"சாம்பியன்' யுவராஜ் நல்ல உதாரணம் - சச்சின்

கடின சிகிச்சைக்கு பின் மிக விரைவாக மீண்ட யுவராஜ், இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இவர் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமின்றி கேன்சரால் பாதிக்கப்பட்ட சாமான்ய மனிதர்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார்,'' என, சச்சின் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், 30. கடந்த ஆண்டில் நுரையீரலில் ஏற்பட்ட கேன்சர் கட்டிக்காக "கீமோதெரபி' சிகிச்சை மேற்கொண்டார். இதிலிருந்து விரைவாக மீண்ட இவர், கடின பயிற்சியில் ஈடுபட்டார். இலங்கையில் அடுத்த மாதம் நடக்கவுள்ள "டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெற்றார்.

இது குறித்து சக இந்திய வீரர் சச்சின் கூறியது:

யுவராஜ் பல கடினமான சிகிச்சைக்கு உட்பட்டார். மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இவர் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமின்றி, கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ள சாமான்ய மனிதர்களுக்கும் நல்ல உதாரணமாக உள்ளார்.

கடந்த உலக கோப்பை கிரிக்கெட்டில், இவர் தொடர் நாயகன் விருதை இவர் பெற்றபோது மகிழ்ச்சியாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை யுவராஜ் என்றுமே சாம்பியன்தான்.

உன்முக்த் சந்த் ஆட்டத்தை மிகவும் ரசித்தேன். இந்திய இளம் அணியினர், உலக கோப்பை தொடருக்கு செல்லும் முன், அவர்களுடன் சிறிது நேரம் செலவிட்டேன். என்னுடைய எண்ணங்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டது நல்லதொரு அனுபவமாக இருந்தது. உலக கோப்பையை வென்றபோது, உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

2011ம் ஆண்டு இந்திய அணிக்கு "ஸ்பெஷலான' ஒன்று. ஆண்டின் முதல் பாதியில் உலக கோப்பைபை வென்றோம். இதற்காக நான் 22 ஆண்டுகள் காத்திருந்தேன். அந்த நாளின் மாலைப்பொழுது, மிகவும் சிறப்பானதாக இருந்தது. நாம் கண்ட கனவு நனவாகும்போது, நம்மால் பேச முடியாது. அப்படிப்பட்ட ஒன்றுதான் அந்தத்தருணம்.

100வது சதம் அடித்தது போன்ற நிகழ்வுகள் வாழ்வில் ஒரு முறை மட்டுமே நடக்கக்கூடியது. அதை விட பெரிய விருதை நான் பெற்றுவிட முடியாது. இவ்வாறு சச்சின் கூறினார்.


ஓய்வு எப்போது?

ஓய்வு குறித்து சச்சின் கூறுகையில்,""என்றைக்கு என்னால் மகிழ்ச்சியுடன் "பேட்' செய்ய முடியவில்லையோ, அன்றுதான் ஓய்வு பற்றி சிந்திப்பேன். அந்த நாள் இன்னும் வர வரவில்லை. அந்த உணர்வு ஏற்படும்போது, ஓய்வு குறித்து சொல்வேன்,'' என்றார்.

ஓய்வு பெறும் திட்டம் இப்போது இல்லை - தெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள சீனியர் வீரர் தெண்டுல்கர். 1989-ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமான அவர் 23 ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாடி வருகிறார்.

189 டெஸ்டில் விளையாடி 15,489 ரன்னும், 463 ஒருநாள் போட்டியில் 18,426 ரன்னும் எடுத்துள்ளனர். டெஸ்டில் 51 சதமும், ஒருநாள் போட்டியில் 49 சதமும் அடித்துள்ளார். இதில் எல்லாமே அவர்தான் உலக சாதனையாளர் ஆவார்.

டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருந்த லட்சுமண், டிராவிட் சமீபத்தில் ஓய்வு பெற்றனர். இதனால் 39 வயதான தெண்டுல்கருக்கு ஓய்வுபெற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதற்கு ஏற்றவாறு நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 19 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இதற்கிடையே தற்போது ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்றும், உடல் தகுதியுடன் இருக்கும் வரை ஆடுவேன் என்றும் தெண்டுல்கர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

தற்போது நல்ல உடல் தகுதியுடன் உள்ளேன். ஆட்டத்தை ரசித்து விளையாடி வருகிறேன். என்னால் எவ்வளவு காலம் விளையாட முடியுமோ அதுவரை ஆடுவேன். இதனால் இப்போது ஓய்வு திட்டம் எதுவும் இல்லை. அணியில் சீனியர் வீரராக இருப்பதால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்துதான் ஆடுகிறோம். ஒவ்வொரு போட்டித் தொடருக்கு முன்பு அந்த தொடருக்கான நல்ல முறையில் தயார்படுத்திக் கொள்கிறேன் உலக கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 99-வது சதத்தை அடித்தேன். அப்போது யாரும் எனது 100-வது சதத்தை பற்றி பேசவில்லை. ஏனென்றால் அனைவரது நோக்கமும் உலக கோப்பையை வெல்வதாக இருந்தது.

உலக கோப்பை முடிந்த பிறகு ஒவ்வொருவரது எண்ணமும் எனது 100-வது சதத்தை பற்றிதான் இருந்தது. வெஸ்ட்இண்டீஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடிக்க நெருங்கி வந்தேன். துரதிருஷ்டவசமாக தவறவிட்டேன். டாக்காவில் 100-வது சதத்தை அடிக்க முடிந்தது. டிராவிட், லட்சுமண் இடத்தை ஒரே நாளில் நிரப்பிவிட முடியாது.

அஸ்வினின் பந்துவீச்சு நாளுக்கு நாள் சிறப்பாக உள்ளது. நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார். 19 வயதுக்குட்பட்ட உலக கோப்பை போட்டியில் கேப்டன் உன்முக்த்சந்த் தனது திறமையை நிரூபித்தார். கூட்டு முயற்சியால் தான் இந்த உலக கோப்பையை கைப்பற்ற முடிந்தது. இது மிகவும் பாராட்டத்தக்கது.

இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார்.

இளம் இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு

ஜூனியர் உலக கோப்பை வென்ற இந்திய வீரர்கள் நேற்று தாயகம் திரும்பினர். இவர்களுக்கு மும்பை விமான நிலையத்தில், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் நடந்த ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அசத்திய இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில் சதம் அடித்த கேப்டன் உன்முக்த் சந்த் உள்ளிட்ட வீரர்கள் நேற்று மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் வந்திறங்கினர்.

இவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின் இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.

கேப்டன் உன்முக்த் சந்த் கூறுகையில்,""உலக கோப்பை தொடருக்கு செல்லும் முன், சச்சினுடன் அரைமணி நேரம் செலவிட்டோம். இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. போட்டிகளின் போது எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்பது குறித்து தெளிவாக எடுத்துக் கூறினார்.

என்னையும், தோனியையும் "மீடியா'தான் ஒப்பிட்டது. எனது இலக்கு பைனலில் வெற்று பெறுவது தான். அதனை எட்டியதில் மகிழ்ச்சியாக உள்ளேன்.

இந்திய "சீனியர்' அணியில் இடம்பெற இன்னும் அதிக காலம் உள்ளது. அடுத்து நியூசிலாந்து "ஏ' அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க உள்ளேன். அதில் சிறப்பாக செயல்பட வேண்டும்,''என்றார்.

முதல் பந்தை சந்திக்க பயமா? - மனம் திறக்கிறார் சேவக்

கிரிக்கெட் போட்டிகளில் துணிச்சலாக "பேட்' செய்யும் சேவக்கிற்கு, முதல் பந்தை சந்திக்கும் போது பதட்டமாக இருக்குமாம்.

இந்திய அணியின் துவக்க வீரர் சேவக். அதிரடி ஆட்டத்தில் கில்லாடியான இவர், பவுண்டரி, சிக்சர்களாக பறக்க விடுவது வழக்கம். இவருக்கும் களத்தில் இருக்கும் போது பதட்டம் ஏற்படுவதுண்டு.

இதுகுறித்து சேவக் கூறியது: ஒவ்வொரு போட்டியிலும் முதல் பந்தை சந்திக்கும் போது மனதில் லேசான நடுக்கம் இருக்கும். அப்போது எனது வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்புது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால் இதனை ஒருபோதும் வெளிப்படுத்தியது கிடையாது.

ஏனெனில் அது எதிரணி பவுலர்களுக்கு சாதகமாக மாறிவிடும். இதனால் பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்து, எனது விக்கெட்டை விரைவில் கைப்பற்றிவிடுவார்கள். ஒவ்வொரு முறையும் பந்தை எதிர்கொள்ளும் போது, தன்னம்பிக்கையுடன் விளையாடுவதால், ஆரம்பம் முதல் அடித்து ஆட முடிகிறது.

மனவலிமையும், தன்னம்பிக்கையும் இருந்தால், எந்த ஒரு பவுலரின் பந்தையும் சமாளித்து விடலாம். பொதுவாக சர்வதேச போட்டிகளில் மனவலிமை முக்கியமான ஒன்று. பேட்ஸ்மேனாக
இருந்தாலும் சரி, பவுலராக இருந்தாலும் சரி மனம் தளராமல் போராடினால் இலக்கை அடைந்துவிடலாம்.

சச்சினுடன் இணைந்து விளையாடும் போது "ரிலாக்சாக' இருக்கலாம். ஏனெனில் எதிரணியினர் சச்சின் விக்கெட்டை கைப்பற்றுவதை இலக்காக கொண்டுள்ளனர். ஆனால் காம்பிருடன் விளையாடும் போது, அதிக நெருக்கடி ஏற்படும்.ஏனெனில் கவனம் என் மீது தான் அதிகம் இருக்கும். இதுபோன்ற நேரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் விளையாடுவேன்.

போட்டியில் "டக்-அவுட்' ஆனாலும் சரி, 300 ரன்களுக்கு மேல் எடுத்தாலும் சரி மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்குவேன்.

சில நேரங்களில் விக்கெட்டை விரைவில் இழந்து திரும்ப நேரிடும். இதுபோன்ற சமயங்களில் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் அடுத்த போட்டியில் சாதிக்க முடியும். இவ்வாறு சேவக் கூறினார்.

இந்திய அணியில் அடித்து ஆடக்கூடிய திறமையான வீரர்கள் நிறைய வந்துவிட்டனர். விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி, யுவராஜ் சிங், ரோகித் சர்மா ஆகியோர் விரைவில் பந்தை சிக்சருக்கு அனுப்பும் திறமை பெற்றுள்ளனர்.

இதேபோல டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா), கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து) உள்ளிட்ட மற்ற அணி வீரர்களும் அடித்து ஆடுவதில் திறமையானவர்கள்.
இவ்வாறு சேவக் கூறினார்.

தோனியுடன் கருத்து வேறுபாடு இல்லை - லட்சுமண்

தோனியுடன் எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிடையாது'' என, லட்சுமண் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் வீரர் லட்சுமண், 37. இவர் திடீரென ஓய்வை அறிவித்தார்.

இதற்கு கேப்டன் தோனியுடன் ஏற்பட்ட மோதல் தான் காரணம் என கூறப்பட்டது. லட்சுமண், சக வீரர்களுக்கு கொடுத்த "பார்ட்டிக்கு' தோனியை அழைக்காததால் பிரச்னை பெரிதானது.

இது குறித்து லட்சுமண் கூறியது:

தோனியுடன் எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிடையாது. இதற்கு மேல் இதை பற்றி பேச விரும்பவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை, நேரில் பார்க்க நினைத்திருந்தேன். ஆனால் அதிக மழை காரணமாக செல்ல முடியவில்லை.

நான்காம் நாள் போட்டியை கூட காண வேண்டும் என்றிருந்தேன். என் இரண்டு குழந்தைகளும் காய்ச்சலால் அவதிப்பட்டனர். எனவேதான் நேரில் சென்று பார்க்கமுடியவில்லை.

இருப்பினும், "டிவி' யில் போட்டியை கண்டேன். வீரர்கள் சிறப்பாக விளையாடினர். தொடரையும் கைப்பற்றுவர். இவ்வாறு லட்சுமண் கூறினார்.

ஜுனியர் உலககோப்பையில் சாதித்தவர்கள்

ஆஸ்திரேலியாவில் நடந்த 19 வயதுக்குடப்ட்ட (இளைஞர்) கிரிக்கெட் உலக கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது. இளைஞர் உலக கோப்பையை இந்தியா 3-வது முறையாக கைப்பற்றியுள்ளது.

இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு கயூப் தலைமையிலும், 2008-ம் ஆண்டு வீராட் கோலி தலைமையிலும் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.

இளைஞர் உலக கோப்பை வென்ற வீரர்களில் 9 பேர் இந்திய சீனியர் அணியில் ஆடி உள்ளனர்.

அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

யுவராஜ்சிங், முகமது கயூப், அஜய் ரத்ரா, வேணு கோபாலராவ், ரிதேந்தர் சிங் சோதி (2000), வீராட் கோலி, சவுரப் திவாரி, அபினவ் முகுந்த், ரவிந்திர ஜடேஜா (2008).

இதில் வீராட் கோலி தற்போதுள்ள இந்திய அணியில் 3 நிலையிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி) ஆடி வருகிறார்.

யுவராஜ் இந்திய அணியின் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன் ஆவார். புற்று நோயில் இருந்து குணமடைந்த அவர் தற்போது 20 ஓவர் போட்டியில் இடம் பெற்றுள்ளார்.

சீனியரை மிஞ்சிய ஜூனியர்அணிக்கு ஓ போடு

ஜூனியர் உலக கோப்பை போட்டியில் இந்தியா இன்று 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இந்த வெற்றிக்கு உலகம் முழுவதும் கிரிக்‌கெட் ரசிகர்கள் வாழ்த்தும், மகிழ்ச்சியும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது. இன்று நடந்த பைனலில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா சார்பில் கேப்டன் வில்லியம் போசஸ்டோ 87 ரன்கள் எடுத்தார். இந்தியாவின் சந்தீப் சர்மா 4 விக்கெட் கைப்பற்றினார்.ஆஸி. இந்தியாவிற்கு 226 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.


வெற்றியை உறுதி செய்த சாந்‌த் சதம் :

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர் சோப்ரா ரன் ஏதும் எடுக்காமல் அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சாந்த் சதம் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

47.4 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 227 ரன் எடுத்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்தியா தற்போது சாம்பியன் பட்டத்தை பெறுவது 3 வது முறையாகும்.

கடந்த 2000 மற்றும் 2008 ல் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர் நமது ஜூனியர் வீரர்கள். இன்றைய ஆட்டத்தில் அதிகபட்சமாக கேப்டன் சாந்த் அதிகப்பட்சமாக 111 ரன்கள் எடுத்தார்.


நமது சீனியர் இந்திய கிரிக்கெட் அணியினர் 2 முறை உலக கோப்பை பெற்றுள்ளனர். கடந்த 1983 மற்றும் 2011 உலககோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன. ஆனால் ஜூனியர் அணியினர் 3முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். இதன்மூலம் சீனியரை, ஜூனியர்அணி முந்தி விட்டனர்.



வீரர்களுக்கு ரூ. 20 லட்சம் பரிசு அறிவிப்பு:


இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தலைவர் என். ஸ்ரீனிவாசன் அறிவித்துள்ள செய்தியில், உலக கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ரூ. 20 லட்சம் பரிசுத்தொ‌கை வழங்கப்படும்.


இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

லட்சுமணுக்கு வெண்கலச் சிலை

லட்சுமண் மற்றும் அசாருக்கு வெண்கலச் சிலை வைக்க, ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் (எச்.சி.ஏ.,) முடிவு செய்துள்ளது.

இந்திய டெஸ்ட் அணியின் "மிடில் ஆர்டர்' வீரர் லட்சுமண். நியூசிலாந்து தொடரில் இடம் பெற்ற நிலையில், திடீரென ஓய்வை அறிவித்தார். இவரை கவுரவிக்கும் வகையில், மைதானத்தின் ஒரு "பெவிலியன்' முனைக்கு, எச்.சி.ஏ., லட்சுமண் பெயரை வைத்தது.

இதனிடையே, இந்தியாவில் எந்த கிரிக்கெட் சங்கமும் செய்யாத ஒன்றை, எச்.சி.ஏ., செய்ய முடிவு செய்துள்ளது. அதாவது, ஐதராபாத்தை சேர்ந்த லட்சுமண், அசாருக்கு வெண்கலச் சிலை வைக்க முடிவு செய்துள்ளது. எச்.சி.ஏ., செயலர் ஸ்ரீதர் கூறியது:

நூற்றுக்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக பங்கேற்ற லட்சுமண், அசாரை கவுரவிக்க, ஒரு மாதத்தில் சிலை வைக்கலாம் என்று திட்ட மிட்டுள்ளோம். இரண்டும் தலா 9 அடி உயரத்துடன், ரூ. 10 லட்சம் மதிப்புடையது.

2001ல் கோல்கட்டா டெஸ்டில் அசத்திய லட்சுமண், ஒரு கையில் "பேட்', மறு கையில் "ஹெல்மெட்டை' தூக்கி ரசிகர்கள் பாராட்டை ஏற்றார். இதுபோல சிலை செய்யப்படும். அசாருக்கு, இவரது வழக்கமான "ஆன்-டிரைவ்' "ஷாட்' அடிப்பது போல வைக்கப்படும்.

இவ்வாறு ஸ்ரீதர் கூறினார்.

அஷ்வின் சுழலில் பாலோ-ஆன் பெற்றது நியூசிலாந்து

ஐதராபாத் டெஸ்டில் இந்திய அணி ஆதிக்கம் நீடிக்கிறது. அஷ்வின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 159 ரன்னுக்கு சுருண்டு "பாலோ-ஆன் பெற்றது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 438 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில், நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 106 ரன்கள் ரன்கள் எடுத்திருந்தது.


அஷ்வின் அபாரம்:

இன்று மூன்றாம் நாள் ஆட்டம், மோசமான வானிலை காரணமாக, ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது. பவுலிங்கில் இந்திய வீரர்கள் தொடர்ந்து அசத்தினர். வான் விக், "டக் அவுட்டானார். பிரேஸ்வெல் 17 ரன்கள் எடுத்தார்.

அடுத்து வந்த அஷ்வின் முதலில் ஜீதன் படேலை (10) வெளியேற்றினார். சிறிது நேரத்தில் பவுல்ட்டை (4) வெளியேற்றினார். அடுத்த பந்திலேயே மார்டினையும் "டக் அவுட் செய்தார்.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 159 ரன்னுக்கு சுருண்டது.

முதல் இன்னிங்சில் 279 ரன்கள் பின்தங்கிய நிலையில், தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடும் (பாலோ-ஆன்) நிலைக்கு நியூசிலாந்து தள்ளப்பட்டது. சுழலில் மிரட்டிய அஷ்வின் 6 விக்கெட் வீழ்த்தினார்.

மீண்டும் மழை:
இரண்டாவது இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணி, கப்டில் விக்கெட்டை (16) விரைவில் இழந்தது. 41 ரன்னுக்கு 1 விக்கெட் என்ற நிலையில், மழை குறுக்கிட்டதால், மூன்றாவது நாள் ஆட்டம் ரத்தானது.

லட்சுமண்-தோனி மோதல் தீவிரம்

லட்சுமண், தோனி இடையிலான "பனிப்போர்' நீடிக்கிறது. இருவரும் சந்திப்பதை தவிர்க்க, ஒரு விழாவே ரத்து செய்யப்பட்டது.

இந்திய டெஸ்ட் அணியின் "மிடில் ஆர்டர்' வீரர் லட்சுமண். நியூசிலாந்து தொடரில் இடம் பெற்ற நிலையில், திடீரென ஓய்வை அறிவித்தார். கேப்டன் தோனியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு தான், இதற்கு காரணம் என பேசப்பட்டது.

தனது வீட்டில் விருந்து கொடுத்த லட்சுமண், சச்சின், சேவக், காம்பிர், ஜாகிர் கான் ஆகியோருடன்
தோனியை அழைக்காதது, இவர்கள் இடையிலான மோதலை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இதனிடையே, ஐதராபாத் கிரிக்கெட் சங்கம், மைதானத்தின் ஒரு "பெவிலியன்' முனைக்கு லட்சுமண் பெயர் வைக்கப்படும் என்று அறிவித்தது.

இதற்கான விழாவில் லட்சுமண் கலந்து கொள்ள, தோனி பெயர் பலகையை திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கடைசியில் என்ன நடந்ததோ தெரியவில்லை, இந்த விழாவே நடக்கவில்லை.

ஆனால், "பெவிலியன்' முனையில் முன்பு இருந்த பெயர் அழிக்கப்பட்டு, லட்சுமண் பெயர் அவசரம், அவசரமாக எழுதப்பட்டு இருந்தது.

இதுகுறித்து கிரிக்கெட் சங்கத்தை சேர்ந்த யாரும் பேச முன்வரவில்லை. இது, இவர்கள் இடையே ஏற்பட்ட பிளவை, மேலும் உறுதி செய்வது போல இருந்தது.

டெக்கான் அணி நீக்கப்படுமா?

வீரர்களுக்கு சம்பளம் வழங்குவது உட்பட நிதி குளறுபடிகளை சரி செய்யாவிட்டால், டெக்கான் சார்ஜர்ஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தயங்க மாட்டோம்,'' என, பி.சி.சி.ஐ., எச்சரித்துள்ளது.

முதன் முதலாக நடந்த ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில், 8 அணிகள் பங்கேற்றன. பின், இந்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. இதில், கொச்சி அணியின் நிர்வாக குளறுபடியால், இதன் ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ரத்து செய்தது.

இப்போது டெக்கான் சார்ஜர்ஸ் அணியிலும் நிதி குளறுபடி ஏற்பட்டுள்ளது. இந்நிறுவனம் கடனில் தள்ளாடுகிறது. இதனால், வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் இன்னும் தரப்படவில்லை. இதை சரிசெய்ய, இம்மாத இறுதி வரை, கால அவகாசம் கேட்டிருந்தனர்.

இதுகுறித்து ஐ.பி.எல்., கட்டுப்பாட்டுக்குழு விவாதித்தது. தவிர, பி.சி.சி.ஐ., செயற்குழுவிலும் இப்பிரச்னை விவாதிக்கப்பட்டது.

இதன் முடிவில், "குறிப்பிட்ட காலத்துக்குள், டெக்கான் அணி நிர்வாகம் நிதி குளறுபடியை சரிசெய்யவில்லை எனில், அணியின் ஒப்பந்தத்தை பி.சி.சி.ஐ., ரத்து செய்ய தயங்காது.

மீண்டும் புதிய அணியை சேர்க்க, ஏலம் நடத்த வேண்டிய நிலை வரலாம்,' என, தெரிவித்தது.

சச்சினுக்கு எதிரான வழக்கு - மத்திய அரசுக்கு அவகாசம்

ராஜ்யசபா எம்.பி.,யாக சச்சின் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு டில்லி ஐகோர்ட் கூடுதல் கால அவகாசம் அளித்தது.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். சமீபத்தில் இவர் ராஜ்யசபா எம்.பி.,யாக நியமனம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ராம் கோபால் சிங் சிசோடியா என்பவர் டில்லி ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடுத்தார்.

