கிரிக்கெட் மைதானத்தில் தற்கொலை படை தாக்குதல்

ஆப்கனில் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 9 பேர் மரணம் அடைந்தனர். 50 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

ஆப்கனின் தென் கிழக்குப் பகுதியில் உள்ளது பக்டிக்கா பகுதி. பாகிஸ்தானின் எல்லைப்புற பகுதியான இங்கு உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடந்தது. அப்போது வெடி குண்டு நிரப்பப்பட்ட கார் ஒன்று வேகமாக வந்து பார்வையாளர்கள் இருந்த பகுதியின் மீது மோதியது.

இந்த தற்கொலை படை தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என. தலிபான் அமைப்பினர் மறுத்தனர். 

முதலில் கால்பந்து மைதானத்தில் தாக்குதல் நடந்ததாக செய்திகள் வெளியாகின. பின் தான் கிரிக்கெட் மைதானம் எனத் தெரியவந்தது.

இதுகுறித்து ஆப்கன் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,‘ கிரிக்கெட் போட்டியை பார்வையிட வந்த உள்ளூர் அரசு நிர்வாகிகளை குறி வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம்,’ என, தெரிவித்தது. 

இரண்டாவது முறை:

கடந்த 2001ல் ஆப்கனில் அமெரிக்கா உட்பட பல்வேறு வெளிநாட்டு படைகள் இணைந்து தலிபான் ஆட்சியை அகற்றின. கடந்த ஆண்டு இப்படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.

இதன் பின் ஆப்கன் அரசு தங்களிடம் உள்ள சிறிய அளவிலான பாதுகாப்பு வீரர்களை கொண்டு, தலிபான் பயங்கரவாத அமைப்பை எதிர்த்து வருகின்றது. 

கடந்த ஆண்டு வாலிபால் போட்டியின் போதும் இதேபோன்று நடந்த தாக்குதல் சம்பவத்தில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

ஜென்டில்மேன் ஆட்டமா கிரிக்கெட்?

கிரிக்கெட்டை ‘ஜென்டில்மேன்’ விளையாட்டு என அழைப்பார்கள். ஆனால், களத்தில் வீரர்களின் செயல்பாடு மோசமாகவே உள்ளது.

* 1981ல் பெர்த்தில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் டெனிஸ் லில்லி, பாகிஸ்தானின் ஜாவித் மியாண்தத்தை உதைத்ததாக கூறப்பட்டது. பதிலுக்கு மியாண்தத், பேட்டை உயர்த்திக் கொண்டு வர ‘டென்ஷன்’ ஏற்பட்டது.

* 1992, உலக கோப்பை தொடரில் இந்தியாவின் கிரண் மோரே, மியாண்தத் மோதல், 1996, உலக கோப்பை தொடரில் அமிர் சோகைல், பிரசாத் உரசல், 2008ல் நடந்த சிட்னி டெஸ்டில் ஹர்பஜன்–சைமண்ட்ஸ் சர்ச்சை, 2010ல் நடந்த ஆசிய கோப்பை தொடரில் கம்ரான் அக்மல், காம்பிர் முறைத்துக் கொண்டது என ஏராளமான சம்பவங்களை குறிப்பிடலாம்.

முதல் வீரர்:

ஆனாலும் பெர்முடா சம்பவம் தான் மிக மோசமானது. 

இங்கு,  குத்துச்சண்டை, கிக் பாக்சிங், மல்யுத்தம் போல வீரர்கள் மோதிக் கொண்டனர். களத்தில் எதிரணி வீரருடன் மோதலில் ஈடுபட்டு, வாழ்நாள் தடை பெறும் முதல் வீரரானார் ஜேசன் ஆண்டர்சன். 

ரெய்னா சதம் - தொடரை வென்றது இந்தியா ‘ஏ’

வங்கதேச ‘ஏ’ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற 3வது ஒரு நாள் போட்டியில் ரெய்னா சதம் அடிக்க, இந்திய ‘ஏ’ அணி ‘டக்வொர்த்– லீவிஸ்’ முறைப்படி வெற்றி பெற்றது. 

இதன் மூலம் தொடரை 2–1 என கைப்பற்றியது.
இந்தியா ‘ஏ’, வங்கதேசம் ‘ஏ’ அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரில் மோதின. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1–1 என சமநிலை வகித்தது. 

இரு அணிகள் மோதிய கடைசி மற்றும் மூன்றாவது போட்டி நேற்று பெங்களூருவில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் உன்முக்த் சந்த், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். 

