட்டை காண்பித்தேன்,''என்றார்.

ஒரே தளத்தில் 41 கார்கள்...

சச்சின் வீடு ஐந்து மாடிகள் கொண்டது. முழுவதும் "ஏசி' வசதி செய்யப்பட்டது. வெளியில் இருந்து பார்த்தால் மூன்று மாடிகள் மட்டும் தெரியும் வகையில் "காம்பவுண்டு' சுவர் நல்ல உயரத்துக்கு கட்டப்பட்டுள்ளது. நவீன "சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

* தரை தளத்தில் சச்சினுக்கு பிடித்த விநாயர் கோயில் உள்ளது. தவிர இவர் பெற்ற ஏராளமான விருதுகளை வைக்க தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. "டைனிங்' அறையும் உள்ளது.

* முதல் தளத்தில் வேலையாட்களின் அறை, கண்காணிப்பு அறைகள் உள்ளன.

* இரண்டாம் தளம் முழுவதும் சச்சின் வாங்கி குவித்துள்ள கார்கள் "பார்க்கிங்' செய்யப்பட உள்ளன. இங்கு இவரது 41 கார்கள் நிறுத்தப்பட உள்ளன.

* மீதமுள்ள 3 தளங்களில் சச்சின், அவரது மகன் அர்ஜுன், மகள் சாரா உள்ளிட்ட குடும்பத்தினர் தங்க உள்ளனர். ஐந்தாவது தளத்தில் சச்சின், அவரது மனைவி அஞ்சலிக்கு பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு "யு.எப்.ஒ., கிளப்' சார்பில் 25 பேர் அமர்ந்து சினிமா பார்க்கும் வகையில்
"மினி-தியேட்டர்' அமைக்கப்பட்டுள்ளது.

* மொட்டை மாடியில் நீச்சல் குளம் உள்ளது.

சிறுவர்கள் காயம்

நேற்று புது வீட்டுக்கு வந்த சச்சினை காண அந்தப் பகுதியில் இருந்த 5 முதல் 8 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் திரண்டனர். ஏராளமான "மீடியா' குழுவினரும் குவிந்தனர். சச்சின் வந்ததும்
தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிறுவர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

* சச்சின் வீட்டின் எதிரே, அவரை வரவேற்று பெரிய "பேனர்' வைக்க முற்பட்டனர். இதற்கு "அவாமி' நலச் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவே, சர்ச்சை ஏற்பட்டது. பின் சுமுக ஏற்பட, "பேனர்' வைக்கப்பட்டது.

சேவக் மீது கிராம மக்கள் புகார்

சர்வதேச பள்ளியை துவக்கிய சேவக் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். ஒப்பந்தப்படி இவர், கிரிக்கெட் பயிற்சி அகாடமியை அமைக்கவில்லை என, கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக். இவர், அரியானாவில் கிரிக்கெட் பயிற்சி அகாடமி அமைக்க திட்டமிட்டுள்ளார்.

இதனை ஏற்று ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள சிலானி கே÷ஷா கிராம மக்கள், மிக குறைந்த விலைக்கு(ஒரு ஏக்கர் ரூ. 3 லட்சம்) 23 ஏக்கர் நிலத்தை 33 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கியுள்ளனர்.

இங்கு 5 நட்சத்திர அந்தஸ்தில் சர்வதேச பள்ளியை சேவக் நிறுவியுள்ளார். இப்பள்ளியில் "மெகா கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம்.

இதனை கேள்விப்பட்ட கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர். ஒப்பந்தப்படி பயிற்சி அகாடமி அமைக்காமல், பள்ளியை துவக்கிய சேவக் பெருமளவில் பணம் சம்பாதிப்பதாக புகார் கூறினர்.

இவரது இந்த திட்டத்தால் வளரும் வீரர்களுக்கு எவ்வித பயனும் இல்லை என்று குற்றம்சாட்டினர்.

இது குறித்து போலீஸ் துணை கமிஷனர் சந்தர் பிரகாஷ் கூறுகையில்,""கிராம மக்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் கிரிக்கெட் அகாடமி தவிர, பள்ளி ஒன்றும் திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்,என்றார்.

சச்சின் தந்த உற்சாகம் - ஹர்பஜன்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தந்த உற்சாகம் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது, என, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த, மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

இத்தொடரில் காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் சச்சின் விளையாடவில்லை. இவருக்கு பதிலாக ஹர்பஜன் சிங் கேப்டனாகவும், சைமண்ட்ஸ் மாற்று வீரராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

சென்னை-மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியை சச்சின், சக வீரர்களுடன் அமர்ந்து
பார்த்தார்.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறியதாவது: சாம்பியன்ஸ் லீக் தொடரை வெற்றியுடன் துவக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. காயம் காரணமாக சச்சின் விளையாடாத போதிலும், போட்டியை காண வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இப்போட்டிக்கு முன் மற்றும் போட்டியின் போது இவர் அளித்த உற்சாகம் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கியது. அணியில் இவர் இல்லாதது பெரிய இழப்பு.

இதேபோல முனாப் படேல், ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்களும் காயம் காரணமாக விளையாடாதது ஏமாற்றமாக உள்ளது.

இவர்கள் இல்லாததை இளம் வீரர்கள் சிறப்பாக பூர்த்தி செய்தனர். இந்த வெற்றி, அடுத்து வரும் போட்டிகளில் சாதிக்க ஊக்கமாக இருக்கும். வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா, பேட்டிங்கிலும் சாதித்தது வெற்றிக்கு முக்கிய பங்குவகித்தது.

இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.

அக்தரால் எப்போதும் தொல்லை தான்

அக்தர் அணியில் விளையாடிய போதும் சரி, ஓய்வு பெற்ற பின்பும் சரி, அப்போதும், இப்போதும் இவரால் தொல்லை தான்,'' என, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய பவுலர் சோயப் அக்தர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர், "கான்ட்ரவர்சியலி யுவர்ஸ்' என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். இதில் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், டிராவிட் உள்ளிட்ட பல சர்வதேச வீரர்களை வம்புக்கு இழுத்துள்ளார்.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்தியாவின் ஹர்பஜன் சிங், வினோத் காம்ப்ளி உள்ளிட்ட பலர் அக்தருக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.


இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறியது:

தனது வேகப்பந்து வீச்சைக் கண்டு சச்சின் பயந்தார் என அக்தர் தெரிவித்துள்ளார். இது முற்றிலு<ம் தவறானது. கடந்த 1989ல் சியால்கோட்டில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான நான்காவது டெஸ்ட் நடந்தது. இதில் சச்சின் திறமையை சொல்லியே ஆகவேண்டும். ஆடுகளத்தில் அதிகமாக புற்கள் இருந்தன. வக்கார் யூனிசும், நானும் மிகவேகமாக பவுலிங் செய்தோம்.


துணிச்சல் சச்சின்:

இதில் வக்கார் வீசிய பந்து, சச்சினின் முகவாய்கட்டையில் தாக்கியது. உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார் சச்சின். சிகிச்சைக்குப் பின் மீண்டும் களமிறங்கிய இவர், அரைசதம் அடித்து அசத்தினார். அப்போது சச்சினுக்கு வயது 16. அவரிடம் எந்த பயமும் இல்லை. இந்நிலையில் சச்சின் பயந்தார் என அக்தர் எப்படி கூறுகிறார் என்று வியப்பாக உள்ளது.


எழுதப்படாத விதி:

அக்தரின் கிரிக்கெட் வாழ்க்கை வீழ்ச்சிக்கு காரணம் அவர் தான் என்பது அவருக்கும் தெரியும், எனக்கும் தெரியும், ஏன்? இந்த உலகத்துக்கே தெரியும். அக்தர் குறித்து நிறைய பேசலாம். ஆனால் அவரை மேலும் இழிவுபடுத்த விரும்பவில்லை. ஒருசில உண்மைகளை "மீடியாவுக்கு' தெரிவிக்கக்கூடாது என்பது, வீரர்கள் மத்தியில் உள்ள எழுதப்படாத விதி. இதை அக்தர் மீறிவிட்டார்.


எப்போதும் பிரச்னை:

இவரது கிரிக்கெட் வாழ்க்கையை நான் அழிக்க முயற்சித்தேன் என்கிறார். என்னைப் பொறுத்தவரையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) என்ன சொல்கிறதோ, அதைத் தான் நானும் செய்தேன். மொத்தத்தில் அக்தர் அணியில் இருக்கும் போதும் பிரச்னை தான். இப்போது ஓய்வு பெற்ற பின்பும் பிரச்னை தான்.


மீண்டும் சோதனை:

இங்கிலாந்தில் அடைந்த மோசமான தோல்விக்குப் பின், இந்திய அணி ஆஸ்திரேலியா செல்லவுள்ளது. இது தோனி அணிக்கு மற்றொரு சோதனை தான். ஏனெனில் இங்குள்ள ஆடுகளங்கள் நன்கு "பவுன்ஸ்' ஆகும். இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர் நடப்பதற்கு, எப்போதும் நான் ஆதரவாகவே இருப்பேன்.

இவ்வாறு வாசிக் அக்ரம் கூறினார்.

அக்தரை கண்டு பயந்தாராம் சச்சின்

எனது வேகப்பந்து வீச்சை கண்டு சச்சின் பயந்தார். சச்சினும், டிராவிட்டும் வெற்றி நாயகர்கள் அல்ல,''என, தனது சுயசரிதையில் குறிப்பிட்டு சர்ச்சை கிளப்பியுள்ளார் சோயப் அக்தர்.

பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய பவுலர் அக்தர். சமீபத்திய உலக கோப்பை தொடருடன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர், "கான்ட்ரவர்சியலி யுவர்ஸ்' என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். வழக்கமாக சுயசரிதை எழுதும் வீரர்கள் எதாவது பிரச்னைக்குரிய செய்தியை வெளியிட்டு, விளம்பரம் தேடுவார்கள். இதற்கு அக்தரும் விதிவிலக்கல்ல.

இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

சர்வதேச கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசின் ரிச்சர்ட்ஸ், லாரா, பாண்டிங் (ஆஸி.,) ஆகியோர் சிறந்த பேட்ஸ்மேன்கள். பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்திய இவர்கள், போட்டியை வென்று தரும் திறமை படைத்தவர்கள். ஆனால் அதிக ரன்கள் குவித்த சச்சின், டிராவிட் போன்ற வீரர்களிடம் இந்தத் திறமை இல்லை. இவர்களுக்கு போட்டியை எப்படி முடிக்க வேண்டும் என்று தெரியாது.


பயந்த சச்சின்:

கடந்த 2006 தொடரில், நாங்கள் தோற்கும் நிலையில் இருந்தோம். அப்போது சச்சின் "டென்னிஸ் எல்போ' காயத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார். அப்போது நடந்த பைசலாபாத் டெஸ்டில், சச்சினுக்கு பந்து வீசினேன். அப்போது மிகவேகமாக வீசிய "பவுன்சர்' பந்துகளை எல்லாம், சச்சின் பயத்தால் அடிக்காமல் விட்டுவிட்டார்.

இது மிகவும் வியப்பாக இருந்தது. மந்தமான ஆடுகளத்தில் சச்சின் இப்படி செயல்படுவதை அப்போது தான் முதன் முறையாக பார்த்தேன். இவருக்கு வேகமாக "பவுன்சர்' வீசினால் தடுமாறுவார் என்று பிறகு தான் தெரிந்து கொண்டேன். இதை வைத்து தான் அவரை அவுட்டாக்கினேன்.


தூக்கம் வராது:

பந்தை சேதப்படுத்தும் செயலை முதலில் துவக்கியது நாங்களாக இருக்கலாம். ஆனால், இப்போது உலகின் அனைத்து வீரர்களும் இப்படித்தான் செய்கின்றனர். ஏனெனில், மந்தமான ஆடுகளத்தில் இப்படிச் செய்தால் விக்கெட் வீழ்த்த முடிகிறது.

இதேபோல, நானும் பலமுறை இந்த செயலை செய்தேன். 2003 <உலக கோப்பை தொடருக்குப் பின், தம்புலாவில் நடந்த முத்தரப்பு தொடரில், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்தினேன். இச்செயலுக்காக பலமுறை எச்சரிக்கப்பட்டேன். அபராதம் விதித்தாலும், தொடர்ந்து தவறு செய்தேன். என்ன செய்ய? பந்தை சுரண்டவில்லை என்றால் எனக்கு தூக்கமே வராது.


எல்லோரும் அப்படித்தான்:

நான் மட்டுமல்ல, பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் பந்தை சேதப்படுத்துவதை, இப்போதும் வழக்கமாக கொண்டுள்ளனர். இதை முதன் முதலாக நான் ஒத்துக்கொண்டுள்ளேன். சர்வதேச அளவில் இதைத் தடுக்க முடியாது. பேசாமல், பந்தை சேதப்படுத்துவது சட்டரீதியாக அறிவித்து விடலாம். அப்போது தான் கிரிக்கெட்டுக்கு நல்லது.


தகுதி இல்லை:

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருக்க சோயப் மாலிக்கிற்கு தகுதியில்லை. இருப்பினும், இவரை பி.சி.பி., தலைவர் நசீம் அஷ்ரப் கேப்டனாக்கினார். ஏனெனில், சோயப் மாலிக், அஷ்ரபிற்கு எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்தார்.
இவ்வாறு அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

சச்சின் பதிலடி

சோயப் அக்தரின் "பவுன்சர்களை' சிக்சருக்கும், பவுண்டரிக்கும் விரட்டியவர் சச்சின். இந்நிலையில் அக்தரின் விமர்சனம் குறித்து சச்சின் கூறுகையில்,"" அக்தர் கருத்துக்கு பதில் கூறுவது எனது தகுதிக்கு ஏற்றது அல்ல,'' என்றார்.

"ரிவர்ஸ் சுவிங்' ரகசியம்

வழக்கமாக, உணவு இடைவேளையின் போது, அம்பயர்கள் பந்தை தங்களது "கோட்டில்' வைத்து, சுவற்றில் தொங்கவிட்டு செல்வார்கள். அப்போது, எனது சக வீரர் ஒருவர் பந்தை எடுத்து சேதப்படுத்தினார். இதனால் பந்து நன்றாக "சுவிங்' ஆனது. எங்களது இச்செயலை எப்படியோ தெரிந்து கொண்ட அம்பயர்கள், அதன்பின் அறையில் வைத்து "கோட்டை' பூட்டிவிடுவர்.

ஏமாற்றிய மோடி

ஐ.பி.எல்., தொடர் குறித்து சோய்ப அக்தர் கூறுகையில்,"" கோல்கட்டா ஐ.பி.எல்., அணி உரிமையாளர், பாலிவுட் நடிகர் ஷாருக்கானிடம், எனது சம்பளம் குறித்து எதிர்ப்பு தெரிவித்தேன். அப்போதைய ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி, ஷாருக்கானும் சேர்ந்து சம்மதிக்க வைத்து, சம்பள விஷயத்தில் என்னை ஏமாற்றி விட்டனர். இது இப்போதும் எனக்கு வருத்தமாக உள்ளது,'' என்றார்.

பந்தை சேதப்படுத்துவது எப்படி?

அக்தர் கூறுகையில்,"" பந்தை சுரண்டுவது மட்டுமல்ல, இதை சேதப்படுத்த பல வழிகள் உள்ளன. எனது "பூட்ஸ்' மூலம் சுரண்டுவேன். "பேன்ட்' பாக்கெட்டில் உள்ள "ஜிப்' மீது தேய்ப்பேன். மற்றவர்கள் பெரும்பாலும் பந்தின் மீது "வேசலின்' அல்லது பசையை தடவுவர்,'' என்றார்.

சச்சினுக்கு டிராவிட் ஆதரவு

ஒருநாள் போட்டிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற சச்சினின் கருத்துக்கு, இந்திய அணியின் "சீனியர்' வீரர் டிராவிட் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகள் தொடர்ந்து பிரபலமாக நீடிக்க, பல புதிய மாற்றங்களை அமல்படுத்த வேண்டும் என இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.,) தெரிவித்து இருந்தார். இதற்கு ஐ.சி.சி., சார்பில் உடனடியாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து டிராவிட் கூறியது:

ஒருநாள் போட்டிகளை நான்கு இன்னிங்சாக பிரித்து விளையாட வேண்டும் என்ற சச்சினின் கருத்து வரவேற்கத்தக்கது.

இதுபோன்ற முறையில் ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே போட்டிகள் நடந்துள்ளன. இதிலுள்ள நன்மை, தீமைகள் குறித்தும் ஏற்கனவே தெரியும்.

இந்நிலையில், சச்சினின் கருத்தை ஐ.சி.சி., நிராகரித்தது ஏன் என தெரியவில்லை.

தற்போதுள்ள அம்பயர் தீர்ப்பு மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்.,) முறை குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இது இன்னும் சோதனை முறையில் தான் உள்ளது.

இதனால், டி.ஆர்.எஸ்., முறையில் உள்ள குறைகள் குறித்து, கிரிக்கெட் போர்டு, ஐ.சி.சி.,யிடம் வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு டிராவிட் கூறினார்.

இந்திய அணியின் கெட்ட கனவு

சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து தொடர், இந்திய அணியின் கெட்ட கனவு,'' என, தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இங்கிலாந்து சென்ற இந்திய அணி, டெஸ்ட் (0-4), "டுவென்டி-20' (0-1), ஒருநாள் (0-3) தொடரை மோசமாக இழந்தது. இதன்மூலம் ஐ.சி.சி., டெஸ்ட் ரேங்கிங்கில் "நம்பர்-1' இடத்தை இழந்தது.

இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறியதாவது: பி.சி.சி.ஐ., க்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு பின், எனது தலைமையிலான தேர்வுக்குழு மீது பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்தன.