அதில்,"ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கான எந்த தகுதியும் சச்சினுக்கு இல்லை. அரசியல் சாசன பிரிவு 80ன்படி கலை, அறிவியல், இலக்கியம், சமூக அறிவியல் ஆகிய நான்கின் கீழ் தான் ஒருவரை நியமனம் செய்ய முடியும்.

இந்நிலையில், விளையாட்டு வீரரை தேர்வு செய்தது அரசியல் சாசன விதிகளுக்கு எதிரானது,என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை விசாரித்த டில்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி(பொறுப்பு)ஏ.கே.சிக்ரி, நீதிபதி ராஜிவ் சகாய் ஆகியோர் அடங்கிய "பெஞ்ச் மத்திய அரசுக்கு பதில் மனு தாக்கல் செய்ய வரும் செப்., 5ம் தேதி வரை கால அவகாசம் அளித்து உத்தரவிட்டது.

டிராவிட், லட்சுமண் இல்லாமல் டெஸ்டில் சாதிக்குமா இந்தியா

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை ஐதராபாத்தில் துவங்குகிறது. இதில், சீனியர் வீரர்கள் டிராவிட், லட்சுமண் இல்லாமல் இந்தியா களமிறங்குகிறது. இவர்களது ஓய்வு பாதிப்பை ஏற்படுத்துமா அல்லது இளம் வீரர்கள் சாதிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்த, இந்திய அணி "நம்பர்-1' இடத்தை பறிகொடுத்தது. இதன் பின் இந்திய அணிக்கு வீழ்ச்சி தான். பின் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி அங்கும் தோற்க, தற்போது 104 புள்ளிகளுடன் டெஸ்ட் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இதனிடையே, ஆஸ்திரேலிய தொடரில் 8 இன்னிங்சில் 6ல் "போல்டான' டிராவிட், நாடு திரும்பிய வேகத்தில் ஓய்வை அறிவித்தார். அணியின் "பெருஞ்சுவராக' வர்ணிக்கப்பட்ட இவர் விடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதிலிருந்து மீள்வதற்குள் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெற்ற சீனியர் வீரர் லட்சுமண் திடீரென ஓய்வை அறிவித்தார். டிராவிட்(164 டெஸ்ட், 13,288 ரன்), லட்சுமண்(134 டெஸ்ட், 8781 ரன்) சேர்ந்து 298 டெஸ்டில் 22,069 ரன்கள் சேர்த்துள்ளனர்.

இவர்கள் இம்முறை இல்லாதது பெரும் இழப்பு தான். இவர்களுக்குப் பதில் தேர்வாகியுள்ள புஜாரா, ரெய்னா, பத்ரிநாத் ஆகியோர் இணைந்து, மொத்தம் 20 டெஸ்ட் அனுபவம் தான் உள்ளது. மற்றொரு வீரர் ரகானே, இன்னும் ஒரு டெஸ்டில் கூட களமிறங்கவில்லை.


சச்சின் வருத்தம்:

பேட்டிங்கில் மட்டுமல்லாது, "ஸ்லிப்' பகுதியில் டிராவிட் 210, லட்சுமண் 135 "கேட்ச்' செய்த அனுபவம் உள்ளவர்கள். இதுகுறித்து சச்சின் கூறுகையில்,"" டிராவிட், லட்சுமண் இருவரும் பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல், "ஸ்லிப்' பகுதியில் சிறந்த பீல்டர்கள். இவர்களது இடங்களை நிரப்புவது மிகவும் கடினம்,'' என்றார்.

இந்நிலையில் நாளை துவங்கும் நியூசிலாந்து தொடரில், இளம் வீரர்களை வைத்துக் கொண்டு கேப்டன் தோனி எப்படி சமாளிக்கப் போகிறார் என்று, பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


வெற்றி முக்கியம்:

தரவரிசையில் 8வது இடத்திலுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்றால், எதிர்வரும் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய தொடரில், நம்பிக்கையுடன் செயல்பட உதவும். தவிர, இந்திய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு அதிகமாக ஒத்துழைக்காது என்பது ஆறுதல் தான்.


வெட்டோரி இல்லை:

தவிர, சுழலுக்கு சாதகமான இங்கு, நியூசிலாந்து அணியில் அனுபவ வெட்டோரி(தொடைப் பகுதியில் காயம்) இல்லாதது இந்திய அணிக்கு கூடுதல் பலம். பேட்டிங்கில் இந்திய அணி துவக்க வீரர்கள் காம்பிர், சேவக், "மிடில் ஆர்டரில்' சச்சின், விராத் கோஹ்லியை நம்பியுள்ளது.


"சுழல்' கைகொடுக்குமா:

சுழலில் அஷ்வின், பிரக்யான் ஓஜா இருவரும், நியூசிலாந்து வீரர்களுக்கு தொல்லை தரலாம். ஏனெனில், கடந்த 2011, நவம்பரில் இந்தியாவில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்த இருவரும் 42 விக்கெட் வீழ்த்தி, வெற்றிக்கு உதவினர். இது மீண்டும் தொடரும் என்று நம்புவோம்.


வீழ்த்த முயற்சிப்போம்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து நியூசிலாந்து கேப்டன் ராஸ் டெய்லர் கூறுகையில்,""இந்திய அணியை சொந்த மண்ணில் சந்திப்பது பெரும் சவாலானது. இவர்களை வீழ்த்த அனைத்து வழிகளிலும் முயற்சிப்போம்,'' என்றார்.


சச்சின் பார்த்துக் கொள்வார்

டிராவிட் கூறுகையில்,""நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நான் மற்றும் லட்சுமண் இடம் பெறாத நிலையில், சச்சின் பொறுப்புணர்ந்து செயல்படுõர். கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியின் சுமைகளை தோளில் சுமக்கும் இவர், தனது பணியை தொடர்வார் என்ற நம்பிக்கை உள்ளது,''என்றார்.

