சென்னையில் 3-ந்தேதி ஐ.பி.எல். ஏலம்




6-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடக்கிறது. கிண்டியில் உள்ள ஐ.டி.சி ஓட்டலில் காலை 11 மணிக்கு ஏலம் தொடங்குகிறது. 

ஒப்பந்தம் முடிந்த வீரர்களும், ஐ.பி.எல். போட்டியில் ஆடாத வீரர்களும் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.

ஏலப்பட்டியலில் 101 வீரர்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எல்லையில் நிலவும் பதட்டம் காரணமாக பாகிஸ்தான் வீரர்களும் இந்த முறையும் ஏலப்பட்டியலில் இடம் பெறவில்லை.

ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க், சமீபத்தில் ஓய்வு பெற்ற ரிக்கி பாண்டிங் ஆகியோருக்கு அடிப்படை விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருவருக்கான ஆரம்ப விலை ரூ.2.12 கோடியாகும். இதில் கிளார்க்கை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவலாம். 

அவர் கடந்த ஐ.பி.எல். போட்டியில் புனே வாரியர்ஸ் அணியில் ஆடினார். அவரை மீண்டும் எடுக்க அந்த அணி ஆர்வத்துடன் உள்ளது. இதேபோல கிளார்க்கை ஏலத்தில் எடுக்க மும்பை அணியும் தீவிரமாக உள்ளது. அவர் 20 ஓவர் சர்வதேச போட்டியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று இருந்தார்.

ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பாண்டிங் விலை போவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. பாண்டிங் ஏற்கனவே ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆடி இருக்கிறார்.

ஜான் போத்தா, கிப்ஸ், பிலாண்டர் (தென் ஆப்பிரிக்கா), ஆரோன் பிஞ்ச், ஹியூக்ஸ், மேத்யூ வாடே, ஹென்ரிக்ஸ், மேக்ஸ்வெல், பொலிஞ்சர் (ஆஸ்திரேலியா), டாரன் பிராவோ, டாரன்சேமி (வெஸ்ட்இண்டீஸ்), ரவி போபரா (இங்கிலாந்து), மார்ட்டின் குப்தில், ரைடர் (நிïசிலாந்து), சண்டிமால், உபுல் தரங்கா, பிரசன்னா ஜெயவர்த்தனே (இலங்கை) போன்ற முன்னணி வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

இந்திய வீரர்ளில் ஆர்.பி.சிங், அபிஷேக் நாயர், மன்பிரீத் கோஸ், சுதிப் தியாகி ஆகியோரும் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

அனல் பறக்கும் இந்தியா-ஆஸி., தொடர்


இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் தொடரில் அனல் பறப்பது நிச்சயம்,'' என, முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் தெரிவித்தார்.

அடுத்த மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பிப்., 22 முதல் மார்ச் 24 வரை) பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் சென்னையில் பிப்., 22 முதல் 26 வரை நடக்கிறது.

சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் 3வது இடத்திலுள்ள ஆஸ்திரேலிய அணி, இத்தொடரை முழுமையாக (4-0) வென்றால் 121 புள்ளிகள் கிடைக்கும். 

அதேநேரம், இப்போது முதலிடத்திலுள்ள தென் ஆப்ரிக்க அணி (124), பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-2 என இழந்தால், தரவரிசையில் நீண்ட இடைவெளிக்குப் பின், "நம்பர்-1' இடத்தை ஆஸ்திரேலியா பிடிக்கலாம். 
இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் "அதிரடி' விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் கூறியது:

"டாப்-3' அணிகள் எல்லாமே சமபலம் பொருந்தியவை தான். இந்த அணிகள் வாய்ப்பு கிடைத்தால் ஒன்றுக்கொன்று மற்ற அணிகளை எப்போது வேண்டுமானா<லும் வீழ்த்தி விடும். இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி சமீபத்தில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. 

இதனால், ஆஸ்திரேலிய அணிக்கும் கோப்பை வெல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்தொடர் சிறப்பானதாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனெனில், இரு அணிகளும் விளையாட்டுக் களத்தில் ஆக்ரோஷமான போட்டியை வெளிப்படுத்தும். எதிரணியை மிரட்ட வேண்டும் என நினைத்தால், கடுமையாக போராட வேண்டும். தவிர, காரசாரமான மோதலும் தொடருக்கு வலுசேர்க்கும். 

"சுழல்' வேண்டும்:

அதேநேரம், இந்திய மண்ணில் வெல்ல வேண்டும் எனில், சுவான், பனேசர் போன்ற தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் எப்போதும் அணிக்கு தேவைப்படும். 2004ல் ஆஸ்திரேலியா தொடரை வென்ற போது, சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன், முக்கிய பங்கு வகித்தார். 

ஆனால், இப்போதைய நிலையில் வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்துவர் எனத் தெரிகிறது. மொத்தத்தில், மந்தமான ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய பவுலர்கள் எப்படி செயல்பட போகின்றனர் என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளேன். 

சச்சினுக்கு மரியாதை:

ஒருநாள் போட்டிகளில் இருந்து சமீபத்தில் விடைபெற்றவர் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் தான், அநேகமாக இவரது கடைசித் தொடராக இருக்கும் எனத் தெரிகிறது. உலக கிரிக்கெட்டில் இவருக்குள்ள மரியாதை என்றும் நிலைத்து இருக்கும். 

இவர் ஓய்வு பெற்றாலும், எங்கள் மக்களிடம் இருந்து எப்போதும் மரியாதை கிடைக்கும். சமீபத்தில் ஆஸ்திரேலிய அரசின் உயரிய "ஆர்டர் ஆப் மெரிட்' விருது வழங்கப்பட்டதே இதற்கு சாட்சி.

இவ்வாறு கில்கிறிஸ்ட் கூறினார்.

சேவக்கை தொடர்ந்து அபாய நிலையில் காம்பிர்


சேவக்கை தொடர்ந்து மற்றொரு துவக்க வீரர் காம்பிரும், இந்திய அணியில் இருந்து நீக்கப்படும் அபாயத்தில் உள்ளார்.

இந்திய அணியின் துவக்க வீரர் காம்பிர், 31. இதுவரை 54 டெஸ்டில் பங்கேற்றுள்ள இவர், கடைசியாக 2010, சிட்டகாங்கில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் சதம் (116) அடித்தார். இதன் பின் விளையாடிய 26 டெஸ்டில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 

ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில், 2012, ஜூலையில் இலங்கைக்கு எதிரான கொழும்பு போட்டியில் சதம் அடித்தார். இதன் பின் 9 போட்டிகளில் சதம் அடிக்கவில்லை என்றாலும், இரு அரைசதம் அடித்துள்ளார்.