ஆனால் என் மீதும், எங்கள் குழு மீதும் அதிக நம்பிக்கை வைத்த இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), எனது தலைமையிலான தேர்வுக்குழுவை நீடித்தது. கடந்த காலம் பற்றி கவலைப்படாமல், இனிவரும் நாட்களில் இந்திய அணியின் வளர்ச்சிக்கு முழுவீச்சில் போராடுவோம்.

தற்போது எனது கவனம் முழுவதும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் மீது உள்ளது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இங்கிலாந்து மண்ணில் கண்ட தோல்விக்கு பரிகாரம் தேடிக் கொள்ள முயற்சிப்போம்.

இதற்கு நிறைய நாட்கள் இருப்பதால், அதற்குள் சிறந்த அணியை உருவாக்கலாம். இத்தொடருக்கு முன், சொந்த மண்ணில் நடக்கவுள்ள இரண்டு முக்கிய தொடர்களில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இத்தொடர்கள், ஆஸ்திரேலிய பயணத்துக்கான சிறந்த பயிற்சியாக அமையும் என நம்புகிறேன்.

கடந்த மூன்று ஆண்டுகளில், முதல் முறையாக இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. எந்த ஒரு அணிக்கும் இதுபோன்ற சரிவுகள், சில நேரங்களில் வரத்தான் செய்யும். மோசமான தோல்விகள் குறித்து அதிகம் சிந்திக்காமல், அடுத்து வரும் போட்டிகளில் கூடுதல் கவனம் செலுத்தும் பட்சத்தில், விரைவில் இந்திய அணி எழுச்சி பெற்றுவிடும்.

இங்கிலாந்து பயணத்தை, இந்திய அணியின் கெட்ட கனவாக கருதுகிறேன். ஏனெனில் டெஸ்ட் தொடரில் முன்னணி வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. காயம் என்பது விளையாட்டின் ஒரு பகுதி. இது இயற்கையாக நிகழக்கூடியது.

இதனை நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் ஒருநாள் தொடரில் இளம் வீரர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. ஆனால் மழை காரணமாக அனைத்து போட்டிகளிலும் "டக்வொர்த்- லீவிஸ்' முறை பயன்படுத்தப்பட்டது. இதனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. ஒருநாள் தொடரின் போது ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்ட காயம் துரதிருஷ்டவசமானது.

எந்த ஒரு அணியும், "நம்பர்-1' இடத்தை எளிதில் அடைந்துவிடலாம். இதனை தக்க வைத்துக் கொள்வது கடினமான ஒன்று. இங்கிலாந்து அணி, முதலிடத்தை காப்பாற்ற கடினமாக போராட வேண்டும். அடுத்து வரும் தொடர்களில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் பட்சத்தில், விரைவில் மீண்டும் டெஸ்ட் அரங்கில் "நம்பர்-1' இடத்தை அடையலாம்.

இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.

ஒருநாள் போட்டியில் மாற்றங்கள்

ஒருநாள் போட்டியின் விறுவிறுப்பை அதிகரிக்க, பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டுமென இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் வலியுறுத்தியுள்ளார்.

"டுவென்டி-20' போட்டிகளின் வருகைக்கு பின், ஒருநாள் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு குறைந்துள்ளது. இதையடுத்து புதிய மாற்றங்களை அமல்படுத்த வேண்டும் என ஐ.சி.சி.,க்கு சச்சின் கடிதம் எழுதியுள்ளார்.

இதில் அவர் கூறியிருப்பதாவது:

டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' என, மூன்று வகையான கிரிக்கெட்டையும், சிறப்பான வகையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதுகுறித்து எனது எண்ணத்தில் தோன்றிய கருத்துக்களை தெரிவித்துள்ளேன்.

* ஒருநாள் போட்டிகளில் தலா 50 ஓவர்களாக விளையாடுவதை, தலா 25 ஓவர்கள் வீதம் நான்கு இன்னிங்சாக பிரித்து விளையாட வேண்டும்.

* இந்த நான்கு இன்னிங்சில் தலா இரண்டு பேட்டிங் "பவர்பிளே' மட்டும் வைத்துக் கொள்ளலாம்.

* முன்னணி பவுலர்கள் நான்கு பேர் தலா 12 ஓவர்கள் பவுலிங் செய்ய அனுமதிக்கலாம்.

* இந்த முறையில் விளையாடினால், பகலிரவு போட்டிகளில் "டாஸ்' வென்று முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக போட்டி இருக்காது. ஆடுகளத்தின் ஈரப்பதம், பனிப்பொழிவு இரு அணியினருக்கும் சமமாக இருக்கும்.

* வழக்கமான 50 ஓவர் போட்டிகளின் இடையில் காணப்படும், மந்தநிலையை இதன் மூலம் போக்க முடியும்.

இவ்வாறு சச்சின் தெரிவித்துள்ளார்.


45 ஓவர் கிரிக்கெட்:

சச்சின் தெரிவித்துள்ள கருத்துக்கள் ஏற்கனவே பல தொடர்களில் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இங்கிலாந்தில் உள்ளூர் கவுன்டி தொடரில் இதுபோல நான்கு இன்னிங்ஸ் கொண்ட போட்டியாக நடக்கிறது.

ஆஸ்திரேலியாவில் 45 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றி, 25 மற்றும் 20 ஓவர்களாக பிரித்து கடந்த ஆண்டு நடத்தினர். இதில் நிறைய போட்டிகள் பரபரப்பாக முடிந்தன. அதிக ரன்கள் எடுக்கப்பட்டன. அதிக விக்கெட்டுகள் விழுந்தன. இதற்கு ரசிகர்கள் ஆதரவும் அதிகம் இருந்தது.

கொச்சி அணி அதிரடி நீக்கம்

விதிகளை மீறிய கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி, ஐ.பி.எல்., அமைப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டது. இதையடுத்து ஐ.பி.எல்., அணிகளின் எண்ணிக்கை ஒன்பதாக குறைந்தது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) அமைப்பில் கடந்த ஆண்டு சேர்ந்தது கொச்சி டஸ்கர்ஸ் கேரளா. ரூ. 1,550 கோடிக்கு வாங்கப்பட்டது கொச்சி அணி, இத்தொகையை 10 ஆண்டுகளில் செலுத்த வேண்டும் என்பது விதி. இதற்காக ஒவ்வோரு ஆண்டும் ரூ. 153 கோடி செலுத்த வேண்டும்.