லட்சுமண் விவகாரம் - கங்குலி பல்டி

லட்சுமணுக்கு தோனி ஆதரவு தரவில்லை என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. எனது கருத்தை "மீடியா' தவறாக வெளியிட்டுள்ளது,'' என, கங்குலி "பல்டி' அடித்துள்ளார்.

இந்திய அணியின் டெஸ்ட் வீரர் லட்சுமண், 37. கடந்த சில நாட்களுக்கு முன், திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார். நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெற்ற நிலையிலும், உடனடியாக ஓய்வு பெற்றது, எல்லோருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது.

இதுகுறித்து கங்குலி கூறுகையில்,"" கேப்டன் தோனி, தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் கொடுத்த நெருக்கடியால் தான் லட்சுமண் ஓய்வு பெற்றார். தவிர, லட்சுமணுக்கு தோனி ஆதரவு கொடுப்பதில்லை, இவரால், தோனியிடம் பேச முடியவில்லை,'' என்று தெரிவித்து இருந்தார்.

இப்போது, அப்படியே "பல்டி' அடித்துள்ளார் கங்குலி. முதலில் பேசியதை மறுத்து கங்குலி கூறியது:
கேப்டன் தோனியை லட்சுமணால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற செய்தி தவறான முறையில் வெளியாகியுள்ளது.

அதாவது, கிரிக்கெட்டில் அணித் தலைவர் என்பவர், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். இந்த இடத்தில் லட்சுமணுக்கு தோனியின் ஆதரவு கிடைக்கவில்லை என்று மறைமுகமாக குறிப்பிடவில்லை.

லட்சுமணின் சூழ்நிலை வேறாக இருந்திருக்கும். அவர் தோனியின் ஆதரவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இவ்வாறு கங்குலி கூறினார்.

கை கால்களை இழந்தவர் நீச்சலில் சாதனை

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நீச்சல் வீரர் பிலிப்குரோஸ்கான். கடந்த 1994-ம் ஆண்டு நடந்த மின் விபத்தில் இவர் தனது கை, கால்களை இழந்தார். அப்போது அவரது வயது 26.

இருந்தும் அவர் மனம் தளராமல் பெடல் போன்ற செயற்கை உறுப்புகளை மாட்டிக் கொண்டு நீச்சல் பயிற்சி பெற்றார். அதன் மூலம் 'இங்கிலீஷ் கால்வாய்', செங்கடல் போன்றவற்றை நீந்தி கடந்தார்.

இருந்தும், அமெரிக்காவின் அலாஸ்காவில் இருந்து ரஷியாவுக்கு கடலில் நீந்தி கடக்க திட்டமிட்டிருந்தார்.

அதன்படி அலாஸ்காவில் உள்ள லிட்டில் டியோமிடி தீவில் இருந்து ரஷிய எல்லையில் உள்ள பிக் டியோமிடி தீவுக்கு நீந்தி சாதனை படைத்தார்.

இதற்கிடையேயான 4 கிலோ மீட்டர் (2.5 மைல்) தூரத்தை 1 மணி 15 நிமிடத்தில் நீந்தி கடந்துள்ளார்.

அப்போது கடல் நீர் மிகவும் குளிராக இருந்தது. 4 டிகிரி செல்சியசாக இருந்தது. 6 முதல் 8 அடி உயரத்துக்கு கடல் அலை எழும்பியது. அதை சமாளித்து அவர் நீந்தினார்.

இதற்கு முன்பு இந்த தூரத்தை அமெரிக்க வீரர் லினேகாஸ் நீந்தி கடந்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இதை நீந்தி கடந்துள்ள 2-வது வீரர் என்ற பெருமை குரோஸ்கானுக்கு கிடைத்துள்ளது.

எதில் சச்சின் ரொம்ப வீக்

கிரிக்கெட் அரங்கில் "மாஸ்டர் பேட்ஸ்மேனாக' திகழும் இந்தியாவின் சச்சின், செஸ் விளையாட்டில் ரொம்ப "வீக்'. செஸ் போட்டிகளில் தான் அதிக தோல்விகளை சந்தித்துள்ளாராம்.

இது குறித்து சச்சின் கூறியது: வீட்டில் என் சகோதரருடன் செஸ் விளையாடியிருக்கிறேன். ஆனால், நல்ல முடிவு வந்ததில்லை. பெரும்பாலான சமயங்களில் தோற்றுவிடுவேன்.

என் குடும்பத்திற்கு செஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தியது மாமாதான். இவர் இந்த விளையாட்டை பற்றி புத்தகம் கூட எழுதியிருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் எனது மகன் அர்ஜுன் செஸ் விளையாடினான். இதற்காக செஸ் பற்றிய பயிற்சி வகுப்புகளுக்கு சென்றான். வீட்டிற்கு நண்பர்கள், உறவினர்கள் யாரேனும் வந்தால், முதலில் அவர்களோடு இணைந்து செஸ் விளையாடுவான்.

அதன் பின்தான், அவர்கள் வந்த வேலையை பார்க்கவிடுவான். இதில் சிறப்பாகவே இருந்தான்.

ஆனால் திடீரென மல்யுத்தம், கால்பந்து போன்ற விளையாட்டில் ஈடுபட்டான். முடிவில் கிரிக்கெட் விளையாட தொடங்கிவிட்டான்.

இவ்வாறு அவர் கூறினார்.

லட்சுமணின் டாப் 5 செஞ்சூரி

இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களின் ஒருவரான வி.வி.எஸ்.லட்சுமண் ஓய்வு முடிவை நேற்று அறிவித்தார். அவர் 134 டெஸ்டில் 8,781 ரன் எடுத்துள்ளார். சராசரி 45.97 ஆகும். 17 சதமும், 50 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 281 ரன் குவித்தார்.