ரெய்னா சதம்:

இந்திய ‘ஏ’ அணிக்கு உன்முக்த் 41 ரன்கள் எடுத்தார். இதன் பின் இணைந்த சாம்சன் (90), ரெய்னா (104) ஜோடி அசத்தியது. கேதர் ஜாதவ், குர்கீரத் சிங் தலா 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். முடிவில், இந்திய ஏ அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்தது. 

இதன் பின் வங்கதேச ‘ஏ’ அணி களமிறங்கியது. மழை குறுக்கிட 46 ஓவரில் 297 ரன்கள் எடுக்க வேண்டுமென இலக்கு மாற்றப்பட்டது. சவுமியா சர்கார் (1), அனாமுல் (1) சொதப்பினர். கேப்டன் மோமினுல் (37) நிலைக்கவில்லை. 

நாசிர் ஹொசைன் 22 ரன்கள் எடுத்தார். வங்கதேச ‘ஏ’ அணி 32 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மீண்டும் மழை பெய்ய ஆட்டம் நிறுத்தப்பட்டது. 

‘டக்வொர்த்–லீவிஸ்’ முறைப்படி வங்கதேச ‘ஏ’ அணி 32 ஓவரில் 217 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் இலக்கை எட்டவில்லை. இதையடுத்து இந்தியா ‘ஏ’ அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் தொடரை இந்திய அணி 2–1 என கைப்பற்றியது. 

இந்திய அணி அறிவிப்பு - குர்கீரத் சிங் வாய்ப்பு

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் 3 ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் ‘ஆல்–ரவுண்டர்’ குர்கீரத் சிங் அறிமுக  வாய்ப்பு பெற்றுள்ளார். 

இந்தியா வரவுள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’, ஐந்து ஒருநாள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ‘டுவென்டி–20’ போட்டி வரும் அக்., 2ல் தரம்சாலாவில் நடக்கவுள்ளது. 

மீதமுள்ள போட்டிகள் கட்டாக் (அக்., 5,), கோல்கட்டா (அக்., 8) நகரங்களில் நடக்கவுள்ளன. ஐந்து ஒருநாள் போட்டிகள் முறையே கான்பூர் (அக்., 11), இந்துார் (அக்., 14), ராஜ்காட் (அக்., 18), சென்னை (அக்., 22), மும்பை (அக்., 25) நகரங்களில் நடக்கவுள்ளன. 

நான்கு டெஸ்ட் போட்டிகள் முறையே சண்டிகர் (நவ., 5–9), பெங்களூரு (நவ., 14–18), நாக்பூர் (நவ., 25–29), டில்லி (டிச.,3–7) ஆகிய இடங்களில் நடக்கின்றன.

முதற்கட்டமாக ‘டுவென்டி–20’ மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான வீரர்களை தேர்வு செய்ய, சந்தீப் பாட்டீல் தலைமையில் பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு கமிட்டி கூட்டம் பெங்களூருவில் நடந்தது. இதன் பின் 15 வீரர்கள் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது. 

குர்கீரத் சிங் வாய்ப்பு:

ஒரு நாள் மற்றும் ‘டுவென்டி–20’ அணியை வழக்கம்போல, தோனி வழிநடத்துகிறார். ஒரு நாள் அணியில், சமீபத்திய வங்கதேச ‘ஏ’ அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட ‘ஆல்–ரவுண்டர்’ குர்கீரத் சிங் வாய்ப்பு பெற்றுள்ளார். மற்றபடி தவான், கோஹ்லி, ரெய்னா, ரகானே, அஷ்வின், அமித் மிஸ்ரா, பின்னி, ராயுடு உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். ‘ஆல்–ரவுண்டர்’ ஜடேஜாவுக்கு இடம் கிடைக்கவில்லை. 

‘டுவென்டி–20’ அணியில் பந்துவீச்சாளர் ஸ்ரீநாத் அரவிந்த் அறிமுக வாய்ப்பு பெற்றுள்ளார். ரெய்னா, ராயுடு, ஹர்பஜன், அக்சர் படேல், மோகித் சர்மா, புவனேஷ்வர், உள்ளிட்டோருக்கும் இடம் கிடைத்துள்ளது. 

ஒரு நாள் அணி: தோனி (கேப்டன்), அஷ்வின், பின்னி, தவான், கோஹ்லி, புவனேஷ்வர், அக்சர் படேல், ரகானே, ரெய்னா, ராயுடு, மோகித் சர்மா, ரோகித், உமேஷ், குர்கீரத் சிங், அமித் மிஸ்ரா. 