இதனிடையே கொச்சி அணி துவக்கத்தில் இருந்தே பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவித்தது. அணி உரிமையாளர்கள் யார் என்று சொல்வதில் துவங்கியது முதல் பிரச்னை. இதுகுறித்து அப்போதைய தலைவர் லலித் மோடி, மத்திய அமைச்சர் சசிதரூர் இடையே மோதல் வெடித்தது. இதில் இருவரது பதவிகளும் பறிபோனது. பின் அணியை நிர்வகிப்பதில் மோதல் ஏற்பட்டது.

அடுத்து ஒப்பந்தப்படி நடக்க இருந்த 18 போட்டிகளை, ஐ.பி.எல்., நிர்வாகம் 14 ஆக குறைத்தது. இதனால் தங்கள் உரிமத்தொகையில் 25 சதவீதம் குறைக்க வேண்டும் என, கொச்சி அணியுடன் சேர்ந்து, புனேயும் கோரிக்கை விடுத்தது.

இதை பி.சி.சி.ஐ., நிராகரித்தது. ஒருவழியாக சமாதானமாகி, கடந்த ஐ.பி.எல்., தொடரில் கொச்சி அணி பங்கேற்றது.

இந்நிலையில் இந்த ஆண்டு தரவேண்டிய தொகையை, கொச்சி அணியினர் இன்னும் தராமல் இழுத்தடித்து வந்தது. இதையடுத்து கொச்சி அணி, ஐ.பி.எல்., அமைப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டது. இதையடுத்து ஐ.பி.எல்., அணிகளின் எண்ணிக்கை ஒன்பதாக குறைந்தது.


இதுகுறித்து பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் கூறியது:

வழக்கமாக செலுத்த வேண்டிய தொகையை தராமல், கொச்சி நிர்வாகிகள் விதிகளை மீறி செயல்பட்டனர். சரி செய்ய முடியாத அளவுக்கு விதிகளை மீறியுள்ளனர். இதனால், கொச்சி அணியின் உரிமம் ரத்துசெய்யப்படுகிறது.

மீண்டும் இவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது என்ற பேச்சிற்கே இடமில்லை. இதையடுத்து அவர்கள் ஏற்கனவே செலுத்தி இருந்த வங்கி <உத்தரவாத தொகையை, இழப்பீடாக பி.சி.சி.ஐ., எடுத்துக்கொள்கிறது.

கொச்சி அணிக்குப் பதிலாக புதிய அணியை சேர்ப்பது, இதற்காக புதியதாக ஏலம் நடத்துவது உட்பட எவ்வித முடிவும், ராஜிவ் சுக்லா தலைமையிலான ஐ.பி.எல்., கட்டுப்பாட்டுக்குழு முடிவு செய்யும்.
இவ்வாறு சீனிவாசன் கூறினார்.


கொச்சி எதிர்ப்பு:

பி.சி.சி.ஐ.,யின் இந்த முடிவுக்கு கொச்சி அணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அணியின் இயக்குனர் முகேஷ் படேல் கூறுகையில்,"" பி.சி.சி.ஐ.,க்கு நாங்கள் எந்த பாக்கியும் தரவேண்டியது இல்லை.

உண்மையில் ஆண்டு வருவாயில் ரூ. 12 முதல் 15 கோடிவரை அவர்கள் தான் அடுத்த மாதம் எங்களுக்கு தரவேண்டியது உள்ளது. இந்நிலையில் எங்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்யது சட்ட விரோதமானது. இதை எதிர்த்து நாங்கள் கோர்ட்டில் முறையிடுவோம்,'' என்றார்.

சச்சினுக்கு பிடித்த ஷாட்

கிரிக்கெட்டில் எனக்கு பிடித்த "ஷாட்' என்றால், அது பவுலர்களுக்கு நேராக அடிக்கும் "ஸ்டிரெய்ட் டிரைவ்' தான் என, '' சச்சின் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். சமீபத்திய இங்கிலாந்து தொடரில் சர்வதேச அளவில் தனது 100வது சதம் அடிக்க தவறினார். இதனால் கடும் விமர்சனங்களை சந்தித்தார். இது குறித்து சச்சின் அளித்த பேட்டி:

இங்கிலாந்து தொடரில் ஒட்டுமொத்த வீரர்களின் செயல்பாட்டை பார்க்க வேண்டும். தனிப்பட்ட ஒரு நபரை மட்டும் கவனிக்க கூடாது. விமர்சனங்களால் ஏற்படும் நெருக்கடியை தவிர்க்கும் வகையில், நான் பத்திரிகைகள் படிப்பதில்லை.

கோடிக்கணக்கான மக்கள் சொல்வதை கேட்டு செயல்பட முடியாது. எனது ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்த முடியும். பேட்ஸ்மேன்கள் சில நேரங்களில் சிறப்பான பந்துவீச்சில் தங்களது விக்கெட்டை பறிகொடுப்பர். சொந்த தவறு காரணமாகவும் வெளியேற நேரிடும்.

இளம் வீரர்கள் கடந்த காலத்தை பற்றி நினைத்தால், தவறான விஷயங்கள் தான் ஞாபகத்துக்கு வரும். எதிர்காலத்தை பற்றி நினைத்தால், நல்ல "ஸ்கோர்' எடுக்க முடியுமா அல்லது முடியாதா என்ற வருத்தம் ஏற்படும். எனவே, தற்போதைய பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.

நாம் 80 சதவீதம் நல்லது மற்றும் 20 சதவீதம் தவறு செய்திருப்போம். ஆனால், எதிர்மறையான 20 சதவீத விஷயங்கள் தான் நினைவுக்கு வரும்.

இதனால் வீண் நெருக்கடி ஏற்படும். எப்போதும் நல்லதை நினையுங்கள். கடந்த காலத்தில் செய்த தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள். அவற்றை ஒருபோதும் நினைத்து பார்க்காதீர்கள்.