86 ஒருநாள் போட்டியில் விளையாடி 2338 ரன் எடுத்துள்ளார். சராசரி 30.76 ஆகும். 6 சதமும், 10 அரை சதமும் அடித்துள்ளார்.

அதிகபட்சமாக 131 ஆகும். நெருக்கடியான நேரங்களில் சிறப்பாக விளையாடி இந்திய அணியை மீட்டு பெருமை சேர்த்தவர் என்ற பெருமையை பெற்றவர் லட்சுமண். 4 இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய இந்திய பேட்ஸ்மேன் ஆவார்.

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாலோஆன் பெற்று அவர் 281 ரன் குவித்தது இன்னும் மறக்க இயலாத ஆட்டமாகும். அவர் டிராவிட்டுடன் இணைந்து 376 ரன் எடுத்தார்.

இதேபோல 2000-ம் ஆண்டு சிட்னியில் 107 ரன் குவித்ததும், 2003-ம் ஆண்டு அடிலெய்டுவில் 148 ரன் குவித்ததும் அவரது சிறப்பான இன்னிங்ஸ் ஆகும்.

2010-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 143 ரன்னும் (கொல்கத்தா) இலங்கைக்கு எதிராக 103 ரன்னும் (கொழும்பு), தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 96 ரன்னும் (டர்பன்), ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 73 ரன்னும் (மொகாலி 1 விக்கெட்டில் வெற்றி) எடுத்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.

வெளிநாட்டில் 77 டெஸ்டில் 5014 ரன் எடுத்துள்ளார். இதில் 9 சதம் அடங்கும். தனக்கு பிடித்த கொல்கத்தா மைதானத்தில் 10 டெஸ்டில் 1217 ரன் எடுத்துள்ளார். 5 சதம் அடித்துள்ளார்.

டுவென்டி-20 உலக கோப்பை பயிற்சி - இந்தியா-பாக்., மோதல்

டுவென்டி-20' உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான், இலங்கையை சந்திக்கிறது.

இலங்கையில் செப்., 18 முதல், அக்., 7 வரை உலக கோப்பை "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 நாடுகள் பங்கேற்கின்றன. இதற்கான பயிற்சி போட்டிகள் 13ம் தேதி துவங்குகிறது.

இந்திய அணி, முதல் போட்டியில் இலங்கையை 15ம் தேதி கொழும்புவில் சந்திக்கிறது. அடுத்து 17ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியா (செப்., 17), பாகிஸ்தானை (செப்., 19) சந்திக்கிறது.

அனைத்து பயிற்சி போட்டிகளும் கொழும்புவில் நடக்கவுள்ளன. இத்தொடர் நடக்கும் போது, பெண்கள் உலக கோப்பை "டுவென்டி-20' தொடரும் (செப்., 26 முதல் அக்., 7 வரை) இங்கு நடக்கிறது. இதற்கான பயிற்சி போட்டிகள் செப்., 22-23ல் நடக்கின்றன.

புதிய தொழிலில் குதிக்கிறார் டோனி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி சர்வதேச அளவில் புதிய தொழிலில் குதிக்கிறார். உடலில் நீண்ட நேரம் நறுமணத்தையும், புத்துணர்ச்சியையும் தரும் ஆண்களுக்கான வாசனை திரவியம் (சென்ட்) விற்பனையை, துபாய் நிறுவனத்துடன் இணைந்து தொடங்குகிறார்.

முதலில் இந்தியா அதன் பிறகு அரபு நாடுகள், பிறகு உலகின் மற்ற இடங்களுக்கும் அவரது நிறுவனம் தொடங்கப்படும்.

அடுத்த மாதம் இலங்கையில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கும் போது, டோனி நிறுவனத்தின் சென்ட்டுகள் இந்திய மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வந்து விடும்.

இதன் மூலம் சர்வதேச அளவில் இது போன்ற விற்பனையில் குதிக்கும் முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சிறப்பை டோனி பெறுகிறார்.

டென்னிஸ் பிரபலங்கள் ரோஜர் பெடரர், மரிய ஷரபோவா ஆகியோர் ஏற்கனவே இது போன்று 'சென்ட்' விற்பனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட் - ஓய்வு முடிவில் லட்சுமண்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருடன், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து லட்சுமண் ஓய்வு பெறத்திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்திய டெஸ்ட் அணியில் "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன் லட்சுமண், 37. கடந்த 1996ல் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார்.

இதுவரை 134 டெஸ்டில், 17 சதம், 56 அரைசதம் உட்பட 8781 ரன்கள் எடுத்துள்ளார். பெரும்பாலான டெஸ்டில், நான்காவது இன்னிங்சில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணிக்கு பல்வேறு வெற்றிகளை தேடித்தந்துள்ளார்.

"நான்காவது இன்னிங்ஸ் நாயகன்' என்றழைக்கப்படும் இவர், கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா சென்ற டெஸ்ட் அணியில் இடம் பெற்ற போதும், பெரியளவில் சோபிக்கவில்லை. இதனால், விரைவில் ஓய்வு பெறுவார் என்று நம்பப்பட்டது.

தொடர்ந்து அணியில் இருப்பதால், இளம் வீரர்களுக்கு பெரும் தடையாக உள்ளார் என்ற விமர்சனங்கள் இவரை பாதித்து விட்டதாம்.

எதிர்வரும் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கவும் இவருக்கு விருப்பம் இல்லையாம். இதனால், இந்த டெஸ்ட் தொடருடன், ஓய்வை அறிவிக்க திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து, தனது நெருங்கிய நண்பர்களிடம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது. இறுதி முடிவை விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தோனி படை தயார்

சர்வதேச போட்டிகளில் பங்கேற்க மனதளவிலும், உடலளவிலும் தயாராக இருக்கிறோம்,'' என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன. இது முடிந்தவுடன், இலங்கையில் டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது.