‘டுவென்டி–20’ அணி: தோனி (கேப்டன்), அஷ்வின், பின்னி, தவான், கோஹ்லி, புவனேஷ்வர், அக்சர் படேல், ரகானே, ரெய்னா, ராயுடு, மோகித் சர்மா, ரோகித், ஸ்ரீநாத் அரவிந்த், ஹர்பஜன், அமித் மிஸ்ரா

சிங் தான் ‘கிங்’ * இந்தியா ‘ஏ’ அசத்தல் வெற்றி

முதலாவது அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டியில் அசத்திய இந்தியா ‘ஏ’ அணி, வங்கதேச ‘ஏ’ அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ‘ஆல்–ரவுண்டராக’ மிரட்டிய குர்கீரத் சிங்(65 ரன், 5 விக்.,) வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்தார்.

இந்தியா ‘ஏ’, வங்கதேச ‘ஏ’ அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரில் மோதுகின்றன. இதன் முதல் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற வங்கதேச ‘ஏ’ அணி கேப்டன் மோமினுல் ஹக் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

அகர்வால் ஆறுதல்:

இந்தியா ‘ஏ’ அணிக்கு கேப்டன் உன்முக்த் சந்த் (16) ஏமாற்றினார். அடுத்து வந்த மணிஷ் பாண்டே (1), ரெய்னா (16), கேதர் ஜாதவ் (0) நிலைக்கவில்லை. இந்தியா ‘ஏ’ அணி 4 விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்து திணறியது. பொறுப்பாக ஆடிய துவக்க வீரர் மயங்க் அகர்வால் (56) அரைசதம் கடந்தார்.

சாம்சன் அபாரம்:

பின் இணைந்த சஞ்சு சாம்சன், குர்கீரத் சிங் ஜோடி அசத்தியது. வங்கதேச ‘ஏ’ அணி பந்துவீச்சை வெளுத்துவாங்கிய இவர்கள் இருவரும் அரைசதத்தை பதிவு செய்தனர். ஆறாவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்த போது குர்கீரத் சிங் (65) அவுட்டானார். சஞ்சு சாம்சன் (73) நம்பிக்கை தந்தார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ரிஷி தவான் 34 பந்தில் 56 ரன்கள் எடுத்தார்.

இந்தியா ‘ஏ’ அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 322 ரன்கள் குவித்தது. ரிஷி தவான் (56), கரண் சர்மா (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

குர்கீரத் அசத்தல்:

கடின இலக்கை விரட்டிய வங்கதேச ‘ஏ’ அணிக்கு சவுமியா சர்க்கார் (9), தாலுக்தார் (13) ஏமாற்றினர். கேப்டன் மோமினுல் ஹக் (19), சபிர் ரஹ்மான் (25) சோபிக்கவில்லை. பின் குர்கீரத் சிங் ‘சுழலில்’ வங்கதேசம் ‘ஏ’ அணி பேட்ஸ்மேன்கள் தடுமாறினர்.

இவரது பந்துவீச்சில் நாசிர் ஹொசைன் (52), லிட்டன் தாஸ் (75), ருபெல் ஹொசைன் (3), அராபட் சன்னி (6), டஸ்கின் அகமது (0) அவுட்டாகினர். வங்கதேச ‘ஏ’ அணி 42.3 ஓவரில் 226 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. ஷபியுல் இஸ்லாம் (2) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா ‘ஏ’ அணி சார்பில் குர்கீரத் சிங் 5, ஸ்ரீநாத் அரவிந்த் 3, ரிஷி தவான் 2 விக்கெட் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின்மூலம் இந்தியா ‘ஏ’ அணி 1–0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி பெங்களூருவில் நாளை நடக்கிறது.

தோனிக்கு எதிரான வழக்கு - உச்சநீதிமன்றம் தடை

கேப்டன் தோனிக்கு எதிரான வழக்கை விசாரிக்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்திய ஒருநாள், ‘டுவென்டி–20’ அணி கேப்டன் தோனி, 34. கடந்த 2013ல் வெளியான ஆங்கில பத்திரிகை அட்டைப் படத்தில் விஷ்ணு போல சித்தரிக்கப்பட்டு இருந்தார். 

இவரது கைகளில் ‘ஷூ’ உட்பட பல விளம்பர பொருட்கள் இருந்தது சர்ச்சையை கிளப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூகநல ஆர்வலர் ஜெயக்குமார், கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், தோனிக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இதனிடையே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என, தோனி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் பினாகி சந்திரபோஸ், என்.வி.ரமணா அடங்கிய ‘பென்ச்’, தோனிக்கு எதிரான வழக்கை விசாரிக்ககூடாது என தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

தோனியா...கோஹ்லியா - கேப்டன் தேர்வில் புது குழப்பம்

ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு தோனிக்குப் பதில் கோஹ்லியை கேப்டனாக்க திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.    
                     
இந்தியா வரும் தென் ஆப்ரிக்க அணி 3 ‘டுவென்டி–20’, 5 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் என, 72 நாட்கள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.                                                                         
முதலில் ‘டுவென்டி–20’ போட்டிகள் வரும் அக்., 2ல் தரம்சாலா, 5ல் கட்டாக், 8ல் கோல்கட்டாவில் நடக்கின்றன. பின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் நடக்கும். தற்போதைய நிலையில் கடந்த ஆண்டு டெஸ்ட் அரங்கில் இருந்து விடைபெற்ற தோனி, ‘டுவென்டி–20’, ஒருநாள் அணிக்கு கேப்டனாக தொடர்கிறார்.                         

டெஸ்ட் அணி கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட கோஹ்லி, வித்தியாசமான திட்டங்களுடன் இலங்கை மண்ணில் தொடரை வென்று அசத்தினார்.                         
புதிய கோரிக்கை: இதையடுத்து, ‘டுவென்டி–20’, ஒருநாள் அணிக்கும் கோஹ்லியை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதனால், தென் ஆப்ரிக்க தொடரில் ஒருநாள் போட்டி அணிக்கு, தோனியை நீக்கிவிட்டு கோஹ்லியை கேப்டனாக கொண்டு வரலாமா என இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தேர்வாளர்கள் யோசித்து வருகின்றனர்.                         

இதுகுறித்து வெளியான செய்தி:      
                  
கோஹ்லி, ரகானே, அஷ்வின், ரோகித் சர்மா, ஷிகர் தவான் உள்ளிட்டோர் மூன்று வித அணியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதில் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருக்கும் கோஹ்லி, திடீரென தோனி அணியில் விளையாடும் போது சற்று வித்தியாசமான உணர்வைத் தரலாம்.      
                  
விரைவில் முடிவு: இதுகுறித்து கடந்த தேர்வாளர்கள் கூட்டத்திலேயே விவாதிக்கப்பட்டது. அதேநேரம் தோனியை பொறுத்தவரையில் இந்திய அணி கேப்டன்களில் மிகவும் வெற்றிகரமானவராக உள்ளார். கோஹ்லி இப்போது தான் கேப்டனாக அடி எடுத்து வைக்கிறார்.       

உறுதி இல்லை: கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து கேப்டனாக இருந்த போதும், தோனியின் பேட்டிங் திறன் சிறப்பாகத் தான் இருந்தது. இருப்பினும், கிரிக்கெட் வீரர்களைப் பொறுத்தவரையில் எல்லோரும் அணிக்கு வருவதும் போவதுமாகத் தான் இருப்பர். இது கேப்டனாக இருப்பவருக்கும் பொருந்தும்.                        
தோனி, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் தற்போது உள்ளார். டெஸ்டில் இருந்து விலகிய இவர், 2016 உலக கோப்பை தொடருக்குப் பின், தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பாரா என உறுதியாகத் தெரியவில்லை. இதனால் சொந்தமண்ணில் நடக்கவுள்ள தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு, கோஹ்லியை கேப்டனாக்க இது தான் சரியான தருணமாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த மாற்றம் நிகழ்ந்தாலும், 2016 உலக கோப்பை வரை ‘டுவென்டி–20’ அணியின் கேப்டன் பதவி விஷயத்தில் தோனிக்கு எவ்வித சிக்கலும் இருக்காது என்று கூறப்படுகிறது.       

இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

விரைவில் ‘டுவென்டி–20’ அணி       

இந்தியா வரும் தென் ஆப்ரிக்க அணி முதலில் 3 ‘டுவென்டி–20’ போட்டிகளில் விளையாடுகிறது. இதற்குத் தயாராகும் வகையில் செப்., 29ல் பிரசிடென்ட் லெவன் அணியுடன் பயிற்சி போட்டியில் (20 ஓவர்) பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணி, வங்கதேச ‘ஏ’ அணிக்கு எதிரான தொடரின் (செப்., 16, 18 மற்றும் 20) போது செப்., 18ல் தேர்வு செய்யப்படும் எனத் தெரிகிறது. அதே தினத்தில் பயிற்சி ‘டுவென்டி–20’ போட்டிக்காக அணியும் அறிவிக்கப்படவுள்ளது.