இருப்பினும், சமீபத்தில் சேவக் நீக்கப்பட்டது போல, இவரது இடமும் அணியில் கேள்விக்குறியாகத் தான் உள்ளதாம். இப்போதைக்கு சரியான மாற்று வீரர் இல்லாததால் தான் காம்பிர் அணியில் நீடித்து வருகிறார். குறைந்தது டெஸ்ட் அணியில் இருந்தாவது நீக்க வேண்டும் என, ஓய்வு பெற்ற சீனியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 

யார் மாற்று: 

சரி, காம்பிரை தூக்கி விட்டால் யாரை கொண்டு வருவது. முரளி விஜய், அபினவ் முகுந்த் ஏற்கனவே அணியில் இருந்து மோசமான "பார்ம்' காரணமாக நீக்கப்பட்டவர்கள். ரகானேவும் ஏமாற்றுகிறார். உன்முக்த் சந்த்தும் இன்னும் "ரெடியாக'வில்லை. 

இந்நிலையில், வேறு வழியின்றி சமீபத்தில் ஓரளவுக்கு ரன்கள் சேர்த்து வரும் முரளி விஜய் பக்கம் தான் காற்று அடிக்கிறது. ஒருவேளை காம்பிருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து, "பார்ம்' திரும்பும் வரை காத்திருக்கலாம் என முடிவெடுத்தால், முரளி விஜய் நிலை தர்மசங்கடம் தான். 

தொடர்ந்து வாய்ப்பு: 

ஏனெனில், காம்பிர் சதம் தான் அடிக்கவில்லை தவிர, தொடர்ந்து 30, 40 ரன்கள் அடிப்பதை கணக்கில் கொள்ள வேண்டும். இப்போதைக்கு இவருக்கு தேவை தன்னம்பிக்கை தான். ஏனெனில் "டாப்' வீரர்கள் அனைவருக்கும் இதுபோன்ற நிலை ஏற்படுவது சகஜம் தான். இதில் எப்படி மீண்டு வருகின்றனர் என்பது தான் முக்கியம். 

கடினம் தான்: 

காம்பிரை பொறுத்தவரையில் துணிச்சலான அணுகுமுறையின் மூலம் தான் மீண்டு வர முடியும். சமீபத்தில் கேப்டன் பதவியை குறிவைத்து இவர் செயல்படுவதாக புகார் எழுந்தது. கோல்கட்டா டெஸ்ட் போட்டிக்கு முன், காம்பிர் மீது அணியின் கேப்டன் தோனி, இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) புகார் தெரிவித்தார் என செய்திகள் வெளியானது. 

இதையெல்லாம் மறந்து, முதலில் அணிக்கு தேவையான ரன்கள் சேர்க்க வேண்டும். இல்லையெனில், அணியில் இடத்தை தக்கவைப்பதே கடினம் தான். 

இந்திய அணிக்கு தோனி கிடைத்தது அதிர்ஷ்டம்


இந்திய அணிக்கு தோனி கிடைத்தது அதிர்ஷ்டம். சுமாரான அணியை சிறப்பாக வழி நடத்துகிறார்,'' என, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜெப்ரி பாய்காட் பாராட்டு தெரிவித்தார்.

இந்திய அணிக்கு "டுவென்டி-20', 50 ஓவர் உலக கோப்பையை வென்று தந்தவர் தோனி. இதுவரை 134 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கிய தோனி, 77ல் வென்று, அதிக வெற்றிகள் பெற்றுத்தந்த இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றார். 

இதுகுறித்து ஜெப்ரி பாய்காட் கூறியது:

இந்திய அணியை எடுத்துக்கொண்டால், தற்போதைய நிலையில் சுமாராகத்தான் உள்ளது. வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சில் பலவீனமாக உள்ளது. தவிர, டிராவிட், லட்சுமண் சமீபத்தில் ஓய்வு பெற்றுவிட்டனர். சச்சினும் அதிகமான ரன்களை சமீபத்தில் எடுக்கவில்லை. 

இதெல்லாம் தோனிக்கு பாதகமானவை. இந்நிலையில், தோனி குறித்து வழக்கமான முறையில் முடிவு செய்வது தவறு. என்னைப் பொறுத்தவரையில் இவர், இந்திய அணிக்கு கிடைத்தது பெரும் அதிர்ஷ்டம் தான். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வியால், தோனியை நீக்க முடிவெடுத்தாலும், இவருக்கு மாற்றாக யாரும் இல்லை. 

ஆனால், ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில் மிகச்சிறப்பாக செயல்படுகிறார். வீரர்களை நிர்வகிக்கும் தலைமைப் பண்பு, இவரிடம் அசத்தலாக உள்ளது. டெஸ்ட் போட்டிகளில், இது சற்று குறைவாக உள்ளது. இதற்காக இவரை மாற்றுவது என்பது முடியாத காரியம். 

மிகவும் கடினம்: 

பொதுவாக அணி தோற்கும் போது, கேப்டனைத் தான் குற்றம் சொல்வர். தோற்கும் கேப்டனை வெளியேற்றுவது தான் வழக்கம். இப்போதுள்ள நிலையில் இந்திய அணியின் தோல்விக்கு தோனியை குறைசொல்ல முடியாது. டிராவிட், லட்சுமண், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான் அணியில் இல்லை. சச்சினும் ஓய்வு முடிவில் உள்ளார். இவர்களுக்கு மாற்று வீரர்களை கண்டறிவது மிகவும் கடினம். 

தோனியின் தவறல்ல:

 இது தோனியின் தவறல்ல. அவரை குற்றம் சொல்லும் முன், அணியின் தரத்தை கவனத்தில் கொண்டு பேச வேண்டும். அதிரடி துவக்க வீரர் சேவக் நீக்கம், மற்றொரு வீரர் காம்பிர் தொடர்ந்து சொதப்பிய போதும், அணியில் சேர்க்கப்படுகிறார். அதிகப்படியான போட்டிகளில் பங்கேற்பதால் சோர்ந்துள்ள அவர், தானாக முன்வந்து விலகினால் நல்லது. 

கோஹ்லி "நோ': 

இந்திய அணியின் கேப்டனாக விராத் கோஹ்லி வரலாம் என்றாலும், இதற்கு இன்னும் அதிக காலம் காத்திருக்க வேண்டும். ஏனெனில், சில நேரங்களில் பொறுமையும் தேவைப்படும். இவ்விஷயத்தில் இவர் தோனியிடம் நன்கு கற்றுக்கொள்ள வேண்டும். கோஹ்லியிடம் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருந்தாலும், அவ்வப்போது பொறுமை இழந்து விடுகிறார். கேப்டன் என்பவர் எந்நிலையிலும் இதை இழக்கக் கூடாது. ஏனெனில், இவரை வைத்து தான் அணியை மதிப்பீடு செய்வர். 

