இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட டோனி

ஐ.பி.எல் கிரிக்கெட்டின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. 

முதலில் ஆடிய பஞ்சாப் அணி அதிரடியாக ஆடி 226 ரன்கள் குவித்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரரான வீரேந்தர் சேவாக் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது வாணவேடிக்கையை காண்பித்தார். 

அவர் சென்னை அணி வீரர்கள் வீசிய பந்துகளை சிக்சர்களாகவும், பவுண்டரிகளாகவும் விளாசி தள்ளினார். பின்னர் வெற்றிக்கு 227 ரன்கள் தேவை என்ற கடினமான இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. 

கேப்டன் டோனி ஆரம்பத்திலேயே பேட்டிங் ஆர்டர் தேர்வில் சொதப்பினார். சர்வதேச அரங்கில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மெக்கல்லத்தை துவக்க வீரராக களமிறக்காமல் மத்திய வரிசையில் களமிறங்கும் டு பிளெசிஸ்சை துவக்க ஆட்டக்காரராக களமிறக்கினார். 

அவர் டக் அவுட்டாக வெளியேறி டோனி எடுத்தது மோசமான முடிவு என நிரூபித்தார். துவக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டிய மெக்கல்லம் மத்திய வரிசையில் களமிறங்கியதால் ரன் குவிக்க தடுமாறினார். 

அதேசமயம், அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 87 ரன் குவித்த ரெய்னாவை ரன் அவுட்டாக்கியதுடன் தானும் ரன் அவுட்டாகி சென்னை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். 

பஞ்சாப் அணி வீரர் அவானா வீசிய ஆட்டத்தின் 6வது ஓவரில் இரண்டு சிக்ஸர் ஐந்து பவுண்டரிகள் விளாசி 33 ரன்களை குவித்து ரெய்னா அசத்தியது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். 

இந்த இக்கட்டான தருணத்தில் கேப்டன் என்ற பொறுப்பை உணர்ந்து அணியை வெற்றி பெற வைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்குவதை தவிர்த்த டோனி 5வது விக்கெட்டுக்கு ஜடேஜாவை களமிறக்கினார். 

சரி அடுத்த வீரராகவாவது களமிறங்குவார் என பார்த்தால் டேவிட் ஹசியை 6வது விக்கெட்டுக்கு களமிறக்கினார். அதன் பிறகு 7வது வீரராக 13வது ஓவரின் போது தான் டோனி களமிறங்கினார். 

அப்போது அணியின் ஸ்கோர் 140 ரன்னாக ஆக இருந்தது. வெற்றிக்கு 48 பந்துகளில் 87 ரன்கள் தேவைப்பட்டது. கேப்டன் என்ற முறையில் இக்கட்டான நிலையில் அணி இருக்கும்போது அதனை தூக்கி நிறுத்தாமல் ஒடி ஒளிவது போல் இருந்தது டோனியின் செயல். ஜான்சன் வீசிய 17வது ஒவரில் யார்க்கர் பந்தில் மிடில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார் டோனி. 

ஆனால் அது நோ பால் என அறிவிக்கப்பட்டதால் கண்டத்தில் இருந்து தப்பினார். கடைசி ஓவர் வரை களத்தில் நின்று 31 பந்துகளில் 42 ரன்களை சந்தித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்ததுடன் அணியையும் தோல்விக்கு அழைத்துச் சென்று சாதனை படைத்தார் டோனி. 

தான் பொறுப்பற்ற முறையில் ஆடிவிட்டு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பொறுப்பற்ற முறையில் ஆடியதால் தான் தோற்றோம் என்று டோனி கூறியது தான் மிகப்பெரிய நகைச்சுவையாக இருந்தது.

0 comments:

Post a Comment