சாதனை மழையில் ஆஸி., - உலக கோப்பைக்கு இன்னும் 29 நாட்கள்

உலக கோப்பை வரலாற்றில், பைனல் போட்டிகள் மிகவும் பரபரப்பாக இருக்கும். ஆனால், 2003ல் நடந்த பைனல் ஒருதலைபட்சமாக இருந்தது. 

இதில், ஆஸ்திரேலியா மட்டும் ஆதிக்கம் செலுத்தியது. இந்திய அணி, படுமோசமாக விளையாடி அதிர்ச்சி அளித்தது.        
                
தென் ஆப்ரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் நடந்த இந்த பைனலில், "டாஸ்' வென்ற அப்போதைய இந்திய கேப்டன் கங்குலி சற்றும் எதிர்பாராதவிதமாக "பீல்டிங்' தேர்வு செய்தார். இந்த முடிவு எந்த அளவுக்கு தவறானது என்பதை ஜாகிர் கான் வீசிய முதல் ஓவரே சுட்டிக் காட்டியது. 

இந்த ஓவரில் மட்டும் இவர் 8 "எக்ஸ்டிராஸ்' விட்டுக் கொடுத்தார். தொடர்ந்து நமது பவுலர்கள் சொதப்ப, ஆஸ்திரேலிய அணிக்கு கில்கிறிஸ்ட்(57), ஹைடன்(37) அதிரடி துவக்கம் தந்தனர். 

பின் கேப்டன் பாண்டிங்(140*), டேமியன் மார்ட்டின்(88*) இணைந்து வாணவேடிக்கை காட்டினர். 50 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்கு 359 ரன்கள் குவித்தது.                        

ஒட்டுமொத்தமாக 37 "எக்ஸ்டிராஸ்' வழங்கிய இந்திய அணிக்கு, ஹர்பஜன் மட்டும் 2 விக்கெட் வீழ்த்தி ஆறுதல் அளித்தார்.        
                
கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயயே "ஷாக்' காத்திருந்தது. மெக்ராத் பந்தில் சச்சின்(4) வீழ்ந்தார். அதிரடியாக ஆடிய சேவக்(82), லேமன் "த்ரோவில்' ரன் அவுட்டாக, கோப்பை கனவு தகர்ந்தது. 

கங்குலி(24), டிராவிட்(47), யுவராஜ்(24) ஆகியோர் வரிசையாக நடையை கட்ட, இந்திய அணி 39.2 ஓவரில் 234 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.                
        
இந்தியாவை பொறுத்தவரை கோப்பை வெல்ல தவறியது. அதே நேரத்தில், அப்போதைய புள்ளிவிபரப்படி பைனலில் அதிகபட்ச ஸ்கோர்(359), அதிகபட்ச தனி நபர் ஸ்கோர்(பாண்டிங் 140), மூன்றாவது விக்கெட்டுக்கு அதிகபட்ச ரன் சேர்த்த ஜோடி(பாண்டிங்-மார்ட்டின் 234 ரன்), அதிக சிக்சர் அடித்தவர்(பாண்டிங் 8), என பல்வேறு சாதனைகளுடன், ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை தக்க வைத்துக் கொண்டது.  

0 comments:

Post a Comment