இவ்வாறு ஜெப்ரி பாய்காட் கூறினார்.

பங்கேற்பது சந்தேகம்

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில், இந்திய அணி தொடரை 3-1 என வென்றது. ஐந்தாவது போட்டி தரம்சாலாவில் வரும் 27ம் தேதி நடக்கவுள்ளது. 

இதில், இந்திய கேப்டன் தோனி பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. பயிற்சியின் போது வலது கை பெருவிரலில் பந்து தாக்கிய போதும், மூன்றாவது, நான்காவது போட்டியில் கலந்து கொண்டார். காயத்தின் தன்மையை அதிகப்படுத்த விரும்பாத தோனி, ஐந்தாவது போட்டியில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. 

இதுகுறித்து தோனி கூறுகையில்,"" இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இந்திய அணி வென்று விட்டது. இதனால், கடைசி போட்டியில் விளையாடுவதா, இல்லையா என்பது குறித்து தேர்வாளர்களுடன் பேசவுள்ளேன்,'' என்றார்.

வரலாறு படைத்தது நியூசிலாந்து


தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வில்லியம்சன் சதம் அடிக்க, நியூசிலாந்து அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. 

இதன் மூலம் தொடரை 2-0 என கைப்பற்றியது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. இரண்டாவது போட்டி கிம்பர்லியில் நடந்தது. "டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டுபிளசி "பீல்டிங்' தேர்வு செய்தார். 

கப்டில் ஏமாற்றம்: 

நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர் கப்டில் "டக்' அவுட்டானார். வாட்லிங் (12) நிலைக்கவில்லை. பின் இணைந்த வில்லியம்சன், எலியட் ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்தது. எலியட் (48) அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்சன் ஒருநாள் அரங்கில் 3வது சதம் எட்டினார். 

கேப்டன் பிரண்டன் மெக்கலம் (17) ஏமாற்றினார். கடைசி நேரத்தில் நாதன் மெக்கலம் (19), மில்ஸ்(15)கைகொடுக்க, நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் (145) அவுட்டாகாமல் இருந்தார்.

 ஸ்மித் அரைசதம்: 

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு குவின்டன் டிகாக் (25) ஏமாற்றினார். பின் இணைந்த ஸ்மித், இங்ராம் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஸ்மித் (66) தனது 47வது அரைசதத்தை பதிவு செய்தார். இங்ராம் (79) தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். பெகார்டின் (31), மார்னே மார்கல் (19*) ஓரளவு கைகொடுத்தனர். 

மற்ற வீரர்கள் யாரும் ஒற்றை இலக்கை தாண்டவில்லை. தென் ஆப்ரிக்க அணி 49.1 ஓவரில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம், நியூசிலாந்து அணி, தென் ஆப்ரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி, புதிய வரலாறு படைத்தது. 

முன்னதாக 2000-01, 2005-06, 2007-08ல் தென் ஆப்ரிக்கா சென்ற நியூசிலாந்து அணி, தொடரை இழந்து ஏமாற்றியது.

மன்னிப்பு கேட்டார் கோஹ்லி


விதியை மீறி "மீடியாவுக்கு' பேட்டி கொடுத்த செயலுக்காக மன்னிப்பு கேட்டார் இந்திய வீரர் விராத் கோஹ்லி. 

இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) விதிப்படி, தொடர் நடந்து கொண்டிருக்கும் போது, போட்டியன்று ஏற்பாடு செய்யப்படும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு தவிர, மற்றபடி யாரும் "மீடியாவிடம்' பேசக் கூடாது. கேப்டன் மட்டும் பிற இடங்களில் கருத்துக்களை தெரிவிக்கலாம். 

இவ்விதியை மீறியுள்ளார் விராத் கோஹ்லி. கடந்த 19ம் தேதி, டில்லியில் இருந்து வெளியாகும் பத்திரிகையில் இவரது பேட்டி வெளிவந்தது. இதில் இந்திய அணியின் எதிர்காலம் உட்பட பல பிரச்னைகள் குறித்து பேசியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பி.சி.சி.ஐ.,யின் செல்வாக்கு மிக்க நிர்வாகி ஒருவர், இந்திய அணிக்குரிய பொறுப்பாளருக்கு "இ-மெயில்' அனுப்பினார். இதற்கு பதில் தெரிவித்த அவர், "பி.சி.சி.ஐ., விதிகள் குறித்து வீரர்களிடம் மீண்டும் எடுத்துக் கூறப்படும்,' என, உறுதியளித்தார்.

இதனிடையே, விராத் கோஹ்லி தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்த செய்தியில்,"தொடரின் நடுவில் "மீடியாவிடம்' பேசக்கூடாது எனத் தெரியாது. இனி இதுபோன்ற செயல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்,' என, தெரிவித்துள்ளார்.

மும்பை அணியில் சச்சின் மகனுக்கு இடமில்லை


மும்பை அணியில் தேர்வு செய்யப்பட்ட சச்சின் மகன் அர்ஜுனுக்கு விளையாடும் "லெவனில்' வாய்ப்பு தரப்படவில்லை. 

இந்திய அணியின் சாதனை வீரர் சச்சின். சமீபத்தில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 

இவரது வாரிசு அர்ஜுன் டெண்டுல்கரும், 13, கிரிக்கெட் அரங்கில் "ஆல்-ரவுண்டராக' வளர்ந்து வருகிறார். 

உள்ளூர் ஜிம்கானா அணி சார்பில் அசத்தி வரும் இவர், 14 வயதுக்குட்பட்டோருக்கான மும்பை அணியில் தேர்வு செய்யப்பட்டார். 

இவரை விட சிறப்பான வீரர்கள் இருக்க, சச்சின் மகன் என்பதால் தான் அணியில் வாய்ப்பு தரப்பட்டது என சர்ச்சை எழுந்தது. 

இதனிடையே, நேற்று குஜராத் அணிக்கு எதிரான மண்டல அளவிலான போட்டி துவங்கியது. 

முதலில் களமிறங்கிய குஜராத் அணிக்கு ஹெட் படேல் அதிகபட்சமாக 48 ரன்கள் எடுத்து கைகொடுக்க, 9 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்திருந்தது. 

மும்பை சார்பில் அக்னி சோப்ரா, தனுஷ் கோடியன், த்ரூவ் விவேக், ஆஜிம் ஷெய்க் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
 
இதில் மும்பைக்காக களமிறங்கிய பதினோரு வீரர்கள் கொண்ட அணியில் அர்ஜுன் சேர்க்கப்படவில்லை. 