கிரிக்கெட்டில் எனக்கு பிடித்த "ஷாட்' என்றால், அது பவுலர்களுக்கு நேராக அடிக்கும் "ஸ்டிரெய்ட் டிரைவ்'தான். இவ்வகை "ஷாட்' அடிப்பது எந்த ஒரு பவுலருக்கும் பிடிக்காது.

இவ்வாறு சச்சின் கூறினார்.

சாம்பியன்ஸ் லீக்: சச்சின் பங்கேற்பாரா?


கால் விரலில் காயமடைந்துள்ள இந்திய வீரர் சச்சின், சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் வரும் செப்., 23 முதல் அக்., 9 வரை நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் நாளை துவங்குகின்றன. 

இதில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. 

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சச்சின், ஏற்கனவே பெருவிரல் காயத்தால், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இவர், இத்தொடரில் பங்கேற்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. அணியின் பயிற்சியாளர் ராபின் சிங் கூறியது:

ஐ.பி.எல்., தொடருக்காக எப்படி தயாராகி இருந்தோமோ, அதுபோலவே இப்போதும் "ரெடி'. இங்கிலாந்து தொடரில் பாதியில் திரும்பிய ஹர்பஜன் சிங், கட்டாயம் பங்கேற்பார். சச்சின் பங்கேற்பது உறுதியில்லாமல் உள்ளது. 

இவர் பங்கேற்காவிட்டாலும், அது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இவரது இடத்தில் களமிறங்கும் வீரர்கள் தங்களை நிரூபித்து வெற்றிதேடித் தருவார்கள். 

இவ்வாறு ராபின் சிங் கூறினார்.

இந்தியா மீண்டும் ஏமாற்றம்

ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் விராத் கோஹ்லி அசத்தல் சதம் அடிக்க, இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. 

இங்கிலாந்து சென்று உள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இதில், இங்கிலாந்து அணி 2-0 என ஏற்கனவே தொடரை வென்றது. 

முக்கியத்துவம் இல்லாத ஐந்தாவது ஒரு நாள் போட்டி நேற்று கார்டிப்பில் நடந்தது. இந்திய அணி ஆறுதல் வெற்றி தேடி களமிறங்கியது. "டாஸ் வென்ற இங்கிலாந்து "பீல்டிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 40 நிமிடங்கள் தடைபட்டது. 

நல்ல துவக்கம்: ஆட்டம் துவங்கியதும், பார்த்திவ் படேல் மற்றும் ரகானே இணைந்து இந்திய அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்தனர். முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்த நிலையில் ரகானே(26) வெளியேறினார். 

அடுத்து வந்த டிராவிட் "கம்பெனி கொடுக்க, பார்த்திவ் படேல் தனது பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். இந்த நேரத்தில் சுவான் சுழலில் பார்த்திவ்(19) அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது. 

கோஹ்லி அசத்தல்: இதற்கு பின் டிராவிட், விராத் கோஹ்லி இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இவர்கள் 3வது விக்கெட் டுக்கு 170 ரன்கள் சேர்த் தனர். சமித் படேல் வீசிய போட்டியின் 40வது ஓவரில் கோஹ்லி 2 பவுண்டரி, 1 சிக்சர் அடித்தார். 

தொடர்ந்து அசத்திய இவர், ஒரு நாள் போட்டிகளில் தனது 6வது சதம் அடித்தார். அரைசதம் கடந்த டிராவிட்(69), சுவான் சுழலில் போல்டானார். சுவான் பந்தை அடித்து விட்டு ஓட முற்பட்ட போது, கோஹ்லியின் கால் துரதிருஷ்டவசமாக "ஸ்டம்ப்சில் பட, "பெயில்ஸ் கீழே விழுந்தது. இதையடுத்து "ஹிட் விக்கெட் முறையில் 107 ரன்களுக்கு(9 பவுண்டரி, 1 சிக்சர்) பரிதாபமாக அவுட்டானார்.

தோனி அதிரடி: கடைசி கட்டத்தில் தோனி அதிரடியாக ரன் சேர்த்தார். ரெய்னா(15) சோபிக்கவில்லை.டெர்ன் பாக் பந்தை சிக்சருக்கு அனுப்பிய தோனி 26 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது. 

தோனி 50 ரன்களுடன்(5 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தார்.மழையால் நிறுத்தம்:மீண்டும் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட, இங்கிலாந்துக்கு "டக்வொர்த்-லீவிஸ் விதி முறைப்படி 40 ஓவரில் 270 ரன்கள் எடுக்க வேண்டுமென வெற்றி இலக்கு மாற்றப்பட்டது. 

வினய் குமார் வேகத்தில் கீஸ்வெட்டர்(21) வெளியேறினார். இங்கிலாந்து 9.1 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்த நிலையில், மீண்டும் மழை கொட்டியது. இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது.

விடைபெற்றார் டிராவிட் : ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து நேற்று பிரியாவிடை பெற்றார் இந்திய வீரர் டிராவிட். இக்கட்டான நிலையில் களமிறங்கிய இவர், தூணாக நின்று அணியை மீட்டார். 

தனது 83வது அரைசதம் கடந்த இவர், 344 ஒரு நாள் போட்டிகளில் 10, 889 ரன்கள் எடுத்துள்ளார். சுவான் சுழலில் 69 ரன்களுக்கு "போல்டாகி பெவிலியன் திரும்பிய டிராவிட்டுக்கு, இங்கிலாந்து வீரர்கள் கைகுலுக்கி விடைகொடுத்தனர். அரங்கில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி மரியாதை செய்தனர். 

தவிர, "உங்களை "மிஸ் பண்ணுகிறோம். "உங்களுக்கு நன்றி செலுத்தவே இப்போட்டியை காண வந்தோம் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை காண்பித்து வாழ்த்து தெரிவித்தனர்.

முனாப் காயம்: மழை நின்றதும், இங்கிலாந்துக்கு 34 ஓவரில் 241 ரன்கள் எடுக்க வேண்டுமென புதிய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. குக் அடித்த பந்தை பிடிக்க முயன்ற முனாப் படேல் வழுக்கி விழ, வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. 

இதையடுத்து களத்தை விட்டு வெளியேறினார். பின் விராத் கோஹ்லி பந்தில் குக் கொடுத்த "கேட்ச்சை டிராவிட் கோட்டை விட்டார். அடுத்த பந்தில் குக்(50), "போல்டாக இந்திய வீரர்கள் நிம்மதி அடைந்தனர். பின் ரவிந்திர ஜடேஜா வீசிய போட்டியின் 21வது ஓவரில் பெல் 2 சிக்சர், டிராட் 1 சிக்சர் அடிக்க, நெருக்கடி ஏற்பட்டது.

இங்கிலாந்து வெற்றி : இங்கிலாந்து அணி 32.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 241 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரவெற்றியை பெற்று கோப்பையை வென்றது. டிராட்(63), பெல்(26) ரன்கள் எடுத்தனர். பெபாரா (37), பேர்ஸ்டோ (41) அவுட்டாகாமல் இருந்தனர்.

2012ல் இந்தியா-பாக்., மோதல்?


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அட்டவணைப்படி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையில், 2012 தொடர் மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கிறது.

கடந்த 2008ல் மும்பை, பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், 2009 ஜனவரியில் பாகிஸ்தான் செல்ல இருந்த தனது பயணத்தை, இந்திய கிரிக்கெட் அணி ரத்து செய்தது. 

இதன் பின், இரு அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர் நடக்கவில்லை. உலக கோப்பை போன்ற தொடர்களில் மட்டும் மோதின.
இந்நிலையில் இரு அணிகள் இடையே மீண்டும் கிரிக்கெட் உறவை ஏற்படுத்த, ஐ.சி.சி., தீவிர முயற்சி எடுத்து வருகிறது. 

சமீபத்தில் ஐ.சி.சி., சார்பில் அறிவிக்கப்பட்ட எதிர்கால அட்டவணையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் வரும் 2012, மார்ச்-ஏப்ரலில் விளையாடும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது.
இதன் படி இரு அணிகள் இடையே மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் ஒரு "டுவென்டி-20' போட்டிகள் நடக்கும் என்று தெரிகிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் (பி.சி.பி.,) தலைவர் இசாஸ் பட் கூறுகையில்,"" இரு அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடரை நடத்துவது குறித்து, இரு நாட்டு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது. 

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) நிர்வாகிகளுடன் விவாதித்து வருகிறோம். கட்டுப்பாடுகள், விதிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. விரைவில் ரசிகர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்,'' என்றார்.

சாம்பியன்ஸ் லீக்: காம்பிர் நீக்கம்

காயம் காரணமாக, கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் கவுதம் காம்பிர், சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரின் தகுதிச் சுற்றில் விளையாடமாட்டார்.

இந்தியாவில், மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், வரும் 23ம் தேதி முதல் அடுத்த மாதம் 9ம் தேதி வரை நடக்கிறது. இதில், உள்ளூர் "டுவென்டி-20' தொடரில் சாதித்த 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியஸ் உள்ளிட்ட 7 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.


தகுதிச் சுற்று:

மீதமுள்ள மூன்று இடங்களுக்கு, வரும் 19-21ம் தேதிகளில் ஐதராபாத்தில் தகுதிச் சுற்று நடக்கிறது. இதில் மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கின்றன. சமீபத்திய நான்காவது ஐ.பி.எல்., தொடரில் நான்காவது இடம் பிடித்த பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் (இந்தியா) அணியும் விளையாடுகிறது.


காம்பிர் காயம்:

இந்த அணியின் கேப்டனாக, இந்திய துவக்க வீரர் கவுதம் காம்பிர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு, சமீபத்தில் ஓவலில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டின் போது காயம் ஏற்பட்டது. இப்போட்டியில் இங்கிலாந்தின் பீட்டர்சன் அடித்த பந்தை "கேட்ச்' செய்ய முயன்ற காம்பிரின், பின் தலைப்பகுதியில் பலமாக அடிபட்டது. இதனால் இவரது கண் பார்வை மங்கியது.

இதன்மூலம் இவர், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பினார். தற்போது சிகிச்சை மேற்கொண்டு வரும் இவரது காயம் முற்றிலும் குணமடையவில்லை.


காலிஸ் கேப்டன்:

காயம் காரணமாக காம்பிர், தகுதிச் சுற்றில் விளையாடமாட்டார். ஒருவேளை காயம் குணமடையும் பட்சத்தில், கோல்கட்டா அணி சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெற்றால், உடற்தகுதியை பொறுத்து விளையாடுவார். தகுதிச் சுற்றில் கோல்கட்டா அணியின் கேப்டனாக, தென் ஆப்ரிக்க "ஆல்-ரவுண்டர்' காலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கோல்கட்டா அணி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காம்பிரின் காயம், வரும் 19ம் தேதிக்குள் பூரண குணமடைவதாக தெரியவில்லை. இதனால் இவரை, தகுதிச் சுற்றுக்கான அணியில் இருந்து நீக்குகிறோம். இவருக்கு பதிலாக தென் ஆப்ரிக்காவின் காலிஸ் அணியை வழிநடத்துவார்.

ஒருவேளை கோல்கட்டா அணி தகுதி பெறும் பட்சத்தில், காம்பிரின் உடற்தகுதியை பொறுத்து விளையாடுவார். காம்பிர் இல்லாதது கோல்கட்டா அணிக்கு பின்னடைவானது. இருப்பினும் காயம் காரணமாக காம்பிரை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதிய சர்ச்சையில் இந்திய அணி

லண்டனில் நடந்த ஐ.சி.சி., விருது வழங்கும் விழாவை இந்திய அணி வீரர்கள் அதிரடியாக புறக்கணித்தனர். அழைப்பிதழ் தாமதமாக கிடைத்ததாக வீரர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 

பி.சி.சி.ஐ.,க்கு ஏற்கனவே அழைப்பிதழ் அனுப்பிவிட்டதாக ஐ.சி.சி., தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதால், புதிய சர்ச்சை வெடித்துள்ளது. 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விருது பெறுவோருக்கான பட்டியலில் இந்திய வீரர்கள் தோனி, காம்பிர் உள்ளிட்ட பலர் இடம் பெற்றிருந்தனர்.
நேற்று முன்தினம் விருது வழங்கும் விழா லண்டனில் நடந்தது. இவ்விழா நடந்த இடத்துக்கு மிக அருகில் இருந்த ஓட்டலில் தான் இந்திய வீரர்கள் தங்கியிருந்தனர். ஆனாலும் விருது நிகழ்ச்சியை புறக்கணித்து அதிர்ச்சி அளித்தனர். 

