சிங் தான் ‘கிங்’ * இந்தியா ‘ஏ’ அசத்தல் வெற்றி

முதலாவது அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டியில் அசத்திய இந்தியா ‘ஏ’ அணி, வங்கதேச ‘ஏ’ அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ‘ஆல்–ரவுண்டராக’ மிரட்டிய குர்கீரத் சிங்(65 ரன், 5 விக்.,) வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்தார்.

இந்தியா ‘ஏ’, வங்கதேச ‘ஏ’ அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரில் மோதுகின்றன. இதன் முதல் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற வங்கதேச ‘ஏ’ அணி கேப்டன் மோமினுல் ஹக் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

அகர்வால் ஆறுதல்:

இந்தியா ‘ஏ’ அணிக்கு கேப்டன் உன்முக்த் சந்த் (16) ஏமாற்றினார். அடுத்து வந்த மணிஷ் பாண்டே (1), ரெய்னா (16), கேதர் ஜாதவ் (0) நிலைக்கவில்லை. இந்தியா ‘ஏ’ அணி 4 விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்து திணறியது. பொறுப்பாக ஆடிய துவக்க வீரர் மயங்க் அகர்வால் (56) அரைசதம் கடந்தார்.

சாம்சன் அபாரம்:

பின் இணைந்த சஞ்சு சாம்சன், குர்கீரத் சிங் ஜோடி அசத்தியது. வங்கதேச ‘ஏ’ அணி பந்துவீச்சை வெளுத்துவாங்கிய இவர்கள் இருவரும் அரைசதத்தை பதிவு செய்தனர். ஆறாவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்த போது குர்கீரத் சிங் (65) அவுட்டானார். சஞ்சு சாம்சன் (73) நம்பிக்கை தந்தார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ரிஷி தவான் 34 பந்தில் 56 ரன்கள் எடுத்தார்.

இந்தியா ‘ஏ’ அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 322 ரன்கள் குவித்தது. ரிஷி தவான் (56), கரண் சர்மா (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

குர்கீரத் அசத்தல்:

கடின இலக்கை விரட்டிய வங்கதேச ‘ஏ’ அணிக்கு சவுமியா சர்க்கார் (9), தாலுக்தார் (13) ஏமாற்றினர். கேப்டன் மோமினுல் ஹக் (19), சபிர் ரஹ்மான் (25) சோபிக்கவில்லை. பின் குர்கீரத் சிங் ‘சுழலில்’ வங்கதேசம் ‘ஏ’ அணி பேட்ஸ்மேன்கள் தடுமாறினர்.

இவரது பந்துவீச்சில் நாசிர் ஹொசைன் (52), லிட்டன் தாஸ் (75), ருபெல் ஹொசைன் (3), அராபட் சன்னி (6), டஸ்கின் அகமது (0) அவுட்டாகினர். வங்கதேச ‘ஏ’ அணி 42.3 ஓவரில் 226 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. ஷபியுல் இஸ்லாம் (2) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா ‘ஏ’ அணி சார்பில் குர்கீரத் சிங் 5, ஸ்ரீநாத் அரவிந்த் 3, ரிஷி தவான் 2 விக்கெட் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின்மூலம் இந்தியா ‘ஏ’ அணி 1–0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி பெங்களூருவில் நாளை நடக்கிறது.

0 comments:

Post a Comment