இருப்பினும், இதுகுறித்த வருத்தம் எதுவும் இல்லாத அர்ஜுன், களத்துக்கு வெளியில் இருந்த "பெஞ்சில்' அமர்ந்து கொண்டு, வீரர்களை உற்சாகப்படுத்த சப்தமாக குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார். 

மைக் ஹஸ்சி ஓய்வு அதிர்ச்சி அளிக்கிறது - பாண்டிங்


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான மைக் ஹஸ்சி சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இலங்கைக்கு எதிராக நடந்த 3-வது டெஸ்டில் விளையாடியதே அவரது கடைசி டெஸ்ட் ஆகும்.

இந்த நிலையில் மைக் ஹஸ்சியின் ஓய்வு முடிவு தனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஹஸ்சியின் பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் ஏன் ஓய்வு முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை. அவரது நண்பர் என்ற முறையில் எனக்கே அவரது திட்டம் தெரியாது. அவரது இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆசஷ் தொடருக்கு பிறகு கிளார்க் ஓய்வு பெறுவார் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் அவர் நன்றாக ஆடி வருகிறார். ஹியூக்ஸ், உஸ்மான், குவாஜா, வாட்சன், வார்னர் ஆகியோர் வெற்றிடத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பாண்டிங் கூறினார்.

பாண்டிங் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பெர்த் டெஸ்டோடு அவர் ஓய்வு பெற்றார். அதற்கு அடுத்த டெஸ்ட் தொடரில் ஹஸ்சி ஓய்வு பெற்றுள்ளார். 

அனுபவம் வாய்ந்த இந்த இருவரும் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டில் ஆடுகிறது.

கங்குலியை சமன் செய்த டோனி


டோனி தலைமையில் இந்திய அணி ஒருநாள் போட்டியில் 76-வது வெற்றியை பெற்றது. 

133 ஆட்டத்தில் விளையாடி இந்த வெற்றியை பெற்றது. 46 ஆட்டத்தில் தோற்றது. 

3ஆட்டம் `டை' ஆனது. 8 ஆட்டம் முடிவு இல்லை. இதன்மூலம் கங்குலி வெற்றியை டோனி சமன் செய்தார். 

கங்குலி தலைமையில் இந்திய அணி 146 ஆட்டத்தில் விளையாடி இந்த வெற்றியை பெற்றது. 65 ஆட்டத்தில் தோற்று, 5 ஆட்டம் முடிவு இல்லை. 

ஒருநாள் போட்டியில் அதிக வெற்றி பெற்ற இந்திய கேப்டன்களில் டோனியும், கங்குலியும் இணைந்து 2-வது இடத்தில் உள்ளனர். இன்னும் ஒரு ஆட்டத்தில் வென்றால் டோனி முன்னேறிவிடுவார். 

அசாருதீன் 90 வெற்றி பெற்று (174 ஆட்டம்) முதல் இடத்தில் உள்ளார். 4000 ரன்னை வேகமாக எடுத்த 2-வது வீரர் கோலி ஆவார்.

விவிலியன் ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட்இண்டீஸ்) 4 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் கடந்த முதல் வீரர் ஆவார். அவர் 88 இன்னிங்சிலும், வீராட் கோலி 93 இன்னிங்சிலும் இந்த ரன்னை தொட்டுள்ளார்.

பி.சி.சி.ஐ., செய்தது சரியா? - அதிருப்தியில் மும்பை அணி


சர்வீசஸ் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டி, மழையால் தடைபட்டதால், மும்பை அணி அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.

மும்பை, சர்வீசஸ் அணிகள் இடையிலான ரஞ்சி கோப்பை அரையிறுதி டில்லி பாலம் மைதானத்தில் நடக்கிறது. முதல் ஒன்றரை நாட்கள் மட்டும் நடந்த இப்போட்டியில், மும்பை அணி முதல் இன்னிங்சில், 6 விக்கெட்டுக்கு 380 ரன்கள் எடுத்திருந்தது. 

இதனிடையே, கடந்த 17ம் தேதி இரவு, புயல் காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஆடுகளத்தை மூன்று அடுக்கு தார்ப்பாய்களால் மூடியும், பலத்த காற்று வீசியதால் முழுமையாக சேதம் அடைந்தது. 

மைதானத்தில் இருந்த "சைடு ஸ்கிரீன்கள்' கிழிந்து விட்டன. நேற்று முன்தினம் மழை அவ்வப்போது விட்டு விட்டு பெய்தது. மைதானத்தில் நீரை வெளியேற்றும் வசதி சரியாக இல்லாததால், அதிகமாக நீர் தேங்கியது. இதனால், "சூப்பர் சானிக்' எந்திரங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. 

நேற்றும் ரத்து:

நேற்று காலை நல்ல வெயில் அடித்தது. ஆடுகள பராமரிப்பாளர் தல்ஜித் சிங் உட்பட மற்ற அனைத்து பணியாளர்களும், கடுமையாக முயன்றும் நேற்று ஒருமணி நேரம் கூட போட்டியை நடத்தமுடியவில்லை. இதனால், 3, 4 வது என, இரு நாட்கள் ஒரு பந்து கூட வீசப்படவில்லை. இதுவரை 143 ஓவர்கள் மட்டும் தான் வீசப்பட்டுள்ளது.

அதிர்ஷ்டம் யாருக்கு:

இன்று கடைசி நாளில் இரு அணியின் முதல் இன்னிங்ஸ் முடியவில்லை எனில், புதிய விதிப்படி நாளை வரை (6வது நாள்) போட்டி நீட்டிக்கப்படும். அப்படியும் முடியவில்லை எனில், பைனலுக்கு செல்லும் அணியை "டாஸ்' மூலம் தேர்வு செய்வர். இதனால் 39 முறை சாம்பியன் பட்டம் வென்ற, மும்பை அணி அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.

செய்தது சரியா:

அரையிறுதியை மும்பைக்கு மாற்ற வேண்டும் என, போட்டி துவங்கும் சச்சின் விடுத்த கோரிக்கையை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ஏற்க மறுத்தது. 

ஆனால், உலகின் பணக்கார கிரிக்கெட் போர்டான பி.சி.சி.ஐ., போட்டியின் முக்கியத்துவத்தின் ("நாக்-அவுட்') அடிப்படையில், அனைத்து வசதிகளும் உள்ள மைதானத்தை முன்னதாக தேர்வு செய்திருந்தால் இப்படிப்பட்ட துரதிருஷ்ட நிலையை தவிர்த்திருக்கலாம்.

இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா


இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெற்றது. இதில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் மகேந்திர சிங் டோனி கூறியதாவது:-

இந்திய அணி இர்பான் பதானுக்கு அடுத்து ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் இல்லாமல் திணறி வந்தது. ஆனால் இப்பொழுது அந்த இடத்திற்கு ரவீந்திர ஜடேஜா பொருத்தமாக வந்துள்ளார். 

இந்திய அணியை சமநிலையில் கொண்டு செல்பவர்களில் ரவீந்திர ஜடேஜாவும் ஒருவர். மிக சிறப்பாக விளையாடுகிறார். 

புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு 10 ஒவர்கள் பவுலிங் செய்ய நாம் யுவராஜ் சிங் மற்றும் பகுதி நேர பந்துவீச்சாளர்களையே பயன்படுத்தினோம். ஆனால், இந்த புதிய விதிப்படி சிறந்த பந்து வீச்சாளராக யுவராஜ் சிங் நிலைக்க இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை. 

டாப் ஆர்டரில் உள்ளவர்கள் சிறப்பாக விளையாடவேண்டும். ஜடேஜா சிறிது நேரம் பேட் செய்ய முடியும். ஆனால், அதேநேரத்தில் அதிகம் அழுத்தம் கொடுக்க வேண்டியதில்லை. 

அவர் 7-வது வீரராக களம் இறங்கி விளையாடுகிறார். ஜடேஜா சிறப்பாக பேட்டிங் செய்ய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மீது நாம் நம்பிக்கை வைக்கவேண்டும். அதனால் அவர் மென் மேலும் சிறப்பாக விளையாடுவார்.

இவ்வாறு டோனி கூறினார்.

தோனியை விமர்சிக்கலாமா ?


தோனியை விமர்சிப்பது என்பது சச்சினின் ரன் எடுக்கும் திறமையை கேள்வி கேட்பதற்கு சமம்,'' என, பயிற்சியாளர் சன்ச்சல் பட்டாச்சார்யா தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக் கேப்டன் தோனி, 31. "டுவென்டி-20', 50 ஓவர் உலக கோப்பை போன்வற்றை பெற்றுத்தந்தவர். சமீப காலமாக இவரது தலைமையில் அணியின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை. 

இதையடுத்து இவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதற்கு தோனியின் முதல் பயிற்சியாளராக இருந்த சன்ச்சல் பட்டாச்சார்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவர் தான் கால்பந்து போட்டியில் கோல்கீப்பராக இருந்த தோனியை, கிரிக்கெட் அரங்கில் விக்கெட் கீப்பராக களமிறக்கினார். 

தோனிக்கு எதிரான விமர்சனங்கள் குறித்து பட்டாச்சார்யா கூறியது: 

தோனியின் கேப்டன் திறமை பற்றி கவாஸ்கர் கேள்வி எழுப்பினார். பின் கொச்சி ஒருநாள் போட்டியில் இந்தியா வென்றதும், தோனியைவிட சிறந்த கேப்டன் யாரும் இல்லை என்று அவரே மாற்றி சொன்னதாக கேள்விப்பட்டேன்.

விமர்சனங்கள் வரவேற்கத்தக்கது. ஆனாலும், இது பயனுள்ளதாக அமைய வேண்டும். ஒவ்வொரு நாளும் வெற்றி நாளாக அமையாது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். "டுவென்டி-20', 50 ஓவர் உலக கோப்பை, டெஸ்டில் "நம்பர்-1' உள்ளிட்ட பெருமைகளை தோனிதான் பெற்றுத்தந்தார். இப்படிப்பட்டவரை குறை சொல்வது என்பது, சச்சினின் ரன் எடுக்கும் திறமையை சந்தேகிப்பதற்கு சமம். 

வரும் 2015ல் நடக்க உள்ள உலக கோப்பையை போட்டியை கருத்தில் கொண்டு, ஏதாவது ஒரு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி தோனி கண்டிப்பாக சிந்திப்பார். 

நெருக்கடி:

ராஞ்சியில் நாளை நடக்கவுள்ள போட்டியை நினைத்து, ஒரு பயிற்சியாளராக பதட்டமாக உள்ளேன். இந்தப் போட்டியில், தோனி சிறப்பாக விளையாடுவதோடு, அணியும் வெற்றி பெற, கடவுளை வேண்டுகிறேன். சொந்த ஊரில் விளையாடுவதால், தோனியும் கடும் நெருக்கடிக்கு உள்ளாவார். இருப்பினும், "கூலாக' செயல்பட்டு, பல்லாயிரம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடுசெய்வார் என நம்புகிறேன். 

கோல் கீப்பர்:

இவர் படித்த ஜவஹர் வித்யா மந்திர் பள்ளிக்கு, எப்போதும் செல்வேன். 1995ல் இவரை, முதன் முறையாக பார்த்தபோது, கால்பந்து விளையாட்டின் கோல் கீப்பராக இருந்தார். கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக விளையாட விருப்பமா ? என கேட்டேன். முதல் போட்டியில் பேட்டிங் வரிசையில் 9வது இடத்தில் வந்தார். தவிர, விக்கெட் கீப்பராகவும் சிறப்பாக செயல்பட்டார். 

இவ்வாறு பட்டாச்சார்யா கூறினார்.

கேப்டன் பதவியில் நீடிக்கலாமா? - தோனிக்கு அட்வைஸ்


இளம் வீரர்களுக்கு வழி விட்டு, "டுவென்டி-20' அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலக வேண்டும்,'' என, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா தெரிவித்தார்.

"டுவென்டி-20' உலக கோப்பை போட்டியின் முதல் கோப்பையை இந்திய அணிக்கு முதன் முறையாக (2007) வென்று தந்தவர் கேப்டன் தோனி. தொடர்ந்து கேப்டன் பணியில் ஜொலிக்கும் இவர், 2010ல் ஐ.பி.எல்., மற்றும் சாம்பியன்ஸ் லீக், 2011ல் ஐ.பி.எல்., என, மூன்று முறை உள்ளூர் "டுவென்டி-20' போட்டிகளில், சென்னை அணிக்காக கோப்பை வென்று கொடுத்தார். 

தவிர, 2008, 2012ல் பைனல், 2009ல் அரையிறுதி வரை அணியை கொண்டு சென்றார். இவரது பலமே "டுவென்டி-20' தான். அப்படி இருக்கையில் சமீபத்தில் டிராவிட் கூறுகையில்,"ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலக வேண்டும்,' என்றார். 

இந்த வரிசையில் இப்போது ரமீஸ் ராஜாவும் இணைந்துள்ளார். 