ஏற்கனவே இங்கிலாந்துக்கான இந்திய தூதர் கொடுத்த விருந்தை புறக்கணித்து, தோனியின் அறக்கட்டளை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இப்போது ஐ.சி.சி., விழாவையும் தவிர்த்து சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.


யார் காரணம்?:
இப்பிரச்னைக்கு அழைப்பிதழ் தாமதமாக கிடைத்தது தான் காரணம் என வீரர்கள் கூறுகின்றனர். இதனை மறுத்த ஐ.சி.சி., ஏற்கனவே அழைப்பிதழை பி.சி.சி.ஐ.,க்கு அனுப்பி விட்டதாக தெரிவித்துள்ளது. இதனை வீரர்களுக்கு முறைப்படி பி.சி.சி.ஐ., ஏன் தெரிவிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. இப்படி ஒருவர் மீது ஒருவர் பழிசுமத்துவதால், பிரச்னை பெரிதாகியுள்ளது.


அழைப்பு தாமதம்:
 இதுகுறித்து இந்திய அணி மானேஜர் ஷிவ்லால் யாதவ் கூறுகையில்,"" விழா குறித்து மதியம் 12 மணிக்குத் தான் எங்களுக்குத் தெரிவித்தனர். அதற்கு முன் வீரர்கள் "ஷாப்பிங் மற்றும் பல இடங்களை சுற்றிப் பார்க்கச் சென்றுவிட்டனர், என்றார்.


ஐ.சி.சி., மறுப்பு:
இதுபற்றி ஐ.சி.சி., தகவல் தொடர்பு அதிகாரி காலின் கிப்சன் கூறுகையில்,"" இந்திய வீரர்கள் விழாவில் பங்கேற்க வேண்டும் என, சில வாரங்களுக்கு (ஆக., 26) முன்னதாகவே பி.சி.சி.ஐ.,க்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கான இ-மெயில் ஆதாரம் உள்ளது, என்றார்.


லார்கட் ஆவேசம்:
இந்திய வீரர்கள் பங்கேற்காதது குறித்து ஐ.சி.சி., தலைமை அதிகாரி ஹாருண் லார்கட் கூறுகையில்,"" விழா குறித்து பி.சி.சி.ஐ.,க்கு ஏற்கனவே அழைப்பிதழ் அனுப்பியது எனக்குத் தெரியும். அங்கு வந்திருந்த அனைவரும், இந்திய அணியினர் ஏன் வரவில்லை என்று கேட்டனர். இது பெரிய அவமானமாக இருந்தது. தவிர, ஏமாற்றமாகவும் உள்ளது, என்றார்.


டிராட், குக் சிறந்த வீரர்
 2011ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை இங்கிலாந்தின் டிராட் தட்டிச் சென்றார். சிறந்த ஒருநாள் வீரர், மக்களின் மனம் கவர்ந்த வீரர் விருதுகள், இலங்கையின் சங்ககராவுக்கு வழங்கப்பட்டது. அலெஸ்ட் குக்கிற்கு (இங்கிலாந்து) சிறந்த டெஸ்ட் வீரராகவும், வளர்ந்து வரும் வீரர் விருது வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் தேவேந்திர பிஷுவுக்கு வழங்கப்பட்டது. 

நியூசிலாந்தின் டிம் சவுத்தி ("டுவென்டி-20), பெண்கள் கிரிக்கெட்டில் ஸ்டெபானி டெய்லருக்கும் சிறந்த வீரர் விருது கிடைத்தது. ஐ.சி.சி., உறுப்பு நாடுகளின் சிறந்த வீரர் விருதை, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நெதர்லாந்தின் டசாட்டே தட்டிச் சென்றார்.


ஏமாற்றிய பட்டியல்
நாட்டிங்காம் டெஸ்டில், சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட்டாகிய இங்கிலாந்து வீரர் பெல்லை திரும்ப விளையாட அனுமதித்த தோனிக்கு, கிரிக்கெட் உணர்வை சிறப்பாக வெளிப்படுத்தியவருக்கான விருது தரப்பட்டது. உலக கோப்பை வென்ற நிலையில், மற்ற இந்திய வீரர்கள் புறக்கணிக்கப்பட்டது ஏமாற்றம் தந்துள்ளது.


எனக்கு தெரியாது: ராஜிவ் சுக்லா
இந்திய வீரர்கள் வராதது குறித்து, விழாவில் பங்கேற்ற பி.சி.சி.ஐ., துணைத்தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,"" பட்டியலில் இடம்பெற்ற வீரர்கள் மட்டும் பங்கேற்க வேண்டும் என்று நினைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். மற்றபடி வீரர்கள் பங்கேற்பது குறித்து அவர்கள் விருப்பத்துக்கு விடப்பட்டுள்ளது, என்றார்.


டெஸ்ட் அணியில் சச்சின்
இந்த ஆண்டின் ஐ.சி.சி., கனவு டெஸ்ட் அணியில் இந்தியா சார்பில் சச்சின் மட்டும் இடம் பெற்றுள்ளார். இதில் 5 இங்கிலாந்து வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.
டெஸ்ட் அணியின் பேட்டிங் வரிசை விபரம்:
இலங்கை சங்ககரா (கேப்டன்/விக்கெட் கீப்பர்), குக் (இங்கி.,), ஆம்லா (தெ.ஆப்.,), டிராட் (இங்கி.,), சச்சின் (இந்தியா), டிவிலியர்ஸ், காலிஸ் (தெ.ஆப்.,), பிராட், சுவான் (இங்கி.,), ஸ்டைன் (தெ.ஆப்.,), ஆண்டர்சன் (இங்கி.,) மற்றும் இந்தியாவின் ஜாகிர் கான் (12வது வீரர்).