மீண்டும் இந்தியா–பாக்., தொடர் : அக்ரம் வலியுறுத்தல்

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் மீண்டும் நடத்தப்பட வேண்டும்,’’ என, கோல்கட்டா அணியின் பவுலிங் பயிற்சியாளர் வாசிம் அக்ரம் வலியுறுத்தினார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், 47. சிறந்த வேகப்பந்துவீச்சாளரான இவர், 104 டெஸ்ட் (414 விக்கெட்), 356 ஒருநாள் (502 விக்கெட்) போட்டிகளில் விளையாடினார். தற்போது இவர், 7வது ஐ.பி.எல்., தொடரில் விளையாடும் கோல்கட்டா அணிக்கு பவுலிங் பயிற்சியாளராக உள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவது குறித்து அக்ரம் கூறியது: அரசியல் காரணங்களுக்காக, இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடத்தப்படாதது வருத்தம் அளிக்கிறது. 

நான் எப்போதும் விளையாட்டையும், அரசியலையும் ஒன்றாக பார்க்க மாட்டேன். இவ்விரு அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் விரைவில் நடத்தப்படும் என நம்புகிறேன்.

ஐ.பி.எல்., தொடரில் விளையாட பாகிஸ்தான் வீரர்கள் தேர்வு செய்யப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில், ஒவ்வொரு அணிகளும் பலம் பெறும். 

தவிர, பாகிஸ்தானிலும் ஐ.பி.எல்., போட்டி பிரபலமடையும். எனவே அடுத்து வரும் தொடர்களில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

இம்முறை கோல்கட்டா அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அனுபவ வீரர்களுடன், திறமையான இளம் வீரர்கள் நிறைய பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வீரரும் அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடுகின்றனர்.

கோல்கட்டா அணியை வழிநடத்தும் கவுதம் காம்பிர், வீரராக மட்டுமல்லாமல், கேப்டன் பொறுப்பிலும் சிறப்பாக செயல்படுகிறார். இத்தொடரின் துவக்கத்தில் லேசான சரிவை சந்தித்த இவர், மனவலிமை மற்றும் தன்நம்பிக்கையால் எழுச்சி கண்டார். சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம், அணியை முன் நின்று வழிநடத்த உதவுகிறது.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில் சேவக், காம்பிர், யுவராஜ், ஜாகிர் கான் ஆகியோருக்கு இடம் கொடுக்க வேண்டும். ஆஸ்திரேலிய மண்ணில் நிறைய போட்டிகளில் விளையாடிய அனுபவம், இவர்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும். அங்குள்ள ஆடுகளத்தின் தன்மை மற்றும் தட்பவெப்பநிலை குறித்து இவர்கள் நன்கு அறிந்திருப்பதால், அதற்கேற்ப சிறப்பாக செயல்படுவார்கள்.

உலக கோப்பையில், இந்திய அணிக்கு ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அணியில் திறமையான இளம் வீரர்கள் உள்ளனர். கேப்டன் தோனி, விராத் கோஹ்லி உள்ளிட்டோர் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்குவகிப்பார்கள்.

இதேபோல பாகிஸ்தான் அணியிலும் சிறந்த வீரர்கள் இடம் பெற்றிருப்பதால், ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்பட்டு உலக கோப்பை வெல்ல முயற்சிப்பார்கள்.

உலக கோப்பை தொடருக்கு தயாராக இனிவரும் நாட்களில் கடுமையான பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அங்குள்ள ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பட்சத்தில், சிறந்த முறையில் தயாராகலாம்.
இவ்வாறு வாசிம் அக்ரம் கூறினார்.

0 comments:

Post a Comment