ரமீஸ் ராஜா கூறியது:

இந்திய "டுவென்டி-20' அணியை முன்னேற்ற வேண்டுமெனில், கேப்டன் பதவியில் இருந்து தோனி தானாக முன்வந்து விலக வேண்டும். அப்போது தான் இளம் வீரர்கள் கேப்டன் பணிக்கு தயாராக முடியும். கேப்டன், நல்ல நிர்வாகிகள் என்பவர்கள், அணியின் நலனுக்காக கடின முடிவுகளை எடுக்கத் தயங்கக் கூடாது. 

இந்தியாவைப் பொறுத்தவரையில் ரசிகர்கள் புள்ளி விவரங்களுக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பர். இந்தியா, பாகிஸ்தான் அணிகள் எத்தனை போட்டிகளில் வென்றுள்ளது என பார்ப்பதில்லை. 

இவ்வாறு ரமீஸ் ராஜா கூறினார்.

இந்திய அணியின் "பேட்டிங் ஆர்டர்' குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியது:

கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங் என்பது மிகவும் கடினமான பணி. 300 பந்துகளுக்கு உட்கார்வது, எழுவது என்பது சாதாரண விஷயமல்ல. இந்நிலையில், தோனி பேட்டிங்கில் நான்காவதாக வருவது என்பது மனிதத்தன்மை அற்றது. 

இந்த இடத்தில் தோனியால் தேவையான ரன்களை எடுக்க முடிவதில்லை. என்னைப் பொறுத்தவரையில் கேப்டன் தோனி, பேட்டிங்கில் 6வது இடத்தில் தொடர்ந்து களமிறங்க வேண்டும். 

பவுலிங்கில் இஷாந்த் சர்மாவின் வேகம் குறைந்து விட்டது. இருப்பினும், தவறுகளை உடனே திருத்திக் கொள்கிறார். முதல் போட்டியில் 86 ரன்கள் கொடுத்த இவர், அடுத்து சுதாரித்துக் கொண்டார். 

ஸ்ரீசாந்த் வேகத்துடன், பந்தை "சுவிங்' செய்வதிலும் வல்லவர். இவரது உடற்தகுதி சரியாக இருந்தால், அனைத்து வித கிரிக்கெட்டிலும் பங்கேற்கலாம்.

இவ்வாறு வாசிம் அக்ரம் கூறினார்.

தோனி அபாயகரமான பேட்ஸ்மேன்


இந்தியாவுடனான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது குறித்து அந்த அணியின் கேப்டன் குக் கூறியதாவது:- 

தோனியும், ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தால் எங்களால் ஒன்றும் செய்ய இயலாமல் போனது. 

இருவரும் எந்த பந்து வீச்சாளர்களையும் விட்டு வைக்காமல் அதிரடியாக ஆடினார்கள். 

தோனி கடைசி வரை நின்று ஆடினால் கஷ்டம்தான். அவர் ஒரு அபாயகரமான பேட்ஸ்மேன். 

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலும் அவர் சிறப்பாக ஆடியதை பார்த்து இருந்தேன். 

இதேபோல ஜடேஜாவும் சிறப்பான வீரர் ஆவார். அவர் முதல்தர போட்டியில் டிரிபிள் செஞ்சூரி அடித்து முத்திரை பதித்து இருக்கிறார். 

கடைசி 10 ஓவரில் நாங்கள் 100 ரன்னுக்கு மேல் கொடுத்துவிட்டோம். இதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது. 

இந்திய அணி வீரர்கள் இந்தப்போட்டியில் அனைத்து வகைகளிலும் சிறப்பாக செயல்பட்டனர். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கொச்சியில் பதிலடி கொடுத்தது இந்தியா


கொச்சியில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ராஜ்கோட்டில் பெற்ற தோல்விக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளது.

டிண்டா நீக்கம்... 

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி தற்போது 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. 

இந்நிலையில் இரண்டாவது ஒரு நாள் போட்டி கொச்சியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பேட்டிங் செய்யும் முடிவை எடுத்தார். இந்திய அணி அசோக் டிண்டா நீக்கப்பட்டு ஷமி அகமது சேர்க்கப்பட்டார். 

ரெய்னா அரைசதம்... 

இதையடுத்து பேட்டிங்கை துவக்கிய இந்திய அணிக்கு கம்பீர், ரகானே ஜோடி ஏமாற்றம் அளித்தது. இருவரும் அடுத்தடுத்து அவுட்டானார்கள். கம்பீர் 8, ரகானே 4 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து விராத் கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த யுவராஜ், இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்தார். 

5 பவுண்டரிகள் விளாசிய யுவராஜ் 37 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி 37 ரன்களுக்கு அவுட்டானார். பொறுப்புடன் பேட் செய்த ரெய்னா, அரைசதம் கடந்து அசத்தினார். 2 சிக்சர், 2 பவுண்டரி அடித்த அவர் 55 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். 

ஜடேஜா 37 பந்தில் 61 ரன்... 

ஏழாவது வீரராக வந்த ரவீந்திர ஜடேஜா, கேப்டன் தோனியுடன் இணைந்து ஆட்டத்தின் போக்கினை மாற்றினார். தோனி 66 பந்தில் 72 ரன்கள் எடுத்தார். 2 சிக்சர், 8 பவுண்டரி விளாசிய ஜடேஜா, 37 பந்தில் 61 ரன்கள் குவித்து, ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது.

இந்தியா பதிலடி... 

சவாலான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியை புவனேஷ் குமார், ஷமி அகமது ஜோடி மிரட்டியது. பெல் ஒரு ரன்னுக்கும், குக் 17 ரன்களுக்கும் பெவிலியன் திரும்பினர். பீட்டர்சன் 42, ரூட் 36 ரன்கள் எடுத்தனர். கீய்ஸ்விட்டர் 18 ரன்கள் எடுத்தார். 

மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்ப இங்கிலாந்து அணி 36 ஓவரில் 158 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்தியா சார்பில் புவனேஸ்வர் குமார், அஸ்வின் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 

ரவிந்திர ஜடோனா 2 விக்கெட் கைப்பற்றினர். இந்த வெற்றியன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது ஒரு நாள் போட்டி வரும் 19ம் தேதி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெறவுள்ளது. 

இந்திய அணியில் ரோகித் சர்மா தேவையா?


இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிப்பது பெரும் வியப்பாக உள்ளது. 

இந்திய அணியின் "மிடில் ஆர்டர்' வீரர் ரோகித் சர்மா, 30. இதுவரை 86 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், 2010ல் அடித்த இரு சதங்கள் உட்பட 1978 ரன்கள் எடுத்துள்ளார். 

உள்ளூர் போட்டிகளில் மட்டும் வெளுத்து வாங்குவார். இப்போதைய ரஞ்சி கோப்பை தொடரில், ஐதராபாத் அணிக்கு எதிராக 112 (நவம்பர்), டிசம்பரில் பஞ்சாப்புடன் 203, சவுராஷ்டிராவுடன் 166 ரன்கள் எடுக்க, இந்திய அணியில் மீண்டும் இடம் பெற்றார்.

