400 கோல்களை கடந்தார் மெஸ்சி

ஸ்பெயினில் நடந்து வரும் லா லிகா கால்பந்து கிளப் போட்டியில் பார்சிலோனா கிளப்புக்காக ஆடும் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா) , கிரனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் இரு கோல் அடித்தார். 

இதில் பார்சிலோனா 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. 

இந்த இரண்டு கோல்களையும் சேர்த்து மெஸ்சியின் ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கை 400-ஐ கடந்தது. கிளப் மற்றும் அர்ஜென்டினா அணிக்காக அவர் இதுவரை 524 ஆட்டங்களில் விளையாடி 401 கோல்கள் அடித்திருக்கிறார். 

இது போன்ற மைல்கல்லை தொடுவேன் என்று ஒரு போதும் நினைத்ததில்லை என்று மெஸ்சி கூறியிருக்கிறார்.

ஹாட்ரிக் வெற்றிக்கு கோல்கட்டா ரெடி

இந்தியாவில் சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. இன்று ஐதராபாத்தில் நடக்கும் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் கோல்கட்டா அணி, ஆஸ்திரேலியாவின் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை எதிர் கொள்கிறது. 

கடந்த இரு போட்டிகளில் வென்ற கோல்கட்டா அணி, இம்முறை மூன்றாவது வெற்றி பெற காத்திருக்கிறது.


பலமான துவக்கம்: 

கோல்கட்டா அணியை பொறுத்தவரை சென்னை, லாகூர் அணிகளை வீழ்த்தி சிறப்பான நிலையில் உள்ளது. 

கடந்த போட்டியில் மிரட்டிய ராபின் உத்தப்பா, கேப்டன் காம்பிர் ஜோடி இன்றும் அசத்தலாம். 

‘மிடில்–ஆர்டரில்’ பிஸ்லா, யூசுப் பதான் ஏமாற்றுகின்றனர். இவர்களின் போக்கில் மாற்றம் வேண்டும். சென்னைக்கு எதிராக வெளுத்து வாங்கிய டஸ்காட்டே, ரசல் ஜோடி மீண்டும் கைகோர்த்தால் எதிரணிக்கு சிக்கல்தான். 

பந்துவீச்சில் ‘சுழல் மாயாவி’ நரைன் அசத்துகிறார். இவருடன் சாவ்லா, வேகப்பந்துவீச்சாளர்கள் கம்மின்ஸ், ரசுல் அசத்தலாம். 

சென்னை வலையில் தப்புமா டால்பின்ஸ்

பெங்களூருவில் இன்று நடக்கும் சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் சென்னை, தென் ஆப்ரிக்காவின் டால்பின்ஸ் அணிகள் மோதுகின்றன.       

சென்னை அணி கடந்த முறை கோல்கட்டாவிடம் தோற்ற சோகத்தில் உள்ளது. டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கலம் வலுவான அடித்தளம் அமைக்காமல் போனதே இதற்கு முக்கியக்காரணம். 

இவர்கள் பொறுப்புணர்ந்து விளையாட வேண்டும். ‘மிடில்–ஆர்டரில்’ ரெய்னா, டுபிளசி கைகொடுத்தால் நல்லது. கேப்டன் தோனி தனது பணியை சிறப்பாக செய்கிறார். கடந்த போட்டியில் இவருடன் கைகோர்த்த டுவைன் பிராவோ இன்றும் அசத்த வேண்டும்.       

நெஹ்ரா நம்பிக்கை: கோல்கட்டாவுக்கு எதிராக மிரட்டிய அனுபவ நெஹ்ரா 4 விக்கெட் வீழ்த்தினார். 

இவரது ‘வேகம்’ மீண்டும் எடுபட்டால், எதிரணியின் கூடாரம் காலியாவது உறுதி. ஈஷ்வர் பாண்டே, அஷ்வின் ஜடேஜா எழுச்சி பெற்றால், சென்னை அணி முதல் வெற்றியை ருசிக்கலாம்.     
  
ஜுன்டோ நம்பிக்கை: டால்பின்ஸ் அணியின் கேப்டன் மார்னே வான், டெல்போர்ட் உள்ளிட்டோர் கடந்த போட்டியில் ஒற்றை இலக்கில் வெளியேறினர். 

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிராக அரை சதம் கடந்த ஹயா ஜுன்டோ மட்டும் நம்பிக்கை தருகிறார்.  கேசவ், டார்யன் ஸ்மித் போன்ற வீரர்கள்  திறமை நிரூபிக்க முயற்சிக்கலாம்.       

சாஸ்திரிக்கு சல்யூட் - வாயார பாராட்டுகிறார் தவான்

இந்திய அணியில் மாற்றத்தை ஏற்படுத்தினார் ‘இயக்குனர்’ ரவி சாஸ்திரி. வீரர்களுக்கு தேவையான தன்னம்பிக்கை தந்தார்,’’ என, ஷிகர் தவான் பாராட்டினார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1–3 என, இழந்தது. இதையடுத்து பயிற்சியாளர் பிளட்சர் ஓரங்கட்டப்பட்டார். 

அணிக்கு புத்துயிர் அளிக்க, முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி, ‘இயக்குனர்’ ஆக நியமிக்கப்பட்டார். உடனே களத்தில் குதித்த இவர், வலைப் பயிற்சியை நேரடியாக கண்காணித்தார்.  

ரகானே, ரெய்னா, தவான் உள்ளிட்ட வீரர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கினார். இதன் காரணமாக இரண்டாவது ஒருநாள் போட்டியில், ரெய்னா சதம் அடிக்க, இந்தியா வெற்றி பெற்றது. அப்போது ரெய்னா கூறுகையில்,‘ ரவி சாஸ்திரியின் உற்சாக பேச்சு, நம்பிக்கை கொடுத்தது,’ என்றார்.

தற்போது நான்காவது போட்டியில், ரகானே சதம், ஷிகர் தவான் 97 ரன்கள் எடுக்க, இந்தியா எளிதான வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

நீண்ட இடைவெளிக்குப் பின், இழந்த ‘பார்மை’ மீட்ட மகிழ்ச்சியில் ஷிகர் தவான் கூறியது:

அடுத்த ஆறு மாதத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில் விளையாடவுள்ளோம். இந்நிலையில், இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை வென்றது, மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

டெஸ்ட் தொடரில் மோசமாக தோற்ற நிலையில், நான் மட்டுல்ல, ஒட்டுமொத்த அணியும் துவண்டு கிடந்தது. இதில் இருந்து எப்படி மீண்டு வந்தோம் என்பது தான் இப்போதைய கேள்வி. ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்து, இதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்தனர். உண்மையில் இந்திய வீரர்களை நினைத்து பெருமையாக உள்ளது.

தோனிக்கு முதல் சோதனை - சென்னை கோல்கட்டா இன்று மோதல்

சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடரில், இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. இதில், தோனியின் சென்னை அணி அசத்தல் வெற்றி பெற காத்திருக்கிறது.

உள்ளூர் ‘டுவென்டி–20’ தொடர்களில் சாதித்த அணிகள் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்கின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா இணைந்து இத்தொடரை நடத்துகின்றன.

இந்தியாவில் இருந்து ஐ.பி.எல்., சாம்பியன் கோல்கட்டா, பஞ்சாப், சென்னை என, மூன்று அணிகள் பங்கேற்கின்றன.

ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் ஹரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், தென் ஆப்ரிக்காவின் டால்பின்ஸ், கேப் கோப்ராஸ், வெஸ்ட் இண்டீசின் பார்படாஸ் டிரிடென்ட்ஸ் என, மொத்தம் 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள இரு அணிகள் தகுதிச் சுற்றில்  அசத்தி முன்னேறின. 


முதல் மோதல்:

இன்று நடக்கும் முதல் போட்டியில் கோல்கட்டா அணி, சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது.

கடந்த 2010ல் கோப்பை வென்ற சென்னை அணி, 2011, 2012ல் முதல் சுற்றுடன் திரும்பியது. கடந்த முறை அரையிறுதிக்கு முன்னேறிய இந்த அணி, இந்த ஆண்டு சாதிக்கும் என்று தெரிகிறது.

சென்னை அணிக்கு கடந்த ஐ.பி.எல்., தொடரில் அசத்தல் துவக்கம் தந்த மெக்கலம், டுவைன் ஸ்மித் கூட்டணி மீண்டும் ஜொலிக்க முயற்சிக்கலாம். தவிர, கேப்டன் தோனி, ரெய்னாவுடன் அஷ்வின், ஜடேஜா சுழல் கூட்டணியும் உள்ளூரில் வெற்றிக்கு உதவும் என நம்பப்படுகிறது.


பிராவோ வருகை:

காயத்தில் இருந்து மீண்ட டுவைன் பிராவோ அணிக்கு திரும்பியுள்ளது சென்னைக்கு மிகப் பெரும் பலம்.  இதனால், டுபிளசி இடம் கேள்விக்குறி தான். வேகத்தில் மோகித் சர்மா, ஈஷ்வர் பாண்டே கைகொடுப்பார்களா என, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வருகிறது சச்சின் கோப்பை

சச்சின் பெயரில் டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர், முன்னாள் இந்திய கேப்டன் நவாப் அலி பட்டோடிக்கு பெருமை சேர்க்கும் வகையில், பட்டோடி டிராபி என்றழைக்கப்பட்டது. 

இதில் மாற்றம் செய்யப்பட, இரு அணிகள் மோதும் டெஸ்ட் தொடர், இங்கிலாந்து மண்ணில் பட்டோடி டிராபி என்றும், இந்திய மண்ணில் ஆன்டனி டி மெலோ என்ற பெயரிலும் நடக்கிறது. 

ஆஸ்திரேலியா, இந்திய அணிகள் மோதும் டெஸ்ட் தொடர், முன்னாள் கேப்டன்கள் பார்டர்–கவாஸ்கர் பெயரில் நடத்தப்படுகிறது.       
      
தற்போது, கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’, இந்தியாவின் சச்சின் பெயரில், டெஸ்ட் தொடர் நடத்த, கோரிக்கை எழுந்துள்ளது. சென்னையில் நடந்த இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், இதுகுறித்து சில நிர்வாகிகள் பேசியுள்ளனர்.         
   
இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் கூறியது:       
     
இப்போதைய நிலையில், இதுகுறித்து பேசுவது மிகவும் அவசரமான செயல். ஒரு தொடருக்கு பெயர் வைக்கும் முன், அது குறித்து, சம்பந்தப்பட்ட அணியிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 

சச்சின் பெயர் வைப்பதாக இருந்தால், அந்த டெஸ்ட் தொடர் மிகவும் மதிப்பு மிக்கதாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.         
   
இவ்வாறு சஞ்சய் படேல் கூறினார்.

இந்தியா மீண்டும் நம்பர் 1

ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், இந்திய அணி மீண்டும் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது. 

சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. 

சமீபத்தில் நாட்டிங்காமில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 114 புள்ளிளுடன் முதலிடத்தை ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்து கொண்டது. 

பின் ஹராரேயில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரின் லீக் போட்டியில், ஜிம்பாப்வே அணி 31 ஆண்டுகளுக்கு பின், ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி 111 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 

இந்திய அணி 114 புள்ளிகளுடன் தனித்து முதலிடம் பிடித்தது. முத்தரப்பு தொடரில், ஜிம்பாப்வே, ஆஸ்திரேலிய அணிகளை வீழ்த்திய தென் ஆப்ரிக்க அணி 113 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி (111 புள்ளி) தசம புள்ளிகள் வித்தியாசத்தில் 4வது இடத்தில் உள்ளது.      


நிலைக்குமா முதலிடம்: 

‘நடப்பு உலக சாம்பியன்’ இந்திய அணி, ‘நம்பர்–1’ இடத்தை தக்கவைத்துக் கொள்ள, இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள இரண்டு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும். அதேவேளையில், முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்த வேண்டும்.  

          
தென் ஆப்ரிக்க வாய்ப்பு: 

தென் ஆப்ரிக்க அணி, முதலிடத்துக்கு முன்னேற, முத்தரப்பு தொடரில் மீதமுள்ள லீக் போட்டிகளில், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகளை வீழ்த்த வேண்டும். பின், பைனலில் வெற்றி பெற வேண்டும். அதேவேளையில், இந்திய அணி, இங்கிலாந்திடம் ஒரு போட்டியிலாவது தோல்வி அடைய வேண்டும். ஒருவேளை இரண்டிலும் வெற்றி பெற்றால், இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் தலா 115 புள்ளிகள் பெறும். தசம புள்ளிகள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணி, முதலிடம் பிடிக்கும்.      

ஆஸ்திரேலிய அணி, மீண்டும் ‘நம்பர்–1’ இடத்தை பிடிக்க, முத்தரப்பு தொடரை கைப்பற்ற வேண்டும். அதேநேரத்தில், இந்தியாவை ஒரு போட்டியிலாவது இங்கிலாந்து அணி வீழ்த்த வேண்டும்.

புத்துயிர் தந்த புதியவர்கள் - ரகானே உற்சாகம்

ஒருநாள் தொடருக்கு மட்டும் தேர்வான ரெய்னா, அம்பதி ராயுடு  உள்ளிட்ட புதிய வீரர்கள், இந்திய அணிக்கு புத்துயிர் தந்தனர்,’’ என, இளம் வீரர் அஜின்கியா ரகானே தெரிவித்தார்.      

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை, இந்திய அணி 1–3 என்ற கணக்கில் இழந்தது. பின், ரெய்னா, அம்பதி ராயுடு, சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பிடித்தனர். 

இவர்களின் வரவால் இந்திய அணி புத்துயிர் பெற்றது. கார்டிப், நாட்டிங்காமில் நடந்த ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றி பெற்று, 2–0 என முன்னிலை பெற்றது.      

இதுகுறித்து இந்திய அணியின் இளம் வீரர் அஜின்கியா ரகானே கூறியது: ஒருநாள் தொடருக்கு மட்டும் தேர்வான ரெய்னா, அம்பதி ராயுடு உள்ளிட்ட புதிய வீரர்களின் வரவால் இந்திய அணி புத்துணர்ச்சி பெற்றது. 

டெஸ்ட் தொடரில் இந்தியாவின் ‘பீல்டிங்’ படுமோசமாக இருந்தது. ஆனால் ஒருநாள் போட்டிகளில், ‘பீல்டிங்கில்’ அசத்தி வருகின்றோம். இது மகிழ்ச்சியாக உள்ளது.      

டெஸ்ட் தொடரில் கண்ட மோசமான தோல்வி, எங்களை வெகுவாக பாதித்தது. பின், ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொண்டு, ஒருநாள் தொடரில் கவனம் செலுத்தினோம். 

இதற்கு நல்ல பலன் கிடைத்தது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட, கார்டிப்பில் நடந்த 2வது போட்டியில் வெற்றி பெற்று, தொடரை வெற்றியுடன் துவக்கினோம். பின், மூன்றாவது போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தக்கவைத்துக் கொண்டோம்.      

காயம் காரணமாக ரோகித் சர்மா விலகியதால், மீண்டும் துவக்க வீரராக களமிறங்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. நான்காவது வீரராக களமிறங்கி, திடீரென துவக்க வீரராக விளையாடுவது எளிதான காரியமல்ல. 

ஆனால், துவக்க வீரராக விளையாடிய அனுபவம் நிறைய இருப்பதால், இது குறித்து கவலைப்படத் தேவையில்லை. பந்துகளை சந்திப்பதில் லேசான மாற்றம் செய்தால் போதுமானது. விராத் கோஹ்லி, ஷிகர் தவான் விரைவில் எழுச்சி காண்பார்கள்.      

இவ்வாறு ரகானே கூறினார்.