இதற்கான இந்திய அணியின் புதிய ஆடை அறிமுக விழா நடந்தது. இதில் பங்கேற்ற கேப்டன் தோனி கூறியது:

இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்க, ஒவ்வொரு போட்டியின் போதும், அதிக இடைவெளி இருந்தது. தற்போது நீண்ட தொடரில் கலந்து கொள்ள மனதளவிலும், உடல் அளவிலும் தயாராகவுள்ளோம்.

யுவராஜ் சிங்கை "டிரெசிங் ரூமில் மிஸ்' பண்ணுகிறோம். இவரின் பணியை கோஹ்லி நிரப்பிவிட்டார். தற்போது மீண்டும் யுவராஜ் அணிக்கு திரும்பி இருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த புதிய ஆடை பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடக்கும். இந்த ஆடையினால் ரன்கள் அதிகமாகுமா என்பது பற்றியெல்லாம் தெரியவில்லை. ஆனால் அதிக வசதியாக உணர்கிறேன். ரசிகர்கள் "டிவி'யில் போட்டியை காணும் போது, வெள்ளை நிறத்தில் இருந்தால் டெஸ்ட் போட்டி என்றும், நீல நிறத்தில் இருந்தால் ஒரு நாள் போட்டி என்றும் கணிப்பார்கள்.

தற்போது இதன் மூலம் "டுவென்டி-20' போட்டி என்று அடையாளம் கண்டு கொள்வார்கள். மேலும் இந்த ஆடையில் மூவர்ணக் கொடியும் இடம்பெற்றுள்ளது. இது என் இதயத்தின் அருகில் உள்ளதால், கொஞ்சம் சிறப்பானது.

இவ்வாறு தோனி கூறினார்.

யுவராஜ் சிங் கூறுகையில்,""கடந்த இரண்டு மாதங்களாக கடினமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். மீண்டும் அணியில் இடம் பிடிப்பேன் என நினைக்கவில்லை. இதை என் வாழ்வின் முதல் போட்டியாகத்தான் கருதுகிறேன்,'' என்றார்.

நியூசிலாந்து தொடருக்காக பயிற்சியை துவக்கினார் சச்சின்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக, பயிற்சியை துவக்கினார் இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின்.

இந்தியா வரும் நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் (ஆக., 23 முதல் செப்., 11 வரை), 2 "டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் வரும் ஆக., 23 முதல் 27 வரை நடக்கிறது.

இதனிடையே, ஐந்தாவது ஐ.பி.எல்., தொடருக்குப் பின், இந்திய வீரர் சச்சின் எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்தார்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஓய்வு வேண்டும் என்பதற்காக, சச்சின் தானாக விலகினார். தற்போது நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறார்.

இதற்காக, நேற்று காலை சச்சின் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு (என்.சி.ஏ.,) வந்தார். மதியம் என்.சி.ஏ., "பிசியோதெரபிஸ்டிடம்' நீண்ட நேரம் ஆலோசனை செய்தார்.

பின், வேகத்துக்கு சாதகமான ஆடுகளத்தில், சச்சின் பேட்டிங் பயிற்சி செய்தார். கடந்த சில நாட்களாக இங்கு பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஜாகிர் கானை அழைத்து, தனக்கு பந்து வீசுமாறு கூறி, பயிற்சி செய்தார்.

இலங்கை டுவென்டி-20 தொடரில் மேட்ச் பிக்சிங்

இலங்கையில் நடக்கும் உள்ளூர் "டுவென்டி-20' போட்டிகளில் "மேட்ச் பிக்சிங்' நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐ.பி.எல்., போல, இலங்கை பிரிமியர் லீக் (எஸ்.எல்.பி.எல்.,) "டுவென்டி-20' போட்டிகளை நடத்த, இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி.,) கடந்த ஆண்டு முயற்சித்தது. இந்திய வீரர்கள் விலகல் காரணமாக, கடைசியில் தொடர் ரத்தானது.

இம்முறை இந்திய வீரர்கள் இல்லாமல், கிறிஸ் கெய்ல், சாகிப் அல் ஹசன், அப்ரிதி போன்றவர்களை கொண்டு, தொடர் நடத்த திட்டமிட்டனர். காயம் காரணமாக கெய்ல், சாகிப் போன்றோர் கடைசி நேரத்தில் விலகினர்.

இதனிடையே, அங்கிருந்து வெளியாகும் "டெய்லி மிரர்' பத்திரிகைக்கு ஒரு "டேப்' ஒன்று வந்தது. இதில், எஸ்.எல்.பி.எல்., தொடரில் "மேட்ச் பிக்சிங்' செய்வது தொடர்பாக பேச்சுகள் பதிவாகியுள்ளதாம். பெரும்பாலும் இவை இந்தியில் இருப்பதால், முழு விவரத்தை அந்த பத்திரிகை வெளியிடவில்லை.

இந்த "டேப்', தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழுவிடம் தரப்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்.எல்.சி.,யும் விசாரணை நடத்துகிறது என்றாலும், எவ்வித தகவலையும் தர மறுக்கின்றது.


தொடருக்கு பாதிப்பா:

கடந்த மூன்று நாட்களாக நடக்கும் போட்டிகளுக்கு, பெரியளவில் வரவேற்பு இல்லை. மைதானங்கள் காலியாக கிடக்கின்றன. இப்போது, "மேட்ச் பிக்சிங்' புகாரும் கிளம்பியது தொடரை அதிகமாக பாதிக்கும் என்று தெரிகிறது.


ஒன்றும் செய்யாது:

இதுகுறித்து தொடர் நிர்வாக அதிகாரி சந்தீப் பாம்மர் கூறுகையில்,"" ஊழல் புகாரால் தொடருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இது, ஊழல் தடுப்புக் கண்காணிப்புக் குழுவை எச்சரிக்கையாக இருக்க செய்யப்பட்ட ஏற்பாடாக கூட இருக்கலாம். தவிர, வெறும் புகார் தான். இதில் உறுதியில்லை,'' என்றார்.