படுக்கையை நகர்த்திய பேய் - பயந்து ஓடிய பாக்., வீரர்

பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் சோகைல் தங்கியிருந்த ஓட்டல் அறையின் படுக்கையை பேய் நகர்த்தியதாம். இந்த பயத்தில் அலறி ஓடிய இவர், மானேஜர் அறையில் தஞ்சம் அடைந்தாராம்.

நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 

கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ரிட்ஜஸ் லாடிமிர் ஓட்டலில் வீரர்கள் தங்கியுள்ளனர். இதில், பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஹாரிஸ் சோகைல், 26, தங்கியிருந்த அறையில், நள்ளிரவில் திடீரென படுக்கை நகர்ந்துள்ளது.

உடனடியாக விழித்து எழுந்த இவருக்கு, அறைக்குள் பேய் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட, பயந்து போய் வெளியேறினார். பக்கத்து அறையில் இருந்த அணி மானேஜர் நவீது அக்ரம் சீமாவிடம் சொல்லி, வேறு அறைக்கு சென்று விட்டார்.

இதுகுறித்து சீமா கூறுகையில்,‘‘ ஹாரிஸ் காய்ச்சலால் அவதிப்பட்டது கூட பயத்திற்கு காரணமாக இருக்கலாம். தனது படுக்கை யாரோ ஒருவரால் தள்ளப்பட்டது என, உறுதியாக நம்புகிறார்,’’ என்றார்.

ஓட்டல் அமைந்துள்ள பகுதியில் 2011ல்  ஏற்பட்ட பூகம்பத்தில் 185 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு  பின் ஓட்டல் புதுப்பிக்கப்பட்ட நிலையில், முதன் முறையாக வீரர் ஒருவர் ‘பேய்’ புகார் கூறியுள்ளார்.

இந்த புகாரை ஓட்டல் நிர்வாகம் மறுத்துள்ளது.

கிரிக்கெட் அரங்கில் இதுபோல பேய் பீதி ஏற்கனவே நிகழ்ந்துள்ளன. 2005ல் இங்கிலாந்தின் லம்லி கேசில் ஓட்டலில் தங்கிய ஷேன் வாட்சன் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் பேய் உலாவுவதாக கூறினர்.

கடந்த ஆண்டு ஸ்டூவர்ட் பிராட் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்கள் லண்டனில் உள்ள லாங்காம் ஓட்டலில், பேய் தொல்லை காரணமாக அறையை மாற்றினர்.

0 comments:

Post a Comment