ரோகித் சர்மா உலக சாதனை - இந்திய அணி 404 ரன்கள் குவிப்பு

இலங்கைக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்தார். தவிர, ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது முறையாக இரட்டைசதம் அடித்து அசத்தினார். இவரின் அதிரடி கைகொடுக்க இந்திய அணி 404 ரன்கள் குவித்தது. 

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3–0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. நான்காவது போட்டி கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கிறது.

இந்திய அணியில் ஷிகர் தவான், இஷாந்த் சர்மா, அஷ்வின் நீக்கப்பட்டு ரோகித் சர்மா, கரண் சர்மா, ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டனர். ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். 

இந்திய அணிக்கு அஜின்கியா ரகானே, ரோகித் சர்மா ஜோடி நிதான துவக்கம் கொடுத்தது. குலசேகரா வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் மூன்று பவுண்டரி அடித்த ரகானே (24), மாத்யூஸ் பந்தில் அவுட்டானார். 

அடுத்து வந்த அம்பதி ராயுடு (8), எரங்கா பந்தில் போல்டானார். அபாரமாக ஆடிய ரோகித் சர்மா, குலசேகரா வீசிய 30வது ஓவரில் ஒரு சிக்சர், இரண்டு பவுண்டரி விளாசினார். தொடர்ந்து அசத்திய ரோகித், ஒருநாள் அரங்கில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார். 

மறுமுனையில் அசத்திய கேப்டன் விராத் கோஹ்லியும் அரை சதம் விளாசினார். இவர் 66 ரனகளில் ஆட்டமிழந்தார். ரெய்னா (11) நிலைக்கவில்லை. 

தொடர்ந்து அசத்திய ரோகித் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது முறையாக இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். 

தவிர, ஒரு நாள் அரங்கில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுதத வீரர் ஆனார். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 404 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா (264), உத்தப்பா (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

2 comments: