டுவென்டி–20 ரேங்கிங்கில் இந்தியா முதலிடம்

ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ தரவரிசையில் இந்திய அணி ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது. டெஸ்ட் ரேங்கிங்கில் (தரவரிசை) 5வது இடத்துக்கு தள்ளப்பட்டது.        
     
டெஸ்ட், ஒருநாள் மற்றும் சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான மேம்படுத்தப்பட்ட ஆண்டு இறுதி ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வௌியிட்டது.      
       
இதில் ‘டுவென்டி–20’ போட்டி ஆண்டு இறுதி தரவரிசையில், இந்திய அணி 131 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.      
       
சமீபத்தில் வங்கதேசத்தில் முடிந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை பைனலில் இலங்கையிடம் தோல்வி கண்ட இந்தியா, இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த 12 மாதங்களில் இந்திய அணி, ஒரே ஒரு ‘டுவென்டி–20’ போட்டியில் மட்டும் தோல்வி அடைந்ததால் மீண்டும் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது.             

நான்கு போட்டியில் தோல்வி கண்ட இலங்கை அணி 130 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. அடுத்த மூன்று இடங்களில் பாகிஸ்தான் (123 புள்ளி), தென் ஆப்ரிக்கா (121), ஆஸ்திரேலியா (112) அணிகள் உள்ளன.           
       
இந்தியா ‘நம்பர்–2’: ஒருநாள் போட்டிக்கான மேம்படுத்தப்பட்ட ஆண்டு இறுதி ரேங்கிங்கில், இந்திய அணி 112 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. ஆஸ்திரேலிய அணி 115 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.           
  
இப்பட்டியலில் அடுத்த மூன்று இடங்களில் இலங்கை (111 புள்ளி), இங்கிலாந்து (110), தென் ஆப்ரிக்கா (109) அணிகள் உள்ளன.       
          
ஐந்தாவது இடம்: டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில், சமீபத்தில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி 102 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.     
             
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் மற்றும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி 8 ரேட்டிங் புள்ளிகள் கூடுதலாக பெற்று 123 புள்ளிகளுடன் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது.  
     
இதன்மூலம் டிசம்பர் 2008க்கு பின் முதன்முறையாக, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான ரேங்கி்ங்கில் ஆஸ்திரேலிய அணி ‘நம்பர்–1’ இடம் பிடித்தது.       

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த தென் ஆப்ரிக்க அணி, 4 ரேட்டிங் புள்ளிகள் குறைவாக பெற்று (123 புள்ளி), தசம புள்ளிகள் வித்தியாசத்தில் இரண்டாவது இடம் பிடித்தது. அடுத்த இரண்டு இடங்களில் இங்கிலாந்து (104 புள்ளி), பாகிஸ்தான் (103 புள்ளி) அணிகள் உள்ளன.

0 comments:

Post a Comment