ஆனால், சர்வதேச போட்டிகள் என்றவுடன், ரோகித் சர்மாவுக்கு நடுக்கம் வந்துவிடும். 

கடைசியாக விளையாடிய 9 போட்டியில் ஒரு முறை (68 ரன்கள், எதிரணி-பாக்.,) மட்டும் தான் இரட்டை இலக்க ரன்களை எட்டினார். 

மற்றபடி 0, 4, 68, 5, 0, 0, 4, 4, 4 என, ஐந்து ரன்களை தாண்டுவதே பெரிய பாடாக உள்ளது.

ஒருநாள் மட்டுமன்றி, "டுவென்டி-20' போட்டியிலும் இப்படித்தான் திணறுகிறார். 

கடைசியாக விளையாடிய 5 இன்னிங்சில், 1, 25, 24, 2, 4 ரன்கள் தான் எடுத்துள்ளார். 

இவரைப் போன்றவர்களை அணியில் இருந்து நீக்கி விட்டு, "டுவென்டி-20' போட்டிகளில் அசத்திய ரகானே போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாமே. 

ஒலிம்பிக் தந்த மாற்றம்


லண்டனில் கடந்த ஆண்டு நடந்த 30வது ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 6 பதக்கங்களை வென்றது. பதக்கம் வென்று சாதித்தவர்களின் வாழ்க்கை தற்போது எப்படி மாறி உள்ளது என்பதை அவர்களிடமே கேட்போம்.

சுஷில் குமார்(மல்யுத்தம், வெள்ளி):

கடந்த 2008ல் பீஜிங் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் முன்பு எப்படி இருந்தேனோ, இதுவரை அப்படி தான் இருக்கிறேன். ஒரு நட்சத்திரமாக என்னை கருதவில்லை. 

லண்டன் ஒலிம்பிக் பதக்கத்திற்கு பிறகு எந்த ஒரு பொருளும் வாங்கவில்லை. என்னிடம் சொகுசு கார் முதல் வீடு வரை எல்லாம் உள்ளது. மல்யுத்தம் தான் எனக்கு வாழ்க்கை. அதன் வழியில் போகவே விரும்புகிறேன்.

யோகேஷ்வர் தத்(மல்யுத்தம், வெண்கலம்):

பதக்கம் வென்று நாடு திரும்பிய போது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட போது மகிழ்ச்சியாக உணர்ந்தேன். எனது குடும்பத்தினர்கள், பயிற்சியாளர், நண்பர்கள் என எல்லாருடைய முயற்சி தான் நான் சாதிப்பதற்கு காரணமாக அமைந்தது. ஒரு ஆடி கார் வாங்கியுள்ளேன். தற்போது நிறைய பாராட்டு விழாக்களில் பங்கேற்கிறேன். போட்டியில் கவனம் செலுத்துவதை தவிர, வேறு எதிலும் ஆர்வம் இல்லை. 

செய்னா நேவல்(பாட்மின்டன், வெண்கலம்):

பொதுவாக நான் எந்த ஒரு பிரச்னையும் பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை. ஒரு நட்சத்திரமாக என்னை என்றும் கருதியது கிடையாது. நான் ஒரு சாதாரண பாட்மின்டன் வீராங்கனை. கடவுளின் ஆசியால் சாதிக்கமுடிந்தது. சமீபத்தில் "ஐ-போன்' ஒன்று வாங்கினேன். 

தாய்லாந்து தொடருக்கு முன் பி.எம்.டபிள்யு கார் வாங்கினேன். ஒலிம்பிக்கிற்கு பிறகு சில போட்டிகளில் காயம் காரணமாக பங்கேற்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. 

மேரி கோம்(குத்துச்சண்டை, வெண்கலம்):

என் கணவர் தான் பக்கபலமாக உள்ளார். பதக்கத்திற்கு பின் பெயர், புகழ், பணம் என எல்லாம் எனக்கு கிடைத்தது. இருந்தாலும் எனது குத்துச்சண்டை அகாடமியை தான் பெரிய சொத்தாக கருதுகிறேன். பாராட்டு விழாவில் பங்கேற்கும் போது, மனது முழுவதும் குழந்தைகளை பற்றிதான் இருக்கும்.

ககன் நரங்(துப்பாக்கி சுடுதல், வெண்கலம்):

 சரிவுகளின் போது எனது குடும்பத்தினரும், நண்பர்களும் தான் தூண் போல உறுதுணையாக இருந்தனர். எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்தேன். டில்லியில் நடந்த "பார்முலா-1' கார்பந்தயத்தை கொடி அசைத்து முடித்து வைத்தது மறக்க முடியாதது. துப்பாக்கி சுடுதலை சிறிய கிராமங்கள் வரை எடுத்து சென்று, திறமையான இளைஞர்களை தேர்வு செய்து, முறையான பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளேன். 

விஜய் குமார்(துப்பாக்கி சுடுதல், வெள்ளி):

 ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு 15 நாட்கள் பயிற்சி மேற்கொள்ளாமல் தவித்தேன். பதக்கம் வெல்ல என் பெற்றோர் தான் முழுக்காரணம். அடுத்து வரும் போட்டிகளுக்காக இரண்டு புதுரக துப்பாக்கி மற்றும் அதிகம் தோட்டாக்களை வாங்கினேன். ஒரு துப்பாக்கி சுடும் வீரருக்கு இது இரண்டும் தான் முக்கியமான சொத்து.

சமீபத்தில் ஒரு பள்ளியில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றேன். அப்போது என் பள்ளி நினைவுகள் வந்தது.

சர்வதேச அளவில் பயிற்சி மேற்கொள்ளும் அளவிற்கு ஒலிம்பிக் பயிற்சி மையத்தை உருவாக்குவேன். திறமையான கல்லூரி மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிப்பேன். 

அர்ஜூன் டெண்டுல்கர் தேர்வில் சர்ச்சை


14வயதுக்குட்‌பட்டோர் மும்பை கிரிக்கெட் அணியில் சச்சின் மகன் தேர்வு செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

திறைமை இருந்தும் சிலர் தேர்வு செய்யப்படாமல் சச்சின் மகனை தேர்வு செய்ததன் மர்மம் என்ன ? என தேர்வு செய்யப்படாதவர்களின் ‌பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்(40). இவர் சமீபத்தில் ஒரு நாள் போட்டிக்கு குட்பை சொல்விட்டார். இவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கர் (14).

இவர் மகாராஷ்டிரா கிரிக‌்கெட் சங்க கிரிக்கெட் சார்பில் பள்ளிகளுக்கிடையயான போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் 14 வயதுக்குட்‌ப்டோர் மும்பை அணியில் இடம் பெற்றார். இவர் தேர்வு செய்யபட்டது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஓரவஞ்சனை காட்டுவதா ?

இந்நிலையில் மும்பை டான்புஸ்‌கோ பள்ளி மாணவன் பூபன்லாவனி (14), 398 (277 பந்துகளில் ) ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். அதே போன்று 200 ரன்கள் வரை எடுத்த சில மாணவர்கள் தேர்வாகவில்லை. 

அப்படியிருக்கையில், வெறும் 124 ரன்கள் குவித்ததால் அர்ஜூன் டெண்டுல்கர் தேர்வாகியுள்ளார். சச்சின் மகன் என்பதால் இந்த சலுகையா என , தேர்வாகாத மாணவர்களின் பெற்றோர்கள் ‌ஆவேசப்பட்டனர். 

இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் ஓரவஞ்சனை காட்டுவதாகவும், ‌இதில் ஏதோ மர்மம் உள்ளதாகவும் கொந்தளிக்கின்றனர்.

பெற்றோர்களின் இந்த குற்றச்சாட்டினை மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் மறுத்துள்ளது. 

திறமையான மாணவர்களை சங்கம் என்றும் புறக்கணிக்கவில்லை. 

சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் திறமையின் அடிப்‌படையில் தான் தேர்வாகியுள்ளார் என்கிறது.

சச்சினுக்கு வந்த ஆசை - பி.சி.சி.ஐ., மறுப்பு


ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியை, மும்பைக்கு மாற்ற வேண்டும் என்ற சச்சினின் வேண்டுகோளை ஏற்க பி.சி.சி.ஐ., மறுத்து விட்டது.

ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டிகள், ஜன.16ம் தேதி துவங்குகின்றன. பொதுவாக ரஞ்சி போட்டிகள் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் நடக்கும். 1964-65 தொடரில் மும்பை - சர்வீசஸ் அணிகள் மோதிய அரையிறுதி போட்டி, மும்பையில் நடந்தது. 

இம்முறை சுழற்சி விதிப்படி, மும்பை அணிக்கு எதிரான அரையிறுதி போட்டி, சர்வீசஸ் அணியின் சொந்த மண்ணான டில்லி, பாலம் மைதானத்தில் நடக்கவுள்ளது. இப்போட்டியை, தனது சொந்த ஊரான மும்பைக்கு மாற்ற வேண்டும் என, இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் வேண்டுகோள் விடுத்தார்.

மும்பை அணிக்காக காலிறுதியில் சதம் அடித்த சச்சின், அரையிறுதியிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ளதால் இப்படித் தெரிவித்தார் எனத் தெரிகிறது. 

இதற்கு பதில் அளித்த இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அதிகாரி ஒருவர் கூறுகையில், ""ரஞ்சி கோப்பை தொடரின் விதிப்படி, இப்போட்டி டில்லியில்தான் நடக்க வேண்டும். சச்சினின் கோரிக்கையை ஏற்க முடியாது,'' என்றார். 

இந்தியாவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பஞ்சமில்லை


இந்தியாவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பஞ்சமில்லை. எனினும் வளர்ந்து வரும் வீரர்கள் உலகத் தரம் வாய்ந்த வீரர்களாக உருவெடுக்க சில காலம் ஆகும் என்று ஐசிசி மற்றும் பிசிசிஐயின் முன்னாள் தலைவரான சரத் பவார் தெரிவித்தார்.

தொடர் தோல்விகளால் இந்திய அணி துவண்டு வரும் நிலையில், இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பது: இந்தியாவில் ஏராளமான திறமையான இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர்.

எனினும் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா போன்ற இளம் வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை. ஒரு காலத்தில் மும்பை, பெங்களூர், சென்னை போன்ற நகரங்களில் இருந்து மட்டும்தான் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் உருவெடுத்தனர்.

தற்போது உத்தரப் பிரேதசம், ஜார்க்காண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் உருவாகியிருக்கிறார்கள். அவர்களை சிறந்த வீரர்களாக உருவாக்க கொஞ்ச நாள்கள் ஆகும். இந்தியாவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பஞ்சமிருப்பதாக நினைக்கவில்லை என்றார்.

கேப்டன் பதவியை உதறுங்கள் - தோனிக்கு டிராவிட் அட்வைஸ்


தோனி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக நீடிப்பது கடினம். இதனை உணர்ந்து "டுவென்டி-20' போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும்,'' என, டிராவிட் ஆசோசனை கூறினார்.

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி இழந்தது. தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் பறிகொடுத்தது. 

இதையடுத்து கேப்டன் பதவியில் இருந்து தோனியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட் கூறியது:

டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட தோனிக்கு தகுதி உள்ளது. இப்பொறுப்பில் சிறப்பாக செயல்பட முடியும். அனைத்து நேரங்களிலும் கேப்டனாக இருந்தால், அவருக்கே சலிப்பு ஏற்பட்டு விடும். 

எனவே, "டுவென்டி-20', மற்றும் ஐ.பி.எல்., சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி, விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தலாம். அதே நேரத்தில் "டுவென்டி-20' மற்றும் ஒருநாள் போட்டியில் சாதாரண வீரராக நீடிக்கலாம்.

தற்போதைய நிலையில் கேப்டன் பதவிக்கு தோனிக்கு மாற்று வீரர் யாரும் கிடையாது. ஒருகட்டத்தில் காம்பிரை நியமிக்கலாம் என நினைத்தோம். ஆனால், காம்பிர் டெஸ்டில் "பார்ம்' இல்லாமல் தவித்ததால் சிக்கல் ஏற்பட்டது. 

மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளுக்குமான கேப்டன் பொறுப்பை விராத் கோஹ்லியிடம் அளிக்கலாம். இளம் வீரராக இருப்பதால், இவருக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. 

டெஸ்ட் அரங்கில் இந்திய அணியை நிலையான இடத்திற்கு கொண்டு சென்ற பின் கேப்டன் பொறுப்பை அடுத்த நபரிடம் தோனி கொடுக்கலாம். இவரது தலைமைப் பண்பை பாராட்டாமல் இருக்க முடியாது. 

சமீபத்திய நாக்பூர் டெஸ்டில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அவுட்டாக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். அப்போது வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா ஓவரில், தோனி பயப்படாமல் "ஸ்டம்சிற்கு' அருகில் நின்றார். தவிர, இக்கட்டான நிலையில் அணியை பலமுறை மீட்டுள்ளார். 

இவ்வாறு டிராவிட் கூறினார